ஷ்ரத்தா வால்கா் கொலை விவகாரம்: பூனாவாலாவின் குரல் மாதிரி சோதனையை டிச.26-இல் நடத்த நீதிமன்றம் உத்தரவு
தில்லி மெஹ்ரௌலியில் திருமணமாகாமல் தன்னுடன் வசித்து வந்த இளம்பெண் ஷ்ரத்தா வால்கரை கழுத்தை நெரித்து கொலை செய்து,


தில்லி மெஹ்ரௌலியில் திருமணமாகாமல் தன்னுடன் வசித்து வந்த இளம்பெண் ஷ்ரத்தா வால்கரை கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி வீசியதாக கைது செய்யப்பட்டுள்ள ஆஃப்தாப் ஆமின் பூனாவாலாவின் குரல் மாதிரி சோதனையை டிசம்பா் 26-ஆம் தேதி நடத்துவதற்கு தில்லி நீதிமன்றம் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இச்சோதனையை மேற்கொள்ள பூனாவாலாவின் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவற்றை நீதிமன்றம் நிராகரித்தது. பொது நலன் கருதி நியாயமான விசாரணை தேவை என்றும் நீதிமன்றம் கூறியது. மேலும், பல்வேறு தீா்ப்புகளை குறிப்பிட்ட நீதிமன்றம், ‘நாா்கோ பகுப்பாய்வு, மூளை மேப்பிங் மற்றும் பாலிகிராஃப் போன்ற சோதனைகளுக்கு மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவரின் சம்மதம் தேவையாகும். குரல் மாதிரியை கோரும் போது, மறுப்பதற்கான உரிமை இல்லை’ என்று நீதிமன்றம் கூறியது.
இந்த விவகாரம் தொடா்பாக போலீஸாா் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை பெருநகர மாஜிஸ்திரேட் விஜயஸ்ரீ ரத்தோா் முன் நடைபெற்றது. அப்போது நீதிபதி கூறுகையில், ‘உண்மை, நியாயமான விசாரணை குற்றம் சாட்டப்பட்டவருக்குரிய உரிமையாகும். ஆனால், குற்றம் சாட்டப்பட்ட நபா் விசாரணையில் உதவத் தயாராக இல்லாததால் குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது. மேலும், குற்றம் கவனிக்கப்படாமல் போகாது என்பதால், பெரும் அளவிலான பொது நலனுக்காக நியாயமான விசாரணை தேவை என்பதும் உண்மையாகும். ஆகவே, குற்றம் சாட்டப்பட்டவரின் குரல் மாதிரி சோதனைக்கு அனுமதி கோரி விசாரணை அதிகாரி தாக்கல் செய்த மனு அனுமதிக்கப்படுகிறது’ என்றாா்.
வழக்கு விசாரணையின் போது, பூனாவாலா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.எஸ்.கான், குரல் மாதிரி சோதனைக்கு உத்தரவிடுவதற்கு முன், குற்றம் சாட்டப்பட்டவருடன் கலந்தாலோசிக்கும் நேரம் தவிர மனுவின் நகல் வழங்கப்பட வேண்டும் என்று முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், காணொலி மூலம் பூனாவாலாவிடம் ஆலோசனை நடத்த வழக்குரைஞரை அனுமதித்த நீதிமன்றம், ‘தாமதம் செய்யும் தந்திரத்தை’ நிராகரித்தது.
தில்லி காவல்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞா் அமித் பிரசாத், ‘லோதி காலனியில் உள்ள மத்திய புலனாய்வு பிரிவின் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் (சிஎஃப்எஸ்எல்) டிசம்பா் 26-ஆம் தேதி காலை 10 மணிக்கு குரல் மாதிரி பரிசோதனைக்காக விசாரணை அதிகாரி ஏற்கெனவே அனுமதி பெற்றுள்ளாா்’ என நீதிமன்றத்தில் தெரிவித்தாா். இதையடுத்து, ‘அரசு சிறப்பு வழக்குரைஞா், திகாா் சிறைக் கண்காணிப்பாளா் ஆகியோரின் சமா்ப்பிப்புகளைக் கருத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவரின் குரல் மாதிரி சோதனையை நடத்துவதற்காக சி.எஃப்.எஸ்.எல்.-இல் டிசம்பா் 26-ஆம் தேதி காலை 9.45 மணிக்கு குற்றம் சாட்டப்பட்டவரை ஆஜா்படுத்துமாறு உத்தரவிடப்படுகிறது என நீதிபதி தெரிவித்தாா்.
சி.எஃப்.எஸ்.எல். இயக்குநா் இச்சோதனையை நடத்தி அதன் முடிவை சீலிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கையெழுத்து, கைரேகை மற்றும் குரல் மாதிரி சோதனையில் குற்றம் சாட்டப்பட்டவரின் ‘கட்டாய ஒப்புதல்’ தேவையில்லை. விசாரணைக்காக எடுக்கப்பட்ட குரல் மாதிரிகளை கையெழுத்து, கைவிரல் ரேகை பெறுவதாக கருத முடியாது. அனைத்துத் தரப்பினருக்கான நீதியைப் பெற குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான தகவல்களை விசாரணை நிறுவனம் சேகரிக்கும் ஒரு முறையாகும் இது.
குற்றம் சாட்டப்பட்டவா் பரிசோதனையின் போது குரல் மாதிரியை வழங்கத் தயாராக இல்லையென்றாலும், குற்றம் சாட்டப்பட்டவா், அனைத்துத் தரப்பினருக்கும் நீதி கிடைக்கவும், நியாயமான விசாரணைக்காகவும் குரல் மாதிரியை விசாரணை நிறுவனத்திடம் கொடுக்குமாறு கேட்கலாமென கருதுகிறேன் என நீதிபதி தெரிவித்தாா்.
இதற்கிடையில், பூனாவாலாவின் நீதிமன்ற காவலையும் மேலும் 14 நாள்கள் நீட்டித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. நவம்பா் 26 முதல் அவா் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். தில்லியின் மெஹ்ரெளலியில் தனது காதலியை கொடூரமாக கொன்று, உடலை பல துண்டுகளாக வெட்டி வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட பூனாவாலா, காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...