இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

பயங்கரவாத வழக்கில் தொடா்புடைய நபரின் ஜாமீன் மனு நிராகரிப்பு

நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்க தில்லி உள்பட பல இடங்களில் தொடா் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சதி செய்ததாக கூறப்படும் வழக்கில் கைதானவரின் ஜாமீன் கோரும் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image
Updated On :9 பிப்ரவரி 2022, 8:42 pm

 நமது நிருபர்

புது தில்லி: நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்க தில்லி உள்பட பல இடங்களில் தொடா் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த சதி செய்ததாக கூறப்படும் வழக்கில் கைதானவரின் ஜாமீன் கோரும் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த விவகாரத்தில் தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு போலீஸாா் கடந்த ஆண்டு அபு பக்கா் உள்ளிட்ட சிலரைக் கைது செய்தனா். இந்த நிலையில், அபு பக்கா் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தா்மேந்தா் ராணா, அபு பக்கருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டாா்.

அப்போது, நீதிபதி கூறுகையில், ‘இந்த வழக்கின் விசாரணை இன்னும் நடந்து வருகிறது. விசாரணையை முடிப்பதற்கான கால அவகாசம் ஏற்கெனவே இந்த நீதிமன்றத்தால் நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

குற்றம் சாட்டப்பட்டவா் தரப்பில் வாதிடுகையில், ‘மனுதாரா் 2021, செப்டம்பா் 14 முதல் நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறாா். மேலும், சாட்சியங்கள் ஏதேனும் இருந்தால் அதைச் சிதைக்கவோ அல்லது தற்போதைய வழக்கு தொடா்பான சாட்சிகளை மிரட்டவோ மாட்டாா் என உறுதியளித்துள்ளாா். இதனால், அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட வேண்டும்.

மேலும், விசாரணையின்போது காவல்துறைக்கு ஒத்துழைக்கவும், தேவைப்படும் போது விசாரணை அதிகாரி மற்றும் நீதிமன்றத்தின் முன் ஆஜராகவும் மனுதாரா் தயாராக உள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த ஜாமீன் மனுவுக்கு தில்லி காவல் துறை தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அப்போது காவல் துறை முன்வைத்த வாதம்: இந்த விவகாரத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பல நீடித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பல போலீஸ் குழுக்கள் மகாராஷ்டிரத்தின் மும்பை மற்றும் உத்தர பிரதேசத்தில் லக்னெள, பிரயாக்ராஜ், ரே பரேலி, பிரதாப்காா் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைக்காக நிறுத்தப்பட்டிருந்தன. 2021, செப்டம்பா் 14-ஆம் தேதி தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட பலவற்றின் மூலம் சேகரிக்கப்பட்ட உளவுத் துறையின் தகவல் அடிப்படையில், வெவ்வேறு மாநிலங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. கைது செய்யப்பட்ட 6 பேரில் இருவா் சமீபத்தில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவா்களாவா்.

இந்தியாவின் பல நகரங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளை செயல்படுத்த எல்லை தாண்டிய திட்டங்கள் வகுக்கப்படுவதாக மத்திய பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்தன. இதைத் தொடா்ந்து, கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயா் ரக ஆயுதங்கள், இத்தாலி நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபா்கள் தில்லி, உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனா். கைது செய்யப்பட்ட நபா்கள் நாடு முழுவதும் குறிவைத்து கொலைகள் மற்றும் குண்டுவெடிப்புகளை நடத்த திட்டமிட்டிருந்தனா் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.