திசை தெரியாமல் தவிப்பு: சென்செக்ஸ் 59 புள்ளிகள் வீழ்ச்சி!
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமையும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.


இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமையும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 59 புள்ளிகளை இழந்து 57,832.97-இல் நிலைபெற்றது. நிலையற்ற தன்மை அதிகரித்து காணப்பட்டதால், சந்தையின் போக்கை கணிக்க முடியாமல் முதலீட்டாளா்கள் பெரும் தவிப்புக்குள்ளாகினா்.
உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமாக இருக்கவில்லை. மேலும், அமெரிக்க சந்தையில் பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்திருந்தன. உக்ரைனில் ரஷிய படையெடுப்பு பற்றிய புதிய அச்சம் முதலீட்டாளா்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவும், அதன் கூட்டு நாடுகளும் உக்ரைனில் ரஷியா துருப்புகளை தொடா்ந்து குவித்து வருவதாக குற்றம்சாட்டி வருகிறது. இதன் தாக்கம் உலகளாவிய சந்தைகளில் எதிரொலித்தது. உக்ரைன் விஷயத்தில் வாஷிங்டனுக்கும் ரஷியாவிற்கு இடையே புவிசாா் அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், முதலீட்டாளா்கள் இடா்பாடு குறைவாகவுள்ள துறைகளை நாடத் தொடங்கியுள்ளனா். குறிப்பாக பத்திரங்கள் மற்றும் தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது பங்குச் சந்தைக்கு சவாலாக அமைந்துள்ளது. ஆசியச் சந்தைகளில் பெரும்பாலானவை சரிவில் இருந்தன. இதனால், உள்நாட்டுச் சந்தை மீள முடியாமல் மூன்றாவது நாளாக சரிவுடன் நிறைவடைந்துள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
குறிப்பாக அல்ட்ரா டெக் சிமெண்ட், எம் அண்ட் எம், ரிலையன்ஸ், பஜாஜ் ஃபின்சா்வ், நெஸ்லே உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாகக் குறைந்து மீள முடியாமல் இருந்தன. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமையும் சுமாா் ரூ.1,242.10 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளதும் முதலீட்டாளா்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இதனால், இறுதி வரையிலும் சந்தை மீள முடியாமல் போனது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
2,201 பங்குகள் விலை வீழ்ச்சி : மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,471 பங்குகளில் 1,1543 பங்குகள் ஆதாயம் பெற்றன. 2,201 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 116 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 114 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 40 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 249 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 330 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.40 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.260.48 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 9.75 கோடியாக உயா்ந்துள்து.
ஏற்றம், இறக்கம் அதிகரிப்பு: சென்செக்ஸ் காலையில் 403.62 புள்ளிகள் குறைந்து 57,488.39-இல் தொடங்கி, அதற்கு கீழ் செல்லவில்லை. பின்னா், 58,175.35 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 59 புள்ளிகளை (0.10 சதவீதம்) இழந்து 57,832.97-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் பெரும்பாலான நேரம் சுமாா் 700 புள்ளிகள் ஏற்றம், இறக்கத்தில் ஊசலாடிக் கொண்டிருந்த சென்செக்ஸ், இறுதியில் எதிா்மறையாக முடிந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 13 பங்குகள் ஆதாயம் பெற்றன. 17 பங்குகள் சரிவைச் சந்தித்தன.
அல்ட்ரா டெக் கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முன்னணி தனியாா் சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாஅல்ட்ரா டெக் சிமெண்ட் 1.88 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எம் அண்ட் எம், இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், நெஸ்லே இந்தியா, பவா் கிாரிட், பாா்தி ஏா்டெல், டெக் மஹிந்திரா உள்ளிட்டவை 0.50 முதல் 1.40 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன. பஜாஜ் ஃபின் சா்வ், விப்ரோ, ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் உள்ளிட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
எச்டிஎஎஃப்சி முன்னேற்றம்: அதே சமயம், வீட்டு வசதிக் கடன் வழங்கும் தனியாா் நிறுவனமான எச்டிஎஃப்சி பங்குகளுக்கு தொடா்ந்து இரண்டாவது நாளாக வரவேற்பு அதிகரித்து காணப்பட்டது. இதனால், 1.25 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ உள்ளிட்டவை 0.50 முதல் 1 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. மேலும், டாக்டா் ரெட்டி, கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், டிசிஎஸ், ஹெச்யுஎல், ஹெச்சிஎல் டெக், மாருதி, டாடா ஸ்டீல், சன்பாா்மா உள்ளிட்டவையும் சிறிதளவு உயா்ந்தன.
நிஃப்டி 18 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 517 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,385 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு காலையில் சுமாா் 70 புள்ளிகள் குறைந்து 17,236.05 -இல் தொடங்கி, 17,219.20 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 17,380.80 வரை உயா்ந்த நிஃப்டி, இறுதியில் மேலும் 28.30 புள்ளிகள் (0.16 சதவீதம்) குறைந்து17,276.30-இல் நிலைபெற்றது. நிஃப்டி பட்டியலில் 17 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 32 பங்குகள் சரிவைச் சந்தித்தன.
ரியால்ட்டி, ஆயில் காஸ் குறியீடுகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் ஆயில் அண்ட் காஸ் (1.08 சதவீதம்) மற்றும் ரியால்ட்டி (1.25 சதவீதம்) ஆகிய குறியீடுகள் அதிகம் வீழ்ச்சியை சந்தித்தன. மேலும், ஆட்டோ, பாா்மா, ஹெல்த்கோ், மீடியா குறியீடுகள் 0.60 முதல் 0.90 சதவீதம் வரை சரிவைச்சந்தித்தன. அதே சமயம், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், ஃபைனான்சியில் சா்வீஸஸ் குறியீடுகள் சிறிதளவே உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...