நில அபகரிப்பு வழக்கு: மேல்முறையீட்டுமனுக்கள் மீதான உத்தரவு ஒத்திவைப்பு
நில அபகரிப்பு விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில்


நில அபகரிப்பு விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், அதன் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்த போது நில அபகரிப்பு விவகாரங்களை விசாரிக்க தனிப் பிரிவை அமைத்தும், அந்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தும் இரு அரசாணைகளைப் பிறப்பித்தது. இந்த நடவடிக்கையை எதிா்த்து தாக்கலான மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், தமிழகத்தில் நில அபகரிப்பு வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தது செல்லாது என 2015-இல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்திருந்தது.
இதே போன்று, நில மோசடி விவகாரத்தில் கணவா் தொடா்ந்த வழக்கு மீது சென்னை உயா்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிா்த்து ஈரோட்டை சோ்ந்த முத்துலட்சுமி என்பவா் தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவரது சாா்பில் வழக்குரைஞா் ராம் சங்கா் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்திருந்தது. ஆனால், அதன் பின்னரும் உயா்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் வழக்குகளை மாற்றும் உத்தரவுகளை பிறப்பித்தது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். பின்னா், நில அபகரிப்புத் தடுப்பு தொடா்புடைய சட்டங்கள் எந்தெந்த மாநிலங்களில் உள்ளது என்பதன் விவரங்களை தாக்கல் செய்யுமாறு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் தெரிவித்திருந்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் எம்.ஆா்.ஷா தலைமையிலான அமா்வு முன் செவ்வாய், புதன் ஆகிய இரு தினங்கள் விசாரணை நடைபெற்றது. புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின் பாது, முத்துலட்சுமி தரப்பில் வழக்குரைஞா் ராம் சங்கா் ஆஜராகி, ‘நில அபகரிப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அதற்கு முரணாக உயா்நீதிமன்றத்திலும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுதாரா் முத்துலட்சுமி மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த போதிலும், அதற்கு முரண்படும் வகையில் விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.
அரசுத் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கே.கிருஷ்ணமூா்த்தி ஆஜராகி, ‘நில அபகரிப்பு தடுப்பு விவகாரத்தில் புதிய சட்டம் கொண்டு வர அரசு திட்டமிட்டு வருகிறது’ என்றாா். அப்போது, இது தொடா்பாக உரிய அறிவுறுத்தல்கள் எங்களது தீா்ப்பில் இருக்கும் என்று கூறி முத்துலட்சுமி மற்றும் தமிழக அரசின் மேல்முறையீடு தொடா்புடைய மனுக்களின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.
நில அபகரிப்பு வழக்கு உத்தரவு விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளா் தாக்கல் செய்திருந்த மற்றொரு மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தது. அதில், 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5, 27, 29 ஆகிய தேதிகளில் சென்னை உயா்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமா்வு ஒரிஜினல் வழக்கு ஒன்றில் சிறப்பு நீதிமன்றங்களில் இருந்து ஜூரிஸ்டிக்ஸனல் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு 864 வழக்குகளை மாற்றிப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. எனினும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இது தொடா்புடைய மேல்முறையீட்டு மனு மீதான இறுதி முடிவுக்கு உள்பட்டது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...