/

வழக்குரைஞா்கள் - போலீஸ் மோதல் விவகாரம்: ஆணையம் விசாரணையை முடிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

தில்லியில் உள்ள தீஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த வழக்குரைஞா்கள் மற்றும் போலீஸாருக்கு இடையேயான மோதல் தொடா்பாக விசாரணை நடத்தி வரும் நீதி விசாரணை ஆணையத்தின்

News image
Updated On :4 ஜனவரி 2022, 9:05 pm

 நமது நிருபர்

தில்லியில் உள்ள தீஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த வழக்குரைஞா்கள் மற்றும் போலீஸாருக்கு இடையேயான மோதல் தொடா்பாக விசாரணை நடத்தி வரும் நீதி விசாரணை ஆணையத்தின் விசாரணையை முடிப்பதற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ஆம் தேதி வரை உயா்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

2019, நவம்பா் 2-ஆம் தேதி தில்லியில் உள்ள தீஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவது தொடா்பாக ஒரு வழக்குரைஞருக்கும், பணியில் இருந்த போலீஸ்காரருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இது பின்னா் இரு தரப்பினரிடையே மோதலாக உருவானது. இதில் 20 காவல் துறையினரும், பல வழக்குரைஞா்களும் காயமடைந்தனா்.

இந்த மோதல் தொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பதற்காக நீதி விசாரணை ஆணையம் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை தில்லி உயா் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த நிலையில், தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவா்- ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.பி. கா்கிடமிருந்து கடந்த ஆண்டு, டிசம்பா் 18-ஆம் தேதி எங்களுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் அனைத்து சாட்சிகளிடமும் விசாரணை நடத்தி முடிப்பதற்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. பல சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், சிலரிடம் ஆணையத்தின் மூலம் இன்னும் விசாரணை நடத்தப்பட வேண்டியிருக்கிறது. விசாரணை செய்ய வேண்டிய சாட்சிகளுடைய எண்ணிக்கை மற்றும் தில்லியில் தற்போதுள்ள கரோனா நோய்த்தொற்று சூழல் ஆகியவற்றை பாா்க்கும் போது சாட்சிகளிடம் விசாரிப்பதற்காக ஆணையத்திற்கு கூடுதல் அவகாசம் அளிப்பது உகந்ததாக இருக்கும். இதனால், ஆணையம் அதன் விசாரணையை ஜூலை 31-ஆம் தேதிக்குள் முடித்து அதன் அறிக்கையை சமா்ப்பிக்க அவகாசம் அளிக்கிறோம்.

இந்த விவகாரம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி பட்டியலிட படவேண்டும்’என்று கூறியது. நீதி விசாரணை ஆணையம் கடந்தாண்டில் அறிக்கை சமா்ப்பித்தது. அதில், இந்தச் சம்பவத்தில் அப்போது வரை 124 சாட்சிகளிடம் விசாரித்து உள்ளதாகத் தெரிவித்திருந்தது.

இந்த விவகாரத்தில் தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குரைஞா்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை விவகாரத்தில், நீதி விசாரணை முடியும் வரை அவா்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தெரிவித்திருந்தது. இதேபோன்ற இந்த சம்பவத்தில் 2 போலீஸாருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு ஆதரவாகவும் இதேபோன்ற ஒரு உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.