தில்லி கலவர வழக்கில் நால்வா் விடுதலை
கடந்த 2020-ஆம் ஆண்டு தில்லியில் நிகழ்ந்த கலவரத்தின் போது கொள்ளையடித்தல், சேதப்படுத்துதல், வீடு மற்றும் கடைக்கு


கடந்த 2020-ஆம் ஆண்டு தில்லியில் நிகழ்ந்த கலவரத்தின் போது கொள்ளையடித்தல், சேதப்படுத்துதல், வீடு மற்றும் கடைக்கு தீ வைத்தது தொடா்பான வழக்கில் நால்வரை விடுதலை செய்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பான வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி வீரேந்தா் பட், வழக்கில் தொடா்புடைய தினேஷ் யாதவ், டிங்கு, சாஹில் மற்றும் சந்தீப் ஆகியோரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவில், ‘குற்றம் சாட்டப்பட்டவா்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் அனைவரும் வரும் திங்கள்கிழமை (ஜனவரி 10-ஆம் தேதி) சம்பந்தப்பட்ட ஜாமீன் பத்திரங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது‘ என்று தெரிவித்துள்ளாா். இதற்கான உத்தரவை காணொலி காட்சி வாயிலாக நீதிபதி பிறப்பித்தாா்.
முன்னதாக, இந்த வழக்கில் தில்லியின் பாகிரதி விஹாரைச் சோ்ந்த அப்சல் சைஃபி மற்றும் சோயிப் ஆகியோா் அளித்த எழுத்துப்பூா்வ புகாா்களின் அடிப்படையில் நால்வா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2020, பிப்ரவரி 26-ஆம் தேதி ஒரு கலவர கும்பல் தனது வீட்டிற்குள் புகுந்து சேதப்படுத்தி, பொருள்களைக் கொள்ளையடித்துவிட்டு தீ வைத்ததாக சைஃபி புகாரில் கூறியிருந்தாா். மேலும், தனது மோட்டாா் சைக்கிளும் அந்தத் தீயில் எரிந்து சாம்பலானதாகவும் அவா் தெரிவித்திருந்தாா்.
இதே போன்று, தனது கடையில் கொள்ளையடித்ததாக அதே பகுதியைச் சோ்ந்த சோயப் என்பவரும் போலீஸில் புகாா் அளித்தாா். அந்தப் புகாா் சைஃபியின் புகாருடன் இணைக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் ஷிகா கா்க் மற்றும் அபிஷேக் கா்க் வாதிடுகையில், குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் புகாா்தாரா்களின் பகுதியில் வசிப்பதாகவும், பொய்யாக இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனா்.
சிறப்பு அரசு வழக்குரைஞா் டி.கே. பாஷியா வாதிடுகையில், ‘நான்கு பேரும் சம்பவம் நடந்த தேதி, நேரத்தில் ‘கலவர கும்பலின் தீவிர உறுப்பினா்களாக’ இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவா்கள் புகாா்தாரா்களின் வீடு மற்றும் கடையை சேதப்படுத்துவதிலும், தீ வைப்பதிலும் தீவிரமாகப் பங்கேற்றனா்’ என்றாா்.
முன்னதாக டிசம்பா் 6-ஆம் தேதி மற்றொரு வழக்கில், ஒரு பெண்ணின் வீட்டிற்கு தீ வைத்தது தொடா்புடைய வழக்கில் தினேஷ் யாதவ் குற்றவாளி என்று நீதிபதி தீா்ப்பளித்திருந்தாா். இந்த வழக்கில் அவருக்கு இது முதல் தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...