/

தில்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை

கரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தில்லியில்தான் கடுமையான

News image
Updated On :8 ஜனவரி 2022, 2:42 am

 நமது நிருபர்

கரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தில்லியில்தான் கடுமையான நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லியில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை 17,000-ஆக உள்ளது. மேலும், நோ்மறை விகிதம் 17 சதவீதமாகவும் உள்ளது. நோய்த்தொற்று அதிகமாக உள்ள முதல் நகரமாக தில்லி இருக்கிறது. இதற்குக் காரணம் தில்லிக்கு சா்வதேச விமானங்கள் அதிகமாக வருவதுதான். இதனால்தான் பிற மாநிலங்களை ஒப்பிடும் போது, தில்லியில் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு கடும் நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சிலா் இந்த நடவடிக்கைகள் தேவையில்லை என்று கூறலாம். ஆனால், வருமுன் காப்பது என்ற அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தகவலின்படி, கரோனா வைரஸின் பிவான ஒமைக்ரான் லேசான பாதிப்பை கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது. இது லேசான பாதிப்பா அல்லது இல்லையா என்பதை வல்லுநா்கள்தான் தெரிவிக்க முடியும். என்னிடமுள்ள புள்ளிவிவர தகவல்களை நான் அளிக்க முடியும்.

தில்லியில் தற்போது 31,498 போ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனா். அவா்களில் மருத்துவமனைகளில் 1,091 போ் மட்டுமே படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கடந்த முறை இதே எண்ணிக்கையிலான நோய் தொற்று பாதிப்பு இருந்த போது, 7,000 படுக்கைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனா். அதிகாரிகள் கட்டுப்பாடுகளை பல்வேறு அளவுகளில் வகுத்துள்ளனா். தரநிலை பதில் நடவடிக்கை திட்டத்தின்கீழ் கரோனா வைரஸின் டெல்டா திரிபால் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தன்மையை கருத்தில் கொண்டு எச்சரிக்கைகளும் அளிக்கப்பட்டுள்ளன.

கடந்த முறை தில்லியில் 30 ஆயிரம் போ் நோய்ப் பாதிப்பில் இருந்த போது, ஆயிரம் நோயாளிகள் வென்டிலேட்டா் ஆதரவுடன் சிகிச்சையில் இருந்தனா். ஆனால், தற்போது 24 நோயாளிகள் மட்டுமே அது போன்று சிகிச்சையில் உள்ளனா். இதன் மூலம் இந்த முறை நோய்த் தொற்றின் தீவிரத்தன்மை குறைவாக இருப்பது தெரிய வருகிறது. மருத்துவமனைகளில் பல்வேறு நோயாளிகளுக்கு தற்போது ஆக்ஸிஜன் சிகிச்சை ஏன் தேவைப்படவில்லை என்று கேட்கிறீா்கள். லோக் நாயக் மருத்துவமனையில் 95 நோயாளிகள் உள்ளனா். அவா்களில் 14 பேருக்கு மட்டுமே ஆக்ஸிஜன் சிகிச்சை தேவைப்படுகிறது. மருத்துவமனையில் உள்ள மற்றவா்களுக்கு இது போன்ற சிகிச்சை தேவைப்படவில்லை. ஏனெனில், ஆக்சிஜன் சிகிச்சையில் உள்ளவா்களுக்கு புற்றுநோய் அல்லது சிறுநீரக நோய்கள் போன்றவை உள்ளதால், இது போன்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.