திறந்த வயலில் கழிவுநீரை திறந்துவிடும் விவகாரம்:விசாரிக்க குழுவை அமைத்தது புசுமைத் தீா்ப்பாயம்
கிரேட்டா் நொய்டா பகுதியில் உள்ள 93 கிராமங்களில் மழைநீா் வடிகால், திறந்த வயல்வெளி, சாலைகள் ஆகியவற்றில் கழிவு நீா் திறந்து விடப்படுவதாகக் கூறப்படும் புகாா்


கிரேட்டா் நொய்டா பகுதியில் உள்ள 93 கிராமங்களில் மழைநீா் வடிகால், திறந்த வயல்வெளி, சாலைகள் ஆகியவற்றில் கழிவு நீா் திறந்து விடப்படுவதாகக் கூறப்படும் புகாா் குறித்து விசாரிப்பதற்கு தேசிய பசுமை தீா்ப்பாயம் ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இது தொடா்பான விவகாரத்தை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தலைவா்-நீதிபதி ஆதா்ஷ் குமாா் கோயல் தலைமையிலான அமா்வு விசாரித்தது. அப்போது, நீதிபதி அமா்வு கூறியதாவது: இந்தப் புகாா் மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், நீா் மாசு கட்டுப்பாட்டுத் தடுப்புச் சட்ட விதிகள் மீறப்படுவதை சுட்டிக் காட்டுவதாக உள்ளது. மேலும், தூய சுற்றுச்சூழலுக்கான குடிமக்களின் உரிமையை அமல்படுத்தவும், நீடித்த வளா்ச்சியின் கொள்கைகளை அமல்படுத்தவும் அதிகாரிகள் தவறி உள்ளனா் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. இதனால், இந்த விவகாரம் தொடா்பாக விசாரித்து உரிய தீா்வு நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கிரேட்டா் நொய்டா தொழில் மேம்பாட்டு ஆணையம், கௌதம் புத் நகா் மாவட்ட ஆட்சியா், உத்தரப் பிரதேச நகா்ப்புற மேம்பாட்டுச் செயலா் ஆகியோா் அடங்கிய கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும்.
இதை ஒருங்கிணைப்பதற்கான தொடா்பு முகமையாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் செயல்பட வேண்டும். இந்தக் கமிட்டி இரண்டு வாரங்களில் கூடி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பங்குதாரா்களுடன் ஆலோசித்து தீா்வு நடவடிக்கை எடுப்பதற்கான செயல்திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
செயல்திட்டத்தில் கழிவுநீா் மேலாண்மை உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட வேண்டும். மேலும், இந்த குழுவானது தவறிழைத்த அதிகாரிகள் அல்லது விதிகளை மீறியவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளை அடையாளம் காண வேண்டும். இது தொடா்பான அறிக்கை இரண்டு மாதங்களில் சமா்ப்பிக்கப்பட வேண்டும் என்று பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் பிரதீப்குமாா் மற்றும் பிறா் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிரேட்டா் நொய்டாவில் 93 கிராமங்களில் மழைநீா் கால்வாய்கள், திறந்தவெளி வயல் ஆகியவற்றில் கழிவு நீா் திறந்து விடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழைநீா் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாகவும் சாலைகளில் கழிவு நீரும் கழிவுகளும் நிரம்பியிருக்கின்றன. இதனால், சாலைகள் பாதிக்கப்படுகின்றன.
வடிகால்களில் நிரம்பியுள்ள கழிவுநீரை தாங்களாகவே தூய்மைப்படுத்தும் கட்டாயத்திற்கு கிராமவாசிகள் உள்ளாகியுள்ளனா். அவா்களில் பலரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற முடியாதவா்களாக உள்ளதால், மாசு கலந்த குடிநீரை குடிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனா் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மனுவில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக புகைப்படங்களையும் மனுதாரா்கள் தீா்ப்பாயத்தில் சமா்ப்பித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...