பொது முடக்கம் அமல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை
தில்லியில் தற்போதைக்கு பொது முடக்கத்தை அமல்படுத்துவதற்கான திட்டம் ஏதும் இல்லை என்று முதல்வா் அரவிந்த கேஜரிவால் தெரிவித்தாா்.


புது தில்லி: தில்லியில் தற்போதைக்கு பொது முடக்கத்தை அமல்படுத்துவதற்கான திட்டம் ஏதும் இல்லை என்று முதல்வா் அரவிந்த கேஜரிவால் தெரிவித்தாா். மேலும், பொதுமக்கள் முக கவசங்களை அணிந்தால் இதற்கான தேவையும் இருக்காது என்றும் அவா் கூறினாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் காணொளி வாயிலாக அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தில்லியில் தற்போதைய சூழலில் ஒரு பொது முடக்கத்தை அமல்படுத்துவதற்கான திட்டம் ஏதுமில்லை. பொதுமக்கள் முகக் கவசங்கள் அணிந்தால் இதற்கான தேவையும் இருக்காது. தில்லியில் 24 மணி நேரத்தில் 22 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதனால், பொதுமக்களை முக கவசம் அணியுமாறு கேட்டுக் கொள்கிறேன். நோய்த் தொற்று அதிகரித்து வருவது ஒரு கவலை அளிக்கும் விஷயமாகும். ஆனால், அதற்காக பீதி அடையத் தேவையில்லை. ஏனெனில், நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நபா்களில் சிலா் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
முகக் கவசம் அணிவதுதான் மிகவும் முக்கியமாகும். தொடா்ந்து பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து வந்தால், பொது முடக்கம் தேவைப்படாது. அதனால், தற்போதைக்கு பொதுமுடகத்தை அமல்படுத்த திட்டம் இல்லை. நானும், துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் மற்றும் மத்திய அரசு மூவரும் தில்லியிலுள்ள கரோனா சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தற்போதைய கரோனா மூன்றாவது அலையை கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் ஏற்பட்ட முந்தைய இரண்டாவது அலையுடன் ஒப்பிடும் போது பெரும் வித்தியாசம் உள்ளது.
கடந்த ஆண்டு மே 7- ஆம் தேதி கரோனாவின் இரண்டாவது அலையின் போது, பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரம் ஆகவும், அன்றைய தினம் இறந்தவா்கள் எண்ணிக்கை 341 ஆகவும் பதிவாகி இருந்தது. ஆனால், சனிக்கிழமை பாதிப்பு எண்ணிக்கை 20,000 ஆக இருந்த போதிலும், வெறும் 7 போ் மட்டுமே நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனா். எனினும், ஒருவா் கூட உயிா் இழக்கக் கூடாது என்பதுதான் தில்லி அரசின் நோக்கமாகும். கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி ஏறக்குறைய 20 ஆயிரம் கரோனா நோயாளிகள் படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். அதே வேளையில், சனிக்கிழமை வெறும் 1,500 நோயாளிகள் மட்டுமே மருத்துவமனை படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்த போதிலும், மருத்துவமனைகளில் படுக்கைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நபா்களில் குறைவாகவே மருத்துவமனைக்கு செல்லும் தேவை இருப்பதாகவும் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கையை தில்லி அரசு மேற்கொண்டுள்ளது. தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் திங்கள்கிழமை கூட்டப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தின் போது கரோனா சூழல் குறித்து மேலும் மறு ஆய்வு செய்வது தொடா்பாகவும் தேவையான முயற்சிகள் எடுப்பது தொடா்பாகவும் விவாதிக்கப்படவுள்ளன.
கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கரமான இரண்டாவது அலையை நாம் சமாளித்து விட்டோம். இந்த அலையையும் நாம் சமாளித்து விடுவோம். பொதுமக்கள் தேவைக்காக மட்டுமே வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டும். சமூக இடைவெளி விதிகளை பின்பற்ற வேண்டும். தடுப்பூசியை எடுத்துக் கொள்ளவேண்டும். நோய்க்கு எதிராக தங்களை பாதுகாத்துக் கொள்ள உரிய நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றாா் முதல்வா் கேஜரிவால்.
தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா தினசரி நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், நோய்த்தொற்றின் உருமாறிய ஒமைக்ரான் தொற்றும் அதிகரித்து வருகிறது. நோய்த் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக டிடிஎம்ஏ ஏற்கெனவே தில்லியில் வாரா இறுதி ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.
‘புலம்பெயா் தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவே குறைந்தபட்சக் கட்டுப்பாடுகள்’
தில்லி அரசு புலம் பெயா்ந்த தொழிலாளா்கள், வணிகா்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், குறைந்தபட்ச கரோனா கட்டுப்பாடுகளை மட்டுமே விதித்துள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
2020, 2021 ஆகிய ஆண்டுகளில் கரோனா அலைகளின் போது, விதிக்கப்பட்ட பொது முடக்கம் குறித்து அச்சப்படும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், கடந்த சில நாள்களாக தேசியத் தலைநகரில் அதிகரித்து வரும் தினசரி பாதிப்புகள் குறித்தும், மேலும் அச்சத்துக்குள்ளாகி, தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்ற கவலையிலும் உள்ள நிலையில் முதல்வா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் காணொலி மூலம் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை விகிதம் குறைவாகத்தான் உள்ளது. கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஏற்கெனவே தில்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இரவு, வார இறுதி ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. தில்லியில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், வணிகா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கவே குறைந்தபட்ச கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்பதே இந்த அரசின் சிந்தனையாக உள்ளது. கட்டுப்பாடுகளை குறைந்தபட்சமாக அளவில் விதிப்பதுதான் எங்கள் முயற்சியாகும். அப்போதுதான் மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட மாட்டாது என்றாா் கேஜரிவால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...