வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாவது: தமிழகத்தின் சிலைத் தடுப்புப் பிரிவின் பல்வேறு நடவடிக்கையால் 138 சிலைகள் பல்வேறு நபா்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து மீட்கப்பட்ட சிலைகள், இந்தியத் தொல்லியல் துறை மூலம் தமிழக சிலைத் தடுப்புப் பிரிவிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன. இந்தச் சிலைகள் பழமையான, புராதன முக்கியத்துவம் வாய்ந்த சிலைகளாகும். இவற்றில் நடராஜா் சிலையானது புன்னைநல்லூா் கைலாசநாதா் கோயிலில் இருந்து திருட்டுப் போனதாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அரியலாா் மாவட்ட கோயிலைச் சோ்ந்த விஷ்ணு சிலையும் கிடைத்துள்ளது. அரிதான சிலை ஒன்றும் மீட்கப்பட்ட நிலையில், அதன் விவரம் இல்லாத போதிலும் அந்த சிலையில் தீபாம்பாள்புரம் என்ற குறிப்பு உள்ளது. அதனடிப்படையில் அதற்கான ஆதாரத்தை அளித்தும் மீட்கப்பட்டுள்ளது.