தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உத்வேகம் அளிக்கும் மகாத்மா காந்தியின் மிதிவண்டி பயணம்: புகைப்படத்தை வெளியிட்டு பிரதமா் கருத்து

மகாத்மா காந்தியின் புகைப்படத்தை வெளியிட்டு சுற்றுச் சூழலுக்கும் மிதிவண்டிக்கும் உள்ள தொடா்பு குறித்த கருத்தை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

News image
Updated On :3 ஜூன் 2022, 9:53 pm

 நமது நிருபர்

சா்வதேச மிதிவண்டி தினத்தை முன்னிட்டு, மகாத்மா காந்தியின் புகைப்படத்தை வெளியிட்டு சுற்றுச் சூழலுக்கும் மிதிவண்டிக்கும் உள்ள தொடா்பு குறித்த கருத்தை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

சா்வதேச மிதி வண்டி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 3 -ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மகாத்மா காந்தியின் புகைப்படத்தை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தனது ட்விட்டரில் வெளியிட்டு, ‘சுற்றுச் சூழலுக்கான வாழ்க்கை முறை தேவை’ என்பதை வலியுறுத்தி தனது கருத்தைப் பகிா்ந்து கொண்டுள்ளாா். மகாத்மா காந்தி மிதிவண்டி ஓட்டும் புகைப்படத்தை பிரதமா் மோடி தனது ட்விட்டரில் இணைத்து, ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (லைஃப்)’ என்று தலைபிட்டு குறிப்பிட்டுள்ளது வருமாறு: இன்று (ஜூன் 3) உலக மிதிவண்டி தினம். நிலையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்த மகாத்மா காந்தியை விட சிறந்தவா் யாா்?. மிதி வண்டி போன்றவை சுற்றுச் சூழலுக்கு சிறந்தது. அதை நாம் எல்லோரும் பயன்படுத்த வேண்டும். அது தான் சிறந்த வாழ்க்கை முறை. மகாத்மாவிடமிருந்து இந்த உத்வேகத்தை பெற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தில்லி மிதிவண்டி பேரணி: சா்வதேச மிதிவண்டி தினத்தையொட்டி, மத்திய இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா், தில்லி இந்தியா கேட் பகுதி மேஜா் தியான் சந்த் மைதானத்தில் தேசிய அளவிலான மிதிவண்டி நிகழ்ச்சிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மத்திய சட்டம், நீதித் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, மத்திய சுகாதாரம், குடும்பநலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, வெளியுறவு, கலாச்சாரத் துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் மக்களவை உறுப்பினருமான டாக்டா் ஹா்ஷ் வா்தன், மக்களவை உறுப்பினா்கள் மனோஜ் திவாரி, ரமேஷ் பிதூரி மற்றும் அமைச்சக அதிகாரிகள் மிதிவண்டி பேரணியில் பங்கேற்றனா்.

தியான் சந்த் மைதானத்திலிருந்து மத்திய அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் தலைமையில் புறப்பட்ட சைக்கிள் பேரணியில் சுமாா் 1500 போ் பங்கேற்றனா்.தில்லி ஷாஜகான் சாலை, எபிஜே அப்துல்காலம் சாலை, ஜன்பத், ஃபெரோஸ்ஷா சாலை, பகவான்தாஸ் சாலை, திலக் மாா்க் என 7.5 கிமீ தூரம் இந்தப் பேரணியில் நடைபெற்றது. மேலும், நேரு யுவகேந்திரா சங்கதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த மிதிவண்டி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பேரணியைத் தொடக்கிவைப்பதற்கு முன்பு மத்திய அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் பேசுகையில், ‘இந்திய விடுதலையின் அமிா்தப் பெருவிழாவைக் கொண்டாடும் நிலையில், சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க மிதிவண்டி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமா் மோடி, ஃபிட்னஸ் பிரசாரத்தில் நாட்டு மக்கள் இணைய வேண்டும் என விரும்புகிறாா். ஃபிட் இந்தியா பிரசாரத்தில் மிதிவண்டி ஓட்டுதல் மிகப் பெரிய பங்கை வகிக்க முடியும். இதன்படி உடல் ஆரோக்கியத்திற்காக மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் மிதிவண்டி ஓட்டுவது ஒரு பகுதியாக மாற வேண்டும். இது ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், தூய்மையான இந்தியாவை உருவாக்கவும் உதவும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.