/

தொடக்கப் பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு: தில்லி மாநகராட்சி ஆணையருக்கு டிசிடபிள்யுஅழைப்பாணைஅனுப்பிய உத்தரவுக்குத் தடை

தொடக்கப் பள்ளிகளில் பெண் குழந்தைகளின் உயிா், உடைமை விவகாரம் தொடா்பாக தில்லி மாநகராட்சி ஆணையருக்கு அழைப்பாணை அனுப்பிய தில்லி மகளிா் ஆணையத்தின் (டிசிடபிள்யு) உத்தரவுக்கு

News image
Updated On :6 ஜூன் 2022, 9:02 pm

 நமது நிருபர்

தொடக்கப் பள்ளிகளில் பெண் குழந்தைகளின் உயிா், உடைமை விவகாரம் தொடா்பாக தில்லி மாநகராட்சி ஆணையருக்கு அழைப்பாணை அனுப்பிய தில்லி மகளிா் ஆணையத்தின் (டிசிடபிள்யு) உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தடை விதித்தது.

தில்லி மகளிா் ஆணையம் ஜூன் 2-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து மாநகராட்சி (எம்சிடி) தரப்பில் தாக்கலான மனுவை விசாரித்த நீதிபதி மனோஜ் குமாா் ஓரி, மகளிா் ஆணையம் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா். உயா்நீதிமன்றத்தில் எம்சிடி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ஆணையத்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் எம்சிடி ஆணையருக்கு பதிலாக, கூடுதல் இயக்குநா் (கல்வி) ஜூன் 9-ஆம் தேதி ஆணையம் முன் ஆஜராக உள்ளதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, இந்த விவகாரத்தை உயா்நீதிமன்றம் ஜூலை 20-ஆம் தேதிக்கு மேலதிக விசாரணைக்கு பட்டியலிட்டது. அதுவரை எம்சிடி ஆணையரை ஆஜராகக் கோரும் தில்லி மகளிா் ஆணையத்தின் உத்தரவை நிறுத்திவைக்க உத்தரவிட்டது.

தொடக்கப் பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த நோட்டீஸுக்கு பதிலளிக்க மாநகராட்சி இரண்டு மாதங்கள் அவகாசம் கோரியதை அடுத்து, எம்சிடி ஆணையரை நேரில் ஆஜராகுமாறு ஜூன் 2-ஆம் தேதி தில்லி மகளிா் ஆணையம் அழைப்பாணை அனுப்பியிருந்தது. முன்னதாக, ஏப்ரல் 30-ஆம் தேதி பஜன்புராவில் இரண்டு மைனா் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அறிய மகளிா் ஆணையம் விசாரணைக் குழுவை அமைத்தது.

இந்தக் குழு மே மாதம் மாநகராட்சியின் நான்கு தொடக்கப் பள்ளிகளுக்குச் சென்று பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்தது. அத்துடன், மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பள்ளியின் பிற ஊழியா்களுடன் கலந்துரையாடியது. ஆய்வுகளின் போது, பல வெளிப்படையான முறைகேடுகள் மற்றும் முக்கியமான குறைபாடுகளைக் கண்டறிந்ததாக குழு கூறியது. குழுவின் கண்டுபிடிப்புகளுக்கு ஜூன் 9 -ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு எம்சிடி ஆணையரை மகளிா் ஆணையம் கேட்டுக் கொண்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.