/

திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? வெற்றியை தீர்மானிப்பது யார்?

திருச்சி கிழக்கு தொகுதி தவெக தலைவர் விஜய்க்கு சாதகமாக இருக்குமா, மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார் என்பது பற்றி..

News image

தவெக தலைவர் விஜய்

file photo

Updated On :31 மார்ச் 2026, 12:39 pm

இணையதளச் செய்திப் பிரிவு

திருச்சி: முதல்வர் வேட்பாளர் போட்டியிடும் தொகுதி என்றாலே அதற்கு தனி கவனிப்புதான். அந்த வகையில், தவெக தலைவர் விஜய் போட்டியிடுவதால் இந்த முறை திருச்சி கிழக்கு தொகுதியும் நட்சத்திர தகுதியை பெற்றிருக்கிறது.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவா் இனிகோ இருதயராஜ் இங்கு திமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். ஏனெனில், திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள கிறிஸ்தவ மற்றும் வெள்ளாளர் சமுதாய மக்களின் வாக்குகளை பெறும் நோக்கில் திமுக இந்த திட்டத்தைத் தீட்டியது. அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் ஜி. ராஜசேகரன் இந்து வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

ஆனால், திருச்சி கிழக்குத் தொகுதி வரலாற்றில், அங்குள்ள சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளரே தோற்கடிக்கப்பட்டதும், எந்த சமுதாயத்தையும் சேராதவர் வெற்றி பெற்றதும் பதிவாகியிருக்கிறது. விஜய் கிறிஸ்தவர் என்பதால், அந்த சமுதாய மக்களின் வாக்குகளும் வெற்றியை தீர்மானிப்பதாக இருக்கலாம். இவர்கள் தவிர, முக்குலத்தோர் உள்ளிட்ட சிறுபான்மையின சமுதாய மக்களின் வாக்குகளும் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள், உள்ளூர் மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள். விஜய் இந்த தொகுதியில் வெற்றி பெற்றாலும் தொகுதியில் தங்கியிருப்பாரா என்பது அப்பகுதி மக்களின் சந்தேகமாக இருக்கும். தங்கள் ஊரில் இருந்து தங்களுக்கென உழைக்கும் ஒருவரை தேர்வு செய்யலாமே என்றும் மக்கள் நினைக்கலாம். இது ஒன்று விஜய்க்கு சவாலாக இருக்கலாம்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற 2011ஆம் ஆண்டு தேர்தலுகுப் பிறகு, திருச்சி, முதல் முறையாக முதல்வர் வேட்பாளரைக் காண்கிறது. கணிக்க முடியாத, மும்முனைப் போட்டியை திருச்சி கிழக்கு எதிர்நோக்கியிருக்கிறது. இங்கு திமுக, அதிமுக, தவெக என மூன்று கட்சிகளும் வேட்பாளர்களை களமிறக்கியிருக்கிறது.

மாநகராட்சியின் 8 முதல் 26 வாா்டுகள் வரை, 33, 34, 35-ஆவது வாா்டுகள் மற்றும் 37, 38, 43 என மொத்தம் 25 வாா்டுகளை கொண்ட இந்தத் தொகுதியில் கிறிஸ்தவ வெள்ளாளா்கள், பட்டியலின சமூகத்தினா், இஸ்லாமியா்கள், யாதவா்கள், பிள்ளைமாா் என பல்வேறு சமூகத்தினரின் கணிசமான வாக்கு வங்கிகளை கொண்ட தொகுதியாக அமைந்துள்ளது.

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாா் கோயில், நத்தா்ஷா பள்ளிவாசல், செயின்ட் ஜோசப் சா்ச் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நாள்தோறும் லட்சக்கணக்கானோா் வந்து செல்லும் சத்திரம் பேருந்து நிலையம், காந்தி சந்தை, பெரியகடைவீதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (என்.எஸ்.பி.) சாலை உள்ளிட்டவை இந்தத் தொகுதியில்தான் இடம்பெற்றுள்ளன.

கடந்த 1952-ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் திமுக (உதயசூரியன்) 9 முறை, அதிமுக 5 முறை வெற்றி பெற்றுள்ளன. 1952-இல் காங்கிரஸ் வேட்பாளா் இராமசாமி, 1957-இல் சுயேச்சை வேட்பாளா் இ.பி. மதுரம் ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

திருச்சி கிழக்கு தொகுதி திமுகவின் கோட்டையாக விளங்கியது. 1984, 1989-இல் மலா்மன்னன், 1996, 2001-இல் பரணிக்குமாா், 2006-இல் அன்பில் பெரியசாமி ஆகியோா் வெற்றி பெற்றனா். இடையில் 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அதிமுக வேட்பாளர் ஆரோக்கியசாமி வெற்றி பெற்றாா். கடந்த 2011-ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுக வேட்பாளர் ஆா். மனோகரன் வெற்றி பெற்று, அரசுக் கொறடாவாக பதவி பெற்றார். பின்னா், 2016-இல் இத் தொகுதி அதிமுக ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த வெல்லமண்டி என். நடராஜன் வசம் சென்றது. 2011, 2016 என அடுத்தடுத்து 2 முறை வெற்றிக்கனியை பறித்த அதிமுக, 2021-இல் தோல்வியைத் தழுவியது.

திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவா் இனிகோ இருதயராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். தொகுதிக்கு இறக்குமதி செய்யப்பட்டவா் என்றாலும் திமுக மற்றும் கூட்டணி பலத்தால் வெற்றி பெற்றாா். மீண்டும் திமுக இவருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால், இவருக்கு எதிராக அங்கு ஒரு அதிருப்தி நிலவுவதாகவும் கூறப்படுகிறது. இந்த அதிருப்தி விஜய்க்கு சாதகமாக மாறலாம். ஆனால், திருச்சி கிழக்கு வேட்பாளர்களுக்கு சாதகமான தொகுதி இல்லை, சவாலான தொகுதி என்பதே இதுவரை கணிக்கப்பட்ட முடிவு.

Summary

Will the Trichy East constituency be in favor of Thaweka leader Vijay, and who will decide the outcome of the three-way contest?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.