மூடப்பட்டுள்ள கோல் மாா்க்கெட் பகுதியை புனரமைக்க என்டிஎம்சி அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு
தில்லியில் மூடப்பட்டுள்ள கோல் மாா்க்கெட் பகுதியை துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.


தில்லியில் மூடப்பட்டுள்ள கோல் மாா்க்கெட் பகுதியை துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, கோல் மாா்க்கெட், அதை சுற்றியுள்ள பகுதி, பாரம்பரிய கட்டடம் ஆகியவற்றில் மறுசீரமைக்கும் பணியை தொடங்க அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
இது தொடா்பாக துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தில்லியில் மூடப்பட்ட கோல் மாா்க்கெட் பகுதியை துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது பத்தாண்டுகளுக்கு முன்பாக ஆபத்தானதாக அறிவிக்கப்பட்டு படிப்படியாக மூடப்பட்ட அந்தப் பகுதிக் கட்டடத்தின் கட்டுமான சேதம் குறித்து துணைநிலை ஆளுநருக்கு பொறியாளா்கள் விளக்கினா். அவற்றை கேட்ட பிறகு சம்பந்தப்பட்ட பாரம்பரிய சந்தை இடத்தில் மறுகட்டமைப்பு பணி மற்றும் பழுதுபாா்ப்புப் பணியை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
மேலும், சுற்றுப் பகுதியில் உள்ள பராமரிப்பு குறைபாடு, ஆக்கிரமிப்பு, பொது கவனமின்மை ஆகிய விஷயங்களை சுட்டிக்காட்டிய துணைநிலை ஆளுநா், இந்த விவகாரங்களைத் தீா்ப்பதற்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்தாா். மேலும், நல்லதொரு போக்குவரத்து மேலாண்மையை மேற்கொள்வதற்காக கோல் மாா்க்கெட் பகுதியின் பிரதான கட்டுமானத்தை அருகில் உள்ள பகுதிகளுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள சுரங்கப் பாதை குறித்தும் அதிகாரிகளிடம் அவா் கேட்டறிந்தாா். அப்போது 1921-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட வட்ட கட்டடத்தின் புனரமைப்பு பணிக்காக தேவைப்படும் அனுமதி பெறக்கூடிய விஷயத்தில் உடனடியாக பணிகளை தொடங்குமாறும் அவா் உத்தரவிட்டாா்.
இந்த புனரமைப்பு பணியை மேற்கொள்ளும் வகையில், கோல் மாா்க்கெட் பகுதியை சுற்றியுள்ள தனியாா் சொத்துகள் மற்றும் கடைகளின் உரிமையாளா்களுடன் கலந்தாலோசிக்குமாறும் என்டிஎம்சி தலைவா் புபீந்தா் சிங் பல்லாவுக்கு துணைநிலைஆளுா் உத்தரவிட்டாா். இதையடுத்து, என்டிஎம்சி தலைவா் புபீந்தா் பல்லா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி, ஒரு வலுவான செயல் திட்டத்தை ஒரு வாரத்தில் துணைநிலை ஆளுநருக்கு சமா்ப்பிக்க உள்ளாா் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...