ஏற்கெனவே இந்தத் தடை உத்தரவுக்கு எதிராக விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஞானசேகா், கன்னியப்பன், ராஜவேலு உள்பட 9 மீனவா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘தமிழகத்தில் மீனவா்களுக்கு மீன்பிடி தொழில்தான் வாழ்வாதாரமாக உள்ளது. சுருக்கு மடி வலையை மீன் பிடிப்பதற்கு பயன்படுத்துவதால், மீன் குஞ்சுகளின் உற்பத்தி பெருக்கமும், மீன்வளமும் பாதிக்கப்படுவதாகக் கூறி கடலில் மீன்பிடிப்பதற்கு சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் ஒரு மாநில அரசுக்கு 12 நாட்டிக்கல் மைல் மட்டுமே தடை விதிக்கும் அதிகாரம் உள்ளது. அதற்கு அப்பால் உள்ள கடல் பகுதி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. அந்தப் பகுதியில் மத்திய அரசு தடைவிதிக்கவில்லை. ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.