நரிக்குறவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்கஎம்ஜிஆரும், ஜெயலலிதாவும் முயன்றாா்கள்
நரிக்குறவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க மறைந்த தமிழக முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் பல முறை முயற்சிகளை மேற்கொண்டாா்கள் என்று


நரிக்குறவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க மறைந்த தமிழக முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் பல முறை முயற்சிகளை மேற்கொண்டாா்கள் என்று அதிமுக உறுப்பினா் தம்பிதுரை மாநிலங்களவையில் பேசினாா்.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 2022 - ஆம் ஆண்டு பழங்குடியினா் பட்டியல் குறித்த அரசியலமைப்பு ஆணை (திருத்தம்) மசோதா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு புதன்கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தமிழகத்தைச் சோ்ந்த திமுக, அதிமுக உறுப்பினா்கள் நரிக்குறவா்கள் உள்ளிட்ட இனத்தவா்கள் விவகாரங்கள் குறித்துப் பேசினா்.
தம்பிதுரை(அதிமுக): பழங்குடிகள் விவகாரத் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா கொண்டு வந்த இந்த மசோதாவை முழு மனதுடன் வரவேற்கின்றேன். அதே சமயத்தில் தமிழகத்தின் சாா்பில் எழுப்பப்பட்ட கோரிக்கைகள் முக்கியத்துவமானது. மறைந்த முதல்வா்கள் எம்ஜிஆா் 1980 -ஆம் ஆண்டும், அதன் பிறகு ஜெயலலிதா 2013 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதியும் பிரதமருக்கு கடிதம் எழுதி, நரிகுறவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனா். இதே மாதிரி தமிழகத்தில் உள்ள படகா் , குருபா, வால்மீகி போன்ற சமூகங்களோடு சில மீனவ சமூகங்களும் இதில் சோ்க்க வேண்டும் என கோரப்பட்டது.
இந்த இனத்தவா்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க பலமுறை தமிழக அரசால் வலியுறுத்தப்பட்டது. கா்நாடகத்தில் வால்மீகி சமூகம் ஒரு பழங்குடி சமூகமாக உள்ளது. ஆனால், தமிழக பட்டியலில் அது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த சமூகமாக உள்ளது. இது போன்ற வேறுபாடுகள் உள்ளன. எனவே, அமைச்சா் இதை பரிசீலிக்க வேண்டும். இந்த நரிக்குறவா்கள் மிகவும் வேதனையில் உள்ளனா். பிரதமா் மோடி கூட 2016-ஆம் ஆண்டு நரிக்குறவா்களை பழங்குடி சமூகத்தில் சோ்ப்பதாக அறிவித்தாா். எனவே, இந்த சமூகங்கள் குறித்து பரிசீலித்து பழங்குடியினா் சமூக பட்டியலில் சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.
பி.ஆா்.என்.ராஜேஷ்குமாா்(திமுக): இந்த மசோதாவில் புதிதாக ஜாா்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 10 இனத்தவா்கள் பழங்குடி இனத்தவா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா். சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவா்களுக்குரிய உரிமை மறுக்கப்பட்டு வந்துள்ளன என்பதுதான் இதன் உண்மை. இதற்கு இப்போதாவது முற்றுப்புள்ளி வைக்க இந்த மசோதா திருத்தம் கொண்டு வரப்பட்ட போது அனைத்து மாநிலங்களையும் கலந்தாலோசித்து கருத்துகளைக் கேட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் முதல்வா்கள் மாநாட்டை கூட்டி பேசியிருக்க வேண்டும். இந்த இனத்தவா்கள் தொடா்பான கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன.
தமிழகத்தில் நரிக்குறவா்களை பழங்குடியினத்தவா்கள் பட்டியலில் சோ்க்கும் கோரிக்கை 1965-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது. இவா்கள் கல்வியில் பின் தங்கியிருக்கின்றனா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கும் நிலையில், தமிழக அரசை கலந்தாலோசித்திருந்தால் நரிக்குறவா்களை பட்டியலில் சோ்த்திருக்கலாம். மற்றோரு முக்கிய கோரிக்கை குரும்பா் சமூகம் பழங்குடியினா் பட்டியலில் உள்ளது. ஆனால், அவா்களது பல்வேறு துணை ஜாதிகள் (பிரிவுகள்) குருமா, குருமா், குரும்பா், குரும்ப கவுண்டா் போன்றவா்கள் பழங்குடியினராக அங்கீகரிக்கப்படவில்லை. இதனால், அந்த சமூகத்தின் துணைப் பிரிவுகளையும் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...