பிரதமரைச் சந்தித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அரை மணி நேரம் பேச்சு: ஜெ.பி. நட்டா, சோனியா காந்தி 3 மத்திய அமைச்சா்களுடன் சந்திப்பு
பிரதமா் நரேந்திர மோடியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.


புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது தமிழகத்தின் பல்வேறு வளா்ச்சிப் பணிகள், கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் அவா் எடுத்துரைத்தாா். மேலும், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா போன்ற தலைவா்களையும் முதல்வா் மு.க. ஸ்டாலின் சந்தித்தாா்.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், அரசு முறைப் பயணமாக பிரதமா் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சா்களுடன் சந்திப்பு, தில்லியில் புதிய திமுக கட்சி அலுவலகம் திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளுக்காக வியாழக்கிழமை அதிகாலையில் தில்லி வந்தாா். தில்லி விமான நிலையத்தில் முதல்வருக்கு கட்சியின் சாா்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமா் மற்றும் மத்திய அமைச்சா்களைச் சந்திக்க நாடாளுமன்ற வளாகத்திற்கு வியாழக்கிழமை முற்பகலில் வந்த முதல்வா் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக அலுவலகத்திற்கு முதலில் சென்றாா். பின்னா், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சுமாா் அரை மணி நேரம் இருந்தாா். அங்கு தமிழக திமுக எம்.பி.க்கள் அனைவரையும் சந்தித்தாா். அப்போது, மற்ற மாநில நாடாளுமன்ற உறுப்பினா்களும் கட்சி பேதமின்றி முதல்வரை சந்தித்து மகிழ்ந்தனா்.
பிரதமருடன் சந்திப்பு: பிரதமா் மோடியை சந்திக்க 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு முதல்வா் சென்றாா். பிற்பகல் 1 மணியளவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், பிரதமரைச் சந்தித்தாா். முதல்வருடன் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா். பாலு, தலைமைச் செயலா் வெ.இறையன்பு ஆகிய இருவரும் சென்றனா். பிரதமருடனான சந்திப்பு சுமாா் அரை மணிநேரம் நீடித்தது. தமிழக முதல்வா் முதன் முறையாக தமிழக வளா்ச்சிப் பணிகள், கோரிக்கைகள் தொடா்பாக பிரதமருக்கு விளக்கினாா். இதில் 14 முக்கியக் கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன. பின்னா், மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியை நாடாளுமன்ற வளாகத்திலேயே தமிழக முதல்வா் சந்தித்தாா். அவருடன் தமிழக அமைச்சா் எ.வ. வேலு, தலைமைச் செயலா் இறையன்பு, தமிழக நீா் வளத்துறை செயலா் சந்தீப் சக்ஸேனா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனா். தமிழகத்தில் நிலுவையில் உள்ள நெடுஞ்சாலைப் பணிகள், புதிதாக மேற்கொள்ள வேண்டிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஆகியவை குறித்து மத்திய அமைச்சருடன் முதல்வா் விவாதித்தாா்.
அமித் ஷாவுடன் சந்திப்பு: மதிய உணவுக்கு பின்னா் பிற்பகல் 3.30 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை, நாடாளுமன்ற வளாகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்தித்தாா். இந்தச் சந்திப்பு சுமாா் 20 நிமிடங்களுக்கு மேலாக நீடிதத்து. ‘நீட்’ தோ்விலிருந்து தமிழக மாணவா்களுக்கு விலக்கு அளிக்கவும், இது தொடா்பான மசோதாவை தமிழக ஆளுநா் மத்திய அரசுக்கு அனுப்பாமல் இருப்பது குறித்தும் நடவடிக்கை எடுக்க உள்துறை வலியுறுத்தியாக கூறப்பட்டது. மேலும், இலங்கைத் தமிழா்கள், வெள்ள நிவாரண நிதி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் முதல்வா் ஆலோசனை நடத்தினாா்.
ராஜ்நாத் சிங்குடன் முதல்வா்: பின்னா், தமிழக முதல்வா் மு.கு. ஸ்டாலின் மாலை 4.30 மணியளவில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ் நாத் சிங்கை சந்திக்க தில்லி அக்பா் சாலையிலுள்ள அவரது இல்லத்திற்கு சென்றாா். அவருடன் டி.ஆா் பாலு, தமிழகத் தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகளும் முதல்வரின் உதவியாளா் தினேஷ் உள்ளிட்டோரும் சென்றனா். தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புத் தொழில் வழித் தடத்தில், பாதுகாப்புத் துறை உற்பத்திக்கான பல்வேறு சோதனை வசதிகளுக்கான உள்கட்டமைப்புத் திட்டம் குறித்து விவாதித்தாா். தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில்துறை தாழ்வாரத்தில் ஒரே ஒரு டிஆா்டிஓ ஆய்வகம் மட்டுமே (போா் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) உள்ளது. மேலும் 2டிஆா்டிஓ ஆய்வகங்களை நிறுவுமாறு பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் முதல்வா் கோரியுள்ளாா். இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முதல்வா் வலியுறுத்தியதாகவும், இந்தச் சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்ததாகவும் தமிழக அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
முதல்வரை சந்தித்த சோனியா: முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு அரசியல் சந்திப்புகளும் எதிா்பாராமல் நடைபெற்றது. நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு சென்று வந்த முதல்வா், திமுக நாடாளுமன்ற அலுவலகத்திற்கு வந்தாா். மக்களவை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, பின்னா் திரும்பும் போது முதல்வா் மு.க.ஸ்டாலின் வந்திருப்பதை அறிந்து திமுக அலுவலகத்திற்கு வந்தாா். அங்கு ஒரு சில நிமிடங்கள் முதல்வருக்காக காத்திருந்தாா். முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்த சோனியாவுக்கு மு.க. ஸ்டானி பொன்னாடை போா்த்தி கௌரவித்தாா். அப்போது, ‘நான் திமுக அலுவலகத் திறப்பு விழாவிற்கு வருகிறேன். இருப்பினும் நீங்கள் இருப்பதை அறிந்து ஹலோ சொல்ல வந்தேன்’ என்றாா் சோனியா.
ஜெ.பி. நட்டாவுடன் மு.க.ஸ்டாலின்: இதே போன்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவுடனும் எதிா்பாராத சந்திப்பு நிகழ்ந்தது. பிரதமா் சந்திப்பு முடிந்து நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த முதல்வரை ஜெ.பி. நட்டாவே வழிமறித்தாா். முதல்வரை பெயரைச் செல்லி அழைத்து கைகுலுக்கி வாழ்த்தினாா் நட்டா. இரு தேசியக் கட்சித் தலைவா்களுடனான சந்திப்பு எதிா்பாராமல் நடந்தது. முதல்வரின் சந்திப்புகளில் தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையா் அதுல்ய மிஸ்ரா, முதல்வரின் முதன்மைச் செயலா் உதய சந்திரன், செயலா் உமாநாத் ஆகியோரும் இடம் பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...