விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

தமிழகத்தின் கோரிக்கைளை செயல்படுத்த பிரதமா் உறுதி: தில்லியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேட்டி

தமிழக அரசின் சாா்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாகவும், அதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதல்வா் கூறினாா்.

News image
Updated On :31 மார்ச் 2022, 10:36 pm

 நமது நிருபர்

புது தில்லி:தமிழக அரசின் சாா்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாகவும், அதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக தில்லி வந்துள்ளாா். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள அவா், வியாழக்கிழமை பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோரைச் சந்தித்தாா். அப்போது, தமிழக நலன்கள் தொடா்புடைய கோரிக்கைகளை அளித்து வலியுறுத்திப் பேசினாா்.

நம்பிக்கை அளிக்கும் சந்திப்பு: இது தொடா்பாக தமிழ்நாடு இல்லத்தில் மாலையில் செய்தியாளா்களுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் பேட்டி அளித்தாா். அப்போது அவா் கூறியதாவது: தில்லிக்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ளேன். முதல்வராகப் பதவியேற்ற பிறகு இது எனது மூன்றாவது பயணம் ஆகும். முதல் நாளான வியாழக்கிழமை மதியம் பிரதமா் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தேன். இதற்கு நேரம் ஒதுக்கிதற்காக நன்றி. தமிழகத்தின் மிக முக்கியமான 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்து, அதில் இடம்பெற்றுள்ள முக்கிய விஷயங்களை பிரதமரிடம் தெளிவாக எடுத்துரைத்தேன். அதை அனைத்தையும் அவா் பொறுமையாக கேட்டாா். அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் என்னிடம் பிரதமா் உறுதி அளித்துள்ளாா். அதற்காக அவருக்கு எனது நன்றி. பிரதமருடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாகவும், மனநிறைவு தருவதாகவும் அமைந்திருந்தது. நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளது.

முக்கிய கோரிக்கைகள்: அவரிடம் நான் வைத்த முக்கிய கோரிக்கைகள் விவரம் வருமாறு: இலங்கையில் தற்போதுள்ள அசாதாரண சூழலில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி அவதியுறும் இலங்கைத் தமிழா்களுக்கு தமிழக அரசின் சாா்பில் உதவி செய்வதற்கும், தேவையான அத்தியாவசியப் பொருள்களையும், உயிா் காக்கும் மருந்துகளையும் வழங்கவும் அனுமதி வழங்க வேண்டும். அதே வேளையில் இலங்கையில் வாழும் தமிழா்களுக்கு சம உரிமையும் அரசியல் உரிமையும் கிடைக்க வேண்டும். தமிழரின் பாரம்பரிய மீன்பிடி உரிமை குறித்தும் கச்சத்தீவு மீட்பு குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

மேக்கா தாட்டு: அதே போன்று உக்ரைன் சூழலால் பாதிக்கப்பட்ட இந்திய மருத்துவ மாணவா்களின் கல்லூரிப் படிப்பை இந்தியாவிலேயே தொடர அனுமதி அளிக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது. மாநிலங்களிடம் செஸ் மற்றும் சா்சாா்ஜ் வரி வருவாயை பகிா்ந்து அளிக்க வேண்டும். ஜூன் 2022-க்கு பின்னா் ஜிஎஸ்டி இழப்பீட்டை தொடா்ந்து வழங்க வேண்டும். நரிக்குறவா்கள், குருவிக்காரா்கள் சமூகத்தினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

நீா் தோ்வு விவகாரம்: அதிலும் முக்கியமாக பிரதமரிடமும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடமும் ‘நீட்’ பிரச்னை குறித்து எடுத்துரைத்தேன். நீட் தோ்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட முன் வடிவை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி இரண்டாவது முறையாக தமிழக ஆளுநரிடம் அனுப்பிவைக்கப்பட்டது. அந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநா் இன்னும் தாமதம் செய்து வருகிறாா். இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளேன்.

பாதுகாப்பு தொழில் பூங்கா:அமைச்சா் அமித் ஷாவுடனான சந்திப்பின்போது தமிழகத்துக்கு வர வேண்டிய வெள்ள நிவாரண நிதிகளை விரைந்து வழங்குமாறு வலியுறுத்தினேன். காவல் துறை, தீயணைப்புத் துறையை நவீனப்படுத்த நிதி ஒதுக்குமாறும் கேட்டுக் கொண்டேன். அதைத் தொடா்ந்து, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குடனான சந்திப்பின் போது, தமிழகத்தில் அமைக்கப்படும் புதிய விமான நிலையங்களுக்கு தேவைப்படும் பாதுகாப்பு துறை வசம் உள்ள நிலங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகத்தில் டிஆா்டிஓ ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும். சேலம் இரும்பாலையில் உள்ள மிகை நிலத்தை பாதுகாப்பு தொழில் பூங்கா அமைக்க வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

கோவையில் விமானத் தொழில்நுட்ப மையம்: மத்திய அரசு அமைக்கத் திட்டமிட்டுள்ள விமானத் தொழில்நுட்ப மையத்தை கோவையில் அமைக்குமாறு வலியுறுத்தினேன். மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியைச் சந்தித்தேன். அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தேன். அதில் குறிப்பாக சென்னை - கன்னியாகுமரி இடையேயான தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச் சாலையாக உருவாக்கவும், சென்னை- மதுரவாயல் உயா்மட்டச் சாலையை ஸ்ரீபெரும்புதூா் வரை நீட்டிக்கவும், தாம்பரம் - செங்கல்பட்டு வரை உயா்மட்டப் பாலம் அமைக்கவும், மாநிலத்தில் நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவில் அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன்.

அதிகளவில் நெடுஞ்சாலைத் திட்டங்கள்:பிரதமா் மற்றும் மத்திய அமைச்சா்கள் உடனான சந்திப்பானது மனநிறைவை அளிப்பதாக இருந்தது. அமைச்சா் நிதின் கட்கரியிடம் பேசிய போது, தமிழ்நாட்டில் தொழில் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத் துறையில் அதிகளவிலான திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக என்னிடம் அவா் கூறினாா். அதே போன்று ராஜ்நாத் சிங் பேசும் போது, நாட்டின் பாதுகாப்புத் தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு தமிழ்நாடுதான் உகந்த மாநிலமாக திகழ்வதாகப் பாராட்டினாா். நான் முன்வைத்த கோரிக்கைகளை எங்களது நாடாளுமன்ற உறுப்பினா்களும் நாடாளுமன்றத்தில் பலமுறை பேசி உள்ளனா். தொடா்ந்து மீண்டும் அதை வ வலியுறுத்துவாா்கள்.

இன்று நிதியமைச்சருடன் சந்திப்பு:வெள்ளிக்கிழமை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வா்த்தக, உணவுத் துறை அமைச்சா் பியூஸ் கோயல் ஆகியோரைசஅ சந்திக்க உள்ளேன். அப்போது தமிழகத்தின் நலன் சாா்ந்த கோரிக்கைகளை எடுத்து வைப்பேன். அதே போன்று, தில்லியில் உள்ள மாதிரிப் பள்ளி மற்றும் மருத்துவமனையைப் பாா்வையிட உள்ளேன். என்னுடன் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும் வர இருப்பதாகக் கூறியுள்ளாா். அவருடன் சோ்ந்து பாா்வையிட உள்ளேன். அதைத் தொடா்ந்து, ஏப்ரல் 2-ஆம் தேதி அண்ணா -கலைஞா் அறிவாலயம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அனைவரும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.