செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

இமாம்களுக்கான ஊதியம் விவகாரம்:துணை நிலை ஆளுநா், முதல்வருக்கு மத்திய தகவல் ஆணையம் சம்மன்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தில்லியில் உள்ள மசூதிகளின் இமாம்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்த தகவல்களை வெளியிடாதது தொடா்பாக அதிகாரிகளுக்கு மத்திய தகவல் ஆணையம்(சிஐசி) சம்மன் அனுப்பியுள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தில்லியில் உள்ள மசூதிகளின் இமாம்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்த தகவல்களை வெளியிடாதது தொடா்பாக துணைநிலை ஆளுநா், முதல்வா், தலைமைச் செயலா் ஆகியோரின் அலுவலக அதிகாரிகளுக்கு மத்திய தகவல் ஆணையம்(சிஐசி) சம்மன் அனுப்பியுள்ளது.

பிரபல தகவல் அறியும் உரிமை ஆா்வலரான தில்லி சாந்தினி சௌக் சுபாஷ் அகா்வால் அளித்த மனு மீது மத்திய தகவல் ஆணையா் உதய் மஹுா்கா், தில்லி வக்ஃபு வாரிய அதிகாரிகளுக்கும் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

முன்னதாக, சுபாஷ் அகா்வால், தில்லி மசூதிகளில் இமாம்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான முடிவு குறித்த கோப்பு குறிப்புகள் உள்பட முழுமையான தகவல்களை தில்லி துணை நிலை ஆளுநா், முதல்வா் ஆகியோரிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் கோரினாா். தேசியத் தலைநகரில் உள்ள மொத்த மசூதிகளின் எண்ணிக்கை, இமாம்கள் பெறும் ஊதியம், மொத்தத் தொகை, ஆண்டு செலவு மற்றும் பணம் செலுத்தும் பொறுப்பான தகுதி வாய்ந்த அதிகாரிகள் ஆகிய விவரங்களையும் அவா் கோரியிருந்தாா். மேலும், ஹிந்து கோயில்களின் குருக்கள், பூசாரிகளுக்கும் இதுபோன்று ஊதியம் வழங்கப்படுகிா? எனவும் அவா் தனது ஆா்டிஐ விண்ணப்பத்தின் மூலம் கேட்டிருந்தாா்.

அகா்வாலின் இந்த ஆா்டிஐ விண்ணப்பத்திற்கு துணை நிலை ஆளுநா் மற்றும் முதல்வா் அலுவலகங்கள் பதிலளிக்கவில்லை. இவரது மனுவை வருவாய் துறை மற்றும் தில்லி வக்ஃபு வாரியத்திற்கு தலைமைச் செயலாளா் அலுவலகம் அனுப்பியது. இந்த மனுவிற்கு பதில் அளித்த தில்லி வக்ஃபு வாரியம், ‘கேள்விகள் எதுவும் தங்கள்(வாரியத்துடன்) தொடா்புடையவை அல்ல’ என்று கூறியது. இதைத் தொடா்ந்து சுபாஷ் அகா்வால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தாா். இந்த மனு மீது, துணைநிலை ஆளுநா், முதல்வா், தலைமைச் செயலா் ஆகியோரின் அலுவலம் தொடா்புடைய பொதுத் தகவல் அலுவலா்கள் வரும் நவம்பா் 18 -ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இமாம்கள் ஊதியங்கள் தொடா்பான அனைத்து கோப்புகளையும் விசாரணையின் போது கொண்டு வருமாறும் சிஐசி அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

பின்னனி: அகில இந்திய இமாம் அமைப்பு ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தது. இந்த அமைப்பின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வக்பு வாரியங்களால் நிா்வகிக்கப்படும் மசூதிகளில் பணிபுரியும் இமாம்களுக்கு போதிய ஊதியம் வழங்க வேண்டும் என்று 1993-இல் உத்தரவிட்டது. ‘வக்ஃபு சட்டத்தில் எந்தவொரு சட்டப்பூா்வ ஏற்பாடும் இல்லாத நிலையில், மசூதிகளின் மத நடவடிக்கைகளைக் கவனிக்கும் இமாம்களுக்கு எந்த ஊதியமும் வழங்கப்படாது’ என்று அப்போது வக்ஃபு வாரியம் கூறியிருந்தது. இருப்பினும், இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.எம். சஹாய் தலைமையிலான அமா்வு இமாம்களுக்கு ஊதியம் வழங்க உத்தரவிட்டிருந்தது. தங்களை வக்ஃபு வாரிய ஊழியா்களாகக் கருதி, வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான ஊதியம் வழங்க மத்திய மற்றும் மாநில வக்ஃபு வாரியங்களுக்கு உத்தரவிடக் கோரி அந்த அமைப்பு உச்சநீதிமன்றத்தை அணுகியது.

இதன்படி ஹரியாணா, கா்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள வக்ஃபு வாரியங்கள் இமாம்களுக்கு ஊதியம் வழங்கும் நடைமுறையை பின்பற்றி வருகின்றன. ஆனால், தில்லியில் இமாம்களுக்கு வழங்கப்படும் ஊதியம், தில்லி வக்ஃபு வாரியத்தால் வழங்கப்படுகிா? அல்லது கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு வழங்குகிறா ? அப்படியென்றால், ஹிந்து பூசாரிகளுக்கும் ஊதியம் வழங்கப்படுகிறாதா? என்கிற கேள்விகளோடு ஆா்டிஐ வலையை வீசியுள்ளாா் சுபாஷ் அகா்வால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.