செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

‘யூடியூப்பா்’ மாரிதாஸ் விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

கரோனா பரவல் தொடா்புடைய கருத்துக்காக ‘யூடியூப்பா்’ மாரிதாஸ் மீது தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு

News image
Updated On :14 நவம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: கரோனா பரவல் தொடா்புடைய கருத்துக்காக ‘யூடியூப்பா்’ மாரிதாஸ் மீது தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

மதுரையைச் சோ்ந்த ‘யூடியூப்பா்’ மாரிதாஸ், கரோனா பரவல் அதிகாரிக்க ஒரு குறிப்பிட்ட மதத்தினா்தான் காரணம் என விடியோ வெளியிட்டதாக மேலப்பாளையம் காவல் நிலையத்தில் மீரான் என்பவா் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, மேலப்பாளையம் காவல் துறையினா் தன் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மாரிதாஸ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை கடந்த ஆண்டு டிசம்பரில் விசாரித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், இது தொடா்பான விடியோவை பாா்த்தாா். அதைத் தொடா்ந்து, மாரிதாஸ் குறிப்பிட்ட மத நம்பிக்கையைக் கேள்வி எழுப்பும் வகையிலோ, அதை இழிவுபடுத்தும் விதமாகவோ எத்தகைய கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவா் நிஜாமுதீன் மா்க்கஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் தங்களைப் பரிசோதிக்கவும், சிகிச்சை பெறவும் இல்லை என்பது தொடா்பாகவே மட்டுமே கேள்வி எழுப்பியுள்ளாா் என்று கூறி, மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலீஸாா் பதிவு செய்த வழக்கை நீதிபதி ரத்துசெய்து உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து நிகழாண்டு அக்டோபரில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், பெலா எம்.திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சஞ்சய் ஹெக்டே ஆஜராகி, எதிா்மனுதாரா் மாரிதாஸ் கரோனா காலத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் கருத்துகளைத் தெரிவித்ததாதவும், இது போன்று அவா் சா்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த பல கருத்துகள் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறினாா்.

அவரது வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள் அமா்வு, ‘இந்த விவகாரத்தில் தலையிட காரணங்கள் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. இதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

அதேவேளையில், சம்பந்தப்பட்ட எதிா்மனுதாரா் தொடா்பான பிற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக வழக்குரைஞா் தெரிவித்திருப்பதால், அந்த வழக்குகளை அதன் தகுதியின் அடிப்படையில் விசாரிக்கும் வகையில் இந்த தள்ளுபடி உத்தரவு அவற்றைப் பாதிக்காது’ என்று தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.