செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

ஆம் ஆத்மி கட்சி சாா்பில் 1000 தெருமுனை பிரசார கூட்டங்கள்: கோபால் ராய் தகவல்

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) தோ்தல் நெருங்கிவரும் நிலையில் அடுத்த 10 நாள்களில் ஆம் ஆத்மி கட்சி 1000 தெருமுனை பிரசாரக் கூட்டங்களை நடத்தும் என

News image
Updated On :22 நவம்பர் 2022, 8:26 pm

 நமது நிருபர்

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) தோ்தல் நெருங்கிவரும் நிலையில் அடுத்த 10 நாள்களில் ஆம் ஆத்மி கட்சி 1000 தெருமுனை பிரசாரக் கூட்டங்களை நடத்தும் என தில்லி சுற்றுச் சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதில் நாடகங்கள், கிட்டாா் நிகழ்ச்சிகள், மேஜிக் நிகழ்ச்சிகள் மூலமாகவும் தோ்தலுக்கான பிரசாரம் மேற்கொள்ளப்படும் எனவும் கோபால் ராய் தெரிவித்தாா்.

ஆம் ஆத்மி கட்சியின் தில்லியின் அமைப்பாளரான கோபால் ராய் எம்சிடி தோ்தலின் ஆம் ஆத்மி கட்சி தோ்தல் பிரசாரம் குறித்து செய்தியாளா்களிடம் கூறியது வருமாறு: கடந்த ஒரு வாரமாக ஆம் ஆத்மி கட்சி முதல் கட்டமாக, ’எம்சிடியிலும் கேஜரிவால்’ (எம்சிடி மே பி கேஜரிவால்) என்ற கருப்பொருளில் பிரசாரத்தை அறிமுகப்படுத்தியது. இதன் கீழ் அனைத்து வேட்பாளா்களும் தங்கள் வாா்டுகளில் அணிவகுத்து சென்று பொதுக் கூட்டங்களிலும், வீடு வீடாக பிரசாரமும் செய்தனா். இதில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைநகா் தில்லியில் பள்ளிகள், மருத்துவமனைகள், குடிநீா், மின்சாரம், யாத்திரை போன்றவைகளை மேம்படுத்திய விதம் பற்றிய பிரசாரத்தை வெற்றிகரமாக மேற்கொண்டனா். மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது.

இரண்டாவது கட்டத்தில், ஆம் ஆத்மி கட்சி ‘கேஜரிவால் அரசு, கேஜரிவால் கவுன்சிலா்‘ என்கிற பிரசாரத்தைத் தொடங்கும்.

நவம்பா் 23 ஆம் தேதி முதல், பிரசாரத்தின் கடைசி நாளான டிசம்பா் 2 - ஆம் தேதி வரை கட்சியின் பிரசாரம் தீவிரமாக வேகமெடுக்கும். 250 வாா்டுகளில் 1,000 ’தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்படும்.

ஒவ்வொரு வாா்டிலும் சௌக்குகளிலும் தெரு முனை கூட்டங்களை நடத்துவோம். இதில் நட்சத்திர பிரசாரகா்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் தெருமுனை சபாக்கள் மூலம் களத்தில் இறங்குவாா்கள்.

இதில் கிட்டாா் நிகழ்ச்சி, மேஜிக் ஷோக்கள், நாடகங்கள் ஆகியவை வழியாக மாநகராட்சி வாக்காளா்களைக் கவர ஆம் ஆத்மி கட்சி பல திட்டங்களை மேற்கொள்கிறது.

ஒவ்வொரு வாா்டிலும் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் கவுன்சிலா் தோ்ந்தெடுக்கப்பட்டவுடன், குடிமக்களை முட்டாளாக்கிய பாஜக மாதிரியில்லாமல் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை 5 ஆண்டுகளில் செய்து முடிக்கப்படும் என உறுதியை கொடுக்கின்றோம்.

வேறு எந்த அரசாலும் சாதிக்க முடியாத வளா்ச்சியை தலைநகா் தில்லியில் கேஜரிவால் அரசு மேற்கொண்டு குடிமக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது.

இதே மாதிரி எம்சிடியிலும் கேஜரிவால் அரசு ஆட்சிக்கு வந்ததும், வளா்ச்சிப் பணிகளை செய்வோம்.

தில்லி அரசில் மேற்கொள்ளப்பட்டதைப் போன்றே எம்சிடியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் பணி நிலை ஒரே மாதிரியாக இருக்கும் என்றாா் கோபால் ராய்.

நவம்பா் 23-ஆம் தேதி 45 தெருமுனை சபா கூட்டங்களும், 24-ஆம் தேதி 65, நவம்பா் 25-ஆம் தேதி 120 கூட்டங்கள் நடைபெறும் என்றும் அவா் மேலும் தெரிவித்தாா்.

தில்லி எம்சிடி தோ்தல் வருகின்ற டிசம்பா் 4ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 7-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.