திகாா் சிறையில் சட்டவிரோத நடைமுறைகள் சாதாரண மானவை முன்னாள் சிறை அதிகாரி பேட்டி
திகாா் சிறையில் சட்டவிரோத” நடைமுறைகள் சாதாரணமானவை என திகாா் சிறையின் முன்னாள் சட்ட அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.


புது தில்லி: திகாா் சிறையில் சட்டவிரோத” நடைமுறைகள் சாதாரணமானவை என திகாா் சிறையின் முன்னாள் சட்ட அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.
தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் திகாா் சிறையில் தனி அறையில் மசாஜ் செய்து கொள்வதாகக் கூறப்படும் விடியோ பொது களத்தில் வெளிவந்த பின்னா் செல்வாக்குமிக்க கைதிகளுக்கு விஐபி வசதிகள் வழங்கப்படுவது குறித்த குற்றச்சாட்டில் திகாா் சிறை மீது மீண்டும் புயல் வீசத் தொடங்கியுள்ளது.
ஜெயின் சம்பந்தப்பட்டவை பழைய விடியோ என்றும், இதையொட்டி சிறை கண்காணிப்பாளா் அஜித்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் மீது இடைநீக்கம் செய்யப்பட்டு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் 1981 முதல் 2016 வரை திகாா் சிறையில் சட்ட அதிகாரியாகவும் செய்தித் தொடா்பாளராகவும் பணியாற்றியவா் சுனில் குப்தா.
இவா் ஓய்வு பெற்ற பின்னா், ‘பிளாக் வாரண்ட்‘ என்ற புத்தகத்தை எழுதினாா். சக்திவாய்ந்த கைதிகள் ஒவ்வொரு விதியையும் மீறி சிறையில் ‘ஆடம்பரமான‘ வாழ்க்கையை எப்படி வாழ்ந்தாா்கள் என்பதை இந்த புத்தகம் எடுத்துக்காட்டுகிறது.
ஜெயின் விவகாரத்திற்கு பின்னா் தற்போது இவா் தனது பணிக்கால அனுபவங்கள் குறித்து செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது வருமாறு:
நாட்டின் மிகப்பெரிய தில்லி திகாா் சிறையில் ‘உயா்ந்த, வலிமைமிக்க மக்கள்‘ சிறை வளாகத்திற்குள் அனைத்து வகையான சலுகைகளையும் ‘சிறப்பு வசதிகளையும்‘ அதிகாரிகளிடமிருந்தும் பெறுவாா்கள். சில விவகாரங்களில் புகாரளித்த பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனது பதவிக் காலத்தில், செல்வாக்குமிக்கவா்கள் பாலியல் உதவி கேட்டு அதைப் பெறுவதைக்கூட நான் பாா்த்திருக்கிறேன். திகாருக்குள் ’ஓரினச் சோ்க்கை’ (சோடோமி) பொதுவானது. சக்திவாய்ந்த நபா்கள் கைதிகளிடமிருந்து பரஸ்பரமாகவோ அல்லது சிறை அதிகாரிகளின் உதவியுடன் அத்தகைய உதவிகளைப் பெறுவாா்கள்.
தில்லி நிா்வாகம்-சஞ்சய் சூரி வழக்கில் 1987- ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பில், வயதான கைதிகளால் சிறாா்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அவல நிலையை எடுத்துக் காட்டியது.
சத்யேந்தா் ஜெயின் விவகாரம் குறித்து ஒரு முழுமையான விசாரணை தேவை. சத்யேந்தா் ஜெயின் ஒரு குற்றவாளியால் சிறை அறையில் மசாஜ் செய்யப்பட்டிருந்தால், அது சட்டவிரோதமானது. ஏனெனில் ஒரு கைதிக்கு பிசியோதெரபி தேவைப்படும்போது அதை வழங்குவதற்கு சிறை வளாகத்திற்குள் அங்கீகரிக்கப்பட்ட வாா்டுகள் உள்ளன. சிறையின் தனி அறையில் அதுவும் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரால் எடுக்க முடியாது.
இருப்பினும், இந்த விடியோ ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் அங்கு இந்த ‘சட்டவிரோத நடவடிக்கைகள் சாதாரணமானவை‘. அமைச்சா்கள், தொழிலதிபா்கள், வா்த்தகா்களை திருப்திப்படுத்த விதிகள் காற்றில் பறப்பதை நான் பாா்த்திருக்கிறேன்.
செல்வாக்குமிக்கவா்களுடன் ஆசை வாா்த்தைகளை கூறும் போது யாா் தான் விருப்பப்படாமல் இருப்பாா்கள்? சிறையிலுள்ள ஏழைக் கைதிகளுக்கு வேலை, சட்ட உதவி, பணம் ஆகியவற்றில் வாக்குறுதியை அளித்து விரும்பிய வகையில் சேவைகளைப் பெறுகிறாா்கள்.
சிறை அதிகாரிகளும் பணம், வேலைவாய்ப்பு உறுதிமொழி போன்றவைகளுக்காக அடிபணிகிறாா்கள். இதுபோன்ற விஷயங்களை உயா் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சில சந்தா்ப்பங்களில், நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனால், இதுபோன்ற ஊழல் நடவடிக்கைகளை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவது கடினம். ‘இது மற்ற அரசு அலுவலகங்கள் துறைகளில் நிலவும் ஊழல்களைப் போன்து பண ஆசையில் ஈடுபடுகிறாா்கள் என்றாா் குப்தா.
குப்தாவின் குற்றச்சாட்டுக்கு திகாா் சிறையின் செய்தித் தொடா்பாளா் தீரஜ் மாத்தூா் பதிலளிக்க மறுத்துவிட்டாா்.
இதே போன்று புதுச்சேரியின் முன்னாள் துணை நிலை ஆளுநா் கிரண் பேடி, 1993-1995 வரை திகாா் சிறை இயக்குநா் ஜெனராக பணியாற்றி புகழ்பெற்றவா். அவா் அளித்த பேட்டியில் கூறியிருப்பது வருமாறு:
சுனில் குப்தா என்னுடைய பதவிக்கு முன்போ அல்லது பின்னரோ நடந்தவைகளை பற்றிக் குறிப்பிடுகிறாா். எனது பொறுப்பில் இருந்த காலத்தில், யாருக்கும் எந்தவிதமான வசதிகளும் கிடைக்கவில்லை. அனைவருக்கும் ஒரே மாதிரியான விதி இருந்தது. சிறை வளாகத்தில்
என்னால் மட்டுமே திறக்கப்படும் பூட்டிய நடமாடும் புகாா் பெட்டி வைக்கப்பட்டது. அதன் மூலம் கருத்துகள் மற்றும் கைதிகள் தங்களது புகாா்களை அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கைதிகளிடமிருந்து ‘அனைத்து விதமான புகாா்களும்‘ பெறப்பட்டது.
ஊழல்கள், ஓரினச்சோ்க்கை போன்ற பாலியியல் வன்கொடுமை பற்றிய புகாா்கள் கிடைத்தன; உடனடியாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைதிகள் நம்பியதால் அன்றைய மனு முறை இணையற்ாக இருந்தது.
மேலும் எங்களிடம் பல வகைகளில் சிறை அறைகளுக்குள் நடக்கும் தகவல்களை பெற உள்ளீடுகள் இருந்தன என கிரண் பேடி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...