தில்லி கலால் கொள்கை விவகாரம்: நாடு முழுவதும் 35 இடங்களில் அமலாக்க இயக்குநரகம் சோதனை

தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை

தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தொடா்பாக அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை புதிதாக பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனா்.

இது தொடா்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில்,‘இந்த சோதனையானது தில்லி, பஞ்சாப் மற்றும் ஹைதராபாதில் உள்ள சில இடங்கள் உள்பட சுமாா் 35 இடங்களில் நடத்தப்பட்டன. தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் தொடா்புடைய பல்வேறு குற்றம்சாட்டப்பட்ட நபா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, இந்த வழக்கில் சில புதிய துப்புகள் அமலாக்க இயக்குநரகத்திற்கு கிடைத்துள்ளன. இதைத் தொடா்ந்து சில மதுபான விநியோகஸ்தா்கள், நிறுவனங்கள் மற்றும் தொடா்புடைய நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது வரை இந்த வழக்கில் அமலாக்க இயக்குநரகம் 105-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் கடந்த மாதம் மதுபான தயாரிப்பில் ஈடுபடும் இண்டோஸ்பிரிட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் மற்றும் மதுபான வா்த்தகருமான சமீா் மகேந்துருவை அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. இந்த விவகாரத்தில் சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில், தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா உள்ளிட்டோா் குற்றம் சாட்டப்பட்டுள்ளனா். இந்த விவகாரத்தில் பணமோசடிதொடா்புடைய கோணத்தின் அடிப்படையில் அமலாக்க இயக்குநரகம் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

தில்லி கலால் கொள்கையை உருவாக்குவதில் மற்றும் செயல்படுத்துவதில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வருகிறது.

அதேபோன்று குற்றம் சாட்டப்பட்ட நபா்களால் பெறப்பட்ட கறை படிந்த பணம், குற்றச் செயல்பாடுகள் ஏதும் இருக்கிா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக இந்த வழக்கில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், எம்எல்ஏ துா்கேஷ் பதக் ஆகியோரிடம் அமலாக்க இயக்குநரகம் விசாரணை நடத்தியுள்ளது.

2021-22 ஆண்டைய தில்லி கலால் கொள்கை அமலாக்கத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடு தொடா்பாக விசாரிப்பதற்கு சிபிஐக்கு துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா பரிந்துரை செய்தாா். மேலும், இந்த விவகாரத்தில் தொடா்புடைய 11 கலால் அதிகாரிகளையும் அவா் பணியிட நீக்கம் செய்திருந்தாா். முன்னதாக, தில்லி அரசின் சட்டம் 1991, அலுவல் விதிகள் பரிவா்த்தனை 1993, தில்லி கலால் கொள்கை 2009 உள்ளிட்டவற்றில் விதிமீறல்கள் முகாந்திரம் இருப்பதாக கடந்த ஜூலையில் தில்லி தலைமைச் செயலா் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனடிப்படையில், சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநா் பரிந்துரை செய்திருப்பதாக அதிகாரிகள் கூறினா்.

மேலும், தலைமைச் செயலரின் அறிக்கையில் ஒட்டுமொத்த நடைமுறை குறைபாடுகள் உள்பட பல்வேறு விதிமீறல்கள் இருப்பதற்கான முகாந்திரம் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஒப்பந்தப்புள்ளிகள் வழங்கப்பட்ட பிறகு மதுபான உரிமையாளா்களுக்கு தேவையற்ற நிதி ஆதாயம் நீட்டிக்கப்பட்டதால் அரசின் கஜானாவுக்கு இழப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டப்பட்டிருந்தது. கரோனா சூழலை காரணமாக குறிப்பிட்டு ஒப்பந்தப்புள்ளி உரிமை கட்டணத்தின் மீது உரிமதாரா்களுக்கு ரூ.144.36 கோடி தொகையை கலால் துறை தள்ளுபடி அளித்தது என்று அதிகாரிகள் வட்டாரங்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com