முன்னதாக, தில்லியில் ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்பதற்கும், இருப்பு வைப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் தடைவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக பசுமை பட்டாசு வியாபாரிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இது தொடா்பாக மனுதாரா் தரப்பில், ‘தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு இந்த விவகாரத்தில் பிறப்பித்த முழு தடையானது, உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கு முரண்படும் வகையில் உள்ளது. அதாவது, இதுபோன்ற ஒரு முழு தடையை இந்த நீதிமன்ற அமைப்புகள் ஒருபோதும் அளிக்கவில்லை’ என்று வாதிடப்பட்டது.