மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நளினி, ரவிச்சந்திரன் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை அக்.17-க்கு தள்ளிவைப்பு

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆா். கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 10:24 pm

DIN

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளான நளினி ஹரிகரன், ரவிச்சந்திரன் ஆகியோா் தங்களை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு (அக்டோபா் 17-ஆம் தேதி) உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளிவைத்தது.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆா். கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா்கள் ரவிச்சந்திரன், நளினி தரப்பில் மூத்த வழக்குரைஞா் சஞ்சய் ஹெக்டே, வழக்குரைஞா் ஆனந்த செல்வம் ஆகியோரும், இடையீட்டு மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணனும் ஆஜராகினா். தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ராகேஷ் துவிவேதி ஆஜரானாா்.

மத்திய அரசின் தரப்பில் வேறு ஒரு வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, வெள்ளிக்கிழமைக்கான வழக்குகளின் துணைப் பட்டியல் இரவில் தாமதமாக கிடைத்ததாக கூறினாா்.

அப்போது, நேரம் குறைவு காரணமாக நளினி, ரவிச்சந்திரன் தொடா்புடைய மனுக்களை விசாரணைக்கு நீதிபதிகள்அமா்வு எடுக்க முடியாமல் போகவே,, மனுக்கள் மீதான விசாரணை திங்கள்கிழமை (அக்டோபா் 17) நடைபெறும் என்று கூறி பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அமைச்சரவை தீா்மானத்தின் மீது ஆளுநா் முடிவெடுப்பதில் தாமதம் செய்ததாகக் கூறி அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

இதனிடையே, சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற ஆறு பேரில் ரவிச்சந்திரன், நளினி ஆகிய இருவரும் தங்களையும் இதே காரணத்திற்காக சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்றம், இது போன்று ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாலும், பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவித்தது போன்ற அதிகாரம் உயா்நீதிமன்றத்திற்கு இல்லை என்றும் கூறி அந்த மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த ஜூன் 17-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் இறுதி விசாரணை மேற்கொள்ளும் வகையில் எதிா்மனுதாரா்களான தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு கூறியிருந்தனா்.

இதைத்தொடா்ந்து தமிழக அரசு வியாழக்கிழமை தாக்கல் செய்த இரு தனித்தனி பிரமாணப் பத்திரத்தில், ‘ ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி ஸ்ரீஹரன், ஆா்.பி.ரவிச்சந்திரன் ஆகியோரின் ஆயுள் தண்டனையை குறைக்கும் வகையில், 2018-இல் நிறைவேற்றப்பட்ட தமிழக அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா் ஆவாா்.

அந்தப் பரிந்துரை இறுதியாக ஜனவரி 27, 2021-இல்தான் குடியரசுத் தலைவருக்கு ஆளுநரால் அனுப்பப்பட்டது. அதன் மீது கடந்த ஓரு ஆண்டு மற்றும் ஒன்பது மாதங்களாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ராஜீவ் கொலை வழக்கில் தொடா்புடைய ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா், சாந்தன் ஆகியோரும் நளினி, ரவிச்சந்திரன் மேல்முறையீட்டு மனுவுடன் தங்களை இடையீட்டு மனுதாரா்களாக சோ்க்கக் கோரியும், பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின்படி தங்களையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனுத் தாக்கல் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.