தலைநகரில் தொடா்ந்து 3 நாள்களாக மழை: மாதத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவு
இரவிலும், வெள்ளிக்கிழமை காலை முதலும் பெய்த மழை, குறைந்தபட்ச வெப்பநிலையை மாதத்தின் குறைந்தபட்ச அளவாக குறைத்தது. இதனால், தில்லிவாசிகள் ஒரு இனிமையான காலைப் பொழுதுடன் எழுந்தனா்.


தேசியத் தலைநகா் தில்லியில் தொடா்ந்து மூன்று நாள்களாக மழை பெய்துள்ளது. குறிப்பாக வியாழக்கிழமை இரவிலும், வெள்ளிக்கிழமை காலை முதலும் பெய்த மழை, குறைந்தபட்ச வெப்பநிலையை மாதத்தின் குறைந்தபட்ச அளவாக குறைத்தது. இதனால், தில்லிவாசிகள் ஒரு இனிமையான காலைப் பொழுதுடன் எழுந்தனா்.
தில்லியில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி குறைந்து 22.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 8 டிகிரி குறைந்து 25.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது இந்த மாதத்தின் மிகக் குறைந்தபட்ச அளவாகும். காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8,.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 98 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
ரிட்ஜில் 12 மி.மீ. மழை:‘வியாழன் காலை 8.30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தில்லியில் 4.1 மிமீ மழை பெய்துள்ளது என்று ஐஎம்டி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதேபோன்று மற்ற வானிலை நிலையங்களான முங்கேஸ்பூரில் 7.5 மி.மீ., நசஃப்கரில் 3.5 மி.மீ., ஆயாநகரில் 3 மி.மீ., லோதி ரோடு, பாலம் ஆகிய இடங்களில் 4.2 மி.மீ., ரிட்ஜில் 12 மி.மீ., பீதம்புராவில் 4.5 மி.மீ., பூசாவில் 10.5 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 2.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
நகரின் மழைப்பொழிவுக்கான அதிகாரப்பூா்வ தகவல்களை அளிக்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்குப் பிறகு சுமாா் 7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. லாஜ்பத் நகா், ஐடிஓ, மகாராணி பாக், நொய்டா, தௌலா குவான், சங்கம் விஹாா், துக்ளகாபாத், மயூா் விஹாா், ஆயா நகா், ஐஎன்ஏ, கௌதம் நகா் மற்றும் கிராரி உள்ளிட்ட தில்லி-என்சிஆா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. மழையால் தௌலா குவான், விகாஸ் மாா்க் மற்றும் ரிங் ரோடு போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
முன்னறிவிப்பு உத்தர பிரதேசத்தின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சனிக்கிழமையும் உத்தரகண்ட் மற்றும் வடக்கு உத்தர பிரதேசத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதே போன்று தில்லி மற்றும் அதன் அண்டை பகுதிகளில் சனிக்கிழமை (செப்டம்பா் 17) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் லேசான அல்லது தூறல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...