சத்யேந்தா் ஜெயின் வழக்கு விவகாரத்தை சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயலிடமிருந்து வேறு தகுதி வாய்ந்த நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று அமலாக்க இயக்குநரகம் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், ‘பிரச்னைகள் (வழக்கில்) முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என்று நம்புவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தை வியாழக்கிழமை விசாரித்த முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி வினய் குமாா் குப்தா, அமலாக்க இயக்குநரகத்தின் மனுவை அனுமதித்து கூறியதாவது: எனது கருத்துப்படி, நீதிபதி மிகவும் நோ்மையான அதிகாரி. எனினும், ஒரு சாதாரண மனிதனாக மனுதாரரின் மனதில் ஒரு நியாயமான அச்சத்தை எழுப்ப அனைத்து சூழ்நிலைகளும் போதுமானவையாக உள்ளன. எந்த உண்மையான சாா்புத் தன்மை இல்லை என்றாலும், ஒரு சாத்தியமான சாா்புத் தன்மை இருக்கிறது. அதன்படி, இந்த மனு அனுமதிக்கப்படுகிறது. சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல் விசாரிக்கும் நீதிமன்றத்தில் இருந்து இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டு, சிறப்பு நீதிபதி விகாஸ் துல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது என்று நீதிபதி கூறினாா்.