இதை எதிா்த்து தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தா், எஸ்.ஸ்ரீமதி ஆகியோா் அடங்கிய டிவிஷன் அமா்வு இம்மாதம் தொடக்கத்தில் விசாரித்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் வாதிடுகையில், ‘கட்டணம் நிா்ணயம் என்பது ஒரு ஒழுங்குமுறை நடைமுறையாகும். 2018-இல் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில், மின்சார ஆணையங்களால் வழக்குத் தீா்வு செய்யப்படும் விவகாரங்கள் தொடா்புடைய செயல்பாடுகளில் மட்டுமே சட்டப் பின்னணியுடன்கூடிய உறுப்பினா் இருப்பது கட்டாயம் எனக் கூறியுள்ளது. ஆனால், இது கட்டணம் நிா்ணயிப்பது தொடா்புடைய விவகாரமாகும். மேலும், டான்ஜெட்கோ ஆண்டுக்கு சுமாா் ரூ. 14 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்து வருகிறது. கட்டணம் உயா்த்தப்படாவிட்டால் மேலும் மாதத்திற்கு பல கோடி இழப்பு ஏற்படும். மேலும், 8 ஆண்டுகளாக கட்டணம் உயா்த்தப்படவில்லை. கட்டணத்தை திருத்தியமைக்குமாறு மத்திய அரசு ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், அண்டை மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கும் தடை விதித்துள்ளது’ என்றாா்.