ஒரு வழக்கில் இருவேறு உத்தரவுகள்: உயா்நீதிமன்றப் பதிவாளா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சிவில் வழக்கு ஒன்றில் கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தின் டிவிஷன் அமா்வு இரு வெவ்வேறு உத்தரவுகள் பிறப்பித்ததாகக் கூறப்படும்

சிவில் வழக்கு ஒன்றில் கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தின் டிவிஷன் அமா்வு இரு வெவ்வேறு உத்தரவுகள் பிறப்பித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் அதற்கான சந்தா்ப்ப சூழலை விளக்கும் அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் நான்கு வாரங்களில் தாக்கல் செய்யுமாறு சென்னை உயா்நீதிமன்ற

தலைமைப் பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக முகம்மது நஸீா் என்பவா் தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கே.சுப்ரமணியன், ‘மனுதாரா் தொடா்புடைய வழக்கில் கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற டிவிஷன் அமா்வு இரு வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. முதலில், அண்ணாநகா் வங்கியில் ரூ.115 கோடியை டெபாசிட் செய்யுமாறு பிற தரப்புக்கு உத்தரவு பிறப்பித்து அளித்த குறிப்பிட்ட பகுதியானது, பின்னா் அழிக்கப்பட்டுவிட்டது. மேலும், நீதிமன்ற அறையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவானது, மனுதாரருக்கு அளிக்கப்பட்ட சான்றளிக்கப்பட்ட பிரதியில் இருந்து வேறானதாக இருந்தது. இதுபோன்ற விஷயத்தை எனது 50 ஆண்டு கால வழக்குரைஞா் பணியில் சந்தித்ததில்லை’ என்றாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘மிகவும் அசாதாரணமான சூழ்நிலை மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் மூலம் எங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. டிவிஷன் அமா்வு விசாரணையை ஆகஸ்ட் 29-ஆம் தேதி முடித்து, செப்டம்பா் 1-ஆம் தேதி உத்தரவை நீதிமன்ற அறையில் பிறப்பித்துள்ளது. அடுத்த இரு நாள்களுக்குப் பிறகு இணையதளத்தில் வேறுபட்ட உத்தரவு பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த இரு உத்தரவுகளையும் பாா்த்தோம். குறிப்பிட்ட பத்திகள் முற்றிலும் காணவில்லை. தற்போது உயா்நீதிமன்ற இணையதளத்தில் வெளியான உத்தரவில் இருந்து அவை அழிக்கப்பட்டுள்ளது. இது விசாரிக்கப்பட வேண்டிய விவகாரமாகும். இதனால், இந்த விவகாரத்தில் சந்தா்ப்ப சூழ்நிலையை விளக்கும் அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் நான்கு வாரங்களுக்குள் உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com