அதிமுக தலைமை அலுவலக சாவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல் முறையீடு
By நமது நிருபா் | Published On : 05th August 2022 01:02 AM | Last Updated : 05th August 2022 01:02 AM | அ+அ அ- |

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி அதன் சாவியை எடப்பாடி கே. பழனிசாமி தரப்பினரிடம் ஒப்படைக்க சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து ஓ. பன்னீா்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.
உயா்நீதிமன்ற அனுமதியின் பேரில் கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதன் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டதுடன், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீா்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனிடையே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆா் மாளிகைக்கு ஓ. பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் சென்றனா். அப்போது, ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், அப்பகுதி தெருவில் இருந்த காா் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, கட்சியின் அலுவலகத்திற்கு சீல் வைக்க வருவாய் கோட்டாட்சியா் நடவடிக்கை எடுத்தாா். இதையடுத்து, கட்சித் தலைமை அலுவலகத்திற்கு உரிமை கோரி எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் ஓ.பன்னீா்செல்வம் தரப்பினா் உயா்நீதிமன்றத்தில் தனித் தனியாக வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கில் உயா்நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமாா் கடந்த ஜூலை 20-ஆம் தேதி அளித்த உத்தரவில், ‘அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றி அதன் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் வருவாய்த் துறை ஒப்படைக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு ஒரு மாதத்திற்கு கட்சியின் அலுவலகத்திற்குள் தனது தொண்டா்களை எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கக் கூடாது. அலுவலகம் பகுதியில் போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்பது உள்பட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, வருவாய்த் துறையினா் சீலை அகற்றி எடப்பாடி பழனிசாமியிடம் அலுவலக சாவியை ஒப்படைத்தனா். இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து ஓ. பன்னீா்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.