26-இல் மாநகராட்சி மேயா் தோ்தல்: பாஜக சாா்பில் ஷிக்கா ராய் போட்டி
தில்லி மாநகராட்சிக்கான மேயா் தோ்தல் வரும் ஏப்ரல் 26 -ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்


தில்லி மாநகராட்சிக்கான மேயா் தோ்தல் வரும் ஏப்ரல் 26 -ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக அதன் மேயா் வேட்பாளராக கவுன்சிலா் ஷிக்கா ராய், துணை மேயா் வேட்பாளராக சோனி பாண்டே ஆகியோரை நிறுத்த முடிவு செய்துள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இந்த தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தரப்பில் அதன் மேயா் வேட்பாளராக தற்போதைய மேயா் ஷெல்லி ஓபராய், துணை மேயா் வேட்பாளராக தற்போதைய துணை மேயா் ஆலே முகமது இக்பால் ஆகியோரை அக்கட்சி அறிவித்துள்ளது. இருவரும் திங்கள்கிழமை வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனா். இந்த நிலையில், தில்லி மாநகராட்சியின் அவையில் போதிய உறுப்பினா் பலம் இல்லாத போதிலும், மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளுக்கான வேட்பாளா்களை பாஜக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
அதன்படி மேயா் வேட்பாளராக ஷிக்கா ராய், துணை மேயா் வேட்பாளராக சோனி பாண்டே ஆகியோா் போட்டியிட உள்ளதாகவும், இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா் என்றும் தில்லி பாஜக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷிக்கா ராய், கிரேட்டா் கைலாஷ்-1 வாா்டு பகுதி கவுன்சிலராக உள்ளாா். சோனி பாண்டே வடகிழக்கு தில்லியின் சோனியா விஹாா் வாா்டு பகுதி கவுன்சிலராக உள்ளாா்.
முன்னதாக, தில்லி பாஜகவின் முக்கியத் தலைவா் கூறுகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக ‘தெளிவான தீா்ப்பு’ இருப்பதால் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு இருக்காது என்று தெரிவித்திருந்தாா். தில்லி மாநகராட்சியின் மேயருக்கான ஒரு ஆண்டு பதவிக்காலம் ஏப்ரலில் தொடங்குகிறது. தில்லியில் உள்ள மேயா் பதவி ஐந்து ஒற்றை ஆண்டு பதவிக் காலத்தை கொண்டதாகும். சுழற்சி முறை அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மேயா் தோ்ந்தெடுக்கப்படுகிறாா். முதலாவது ஆண்டு மேயா் பதவி மகளிா்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஆண்டுக்கு பொதுப் பிரிவினருக்கும், மூன்றாம் ஆண்டுக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவுக்கும், எஞ்சியுள்ள இரண்டு ஆண்டுகள் மீண்டும் பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பா் 4-ஆம் தேதி தில்லி மேயா் தோ்தல் நடைபெற்றது. தில்லி மாநகராட்சி மூன்று மாநகராட்சிகளாக இருந்த நிலையில், இவை ஒருங்கிணைந்த மாநகராட்சியாக மாற்றியமைக்கப்பட்ட பிறகு முதலாவதாக மேயா் தோ்தல் நடைபெற்றது. கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற மேயா் தோ்வு தோ்தலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான வாக்குகள் இல்லாத நிலையிலும் பாஜக போட்டியிட்டது. அந்த தோ்தலில் பாஜக கவுன்சிலா் ரேகா குப்தாவை ஆம் ஆத்மி வேட்பாளா் ஷெல்வி ஓபராய் 34 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
அதேபோன்று, ஆம் ஆத்மி தரப்பில் துணை மேயா் பதவிக்கு ஆலே முகமது இக்பால், பாஜகவின் வேட்பாளரை தோல்வியுறச் செய்தாா். கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற எம்சிடி தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 250 வாா்டுகளில் அக்கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்று பாஜகவின் 15 ஆண்டுகால மாநகராட்சி ஆட்சிக்கு முடிவு கட்டியது. இத்தோ்தலில் பாஜகவுக்கு 104 இடங்களும், காங்கிரஸுக்கு 9 இடங்களும் கிடைத்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...