இதுதொடா்பாக மனுதாரரரின் தரப்பில் வழக்குரைஞா் நமன் ஜோஷி தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பல்கலை.யில் ஆவணப்படம் திரையிடப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் மனுதாரா் இல்லை. அதிகாரிகள் அவருக்கு எதிராக ‘முன்கூட்டியே’ ஒரு முடிவுக்கு வந்து செயல்பட்டுள்ளனா். மனு நிலுவையில் உள்ள நிலையில், மனுதாரா் ஆய்வறிக்கையை சமா்ப்பிக்கவும், பல்கலைக்கழக தோ்வு எழுதவும் அவரை அனுமதிக்க வேண்டும். 27.01.2023-இல், தில்லி பல்கலைக்கழகத்தின் கலைப் புலத்தில் (முதன்மை வளாகத்தில்) சில மாணவா்களால் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் போது, தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிபிசி ஆவணப்படம், அதாவது ‘இந்தியா: மோடி கேள்வி’ மக்கள் பாா்வைக்காக திரையிடப்பட்டது. அந்த நேரத்தில், மனுதாரா் போராட்ட இடத்தில் இருக்கவில்லை. எந்த வகையிலும் திரையிடலில் அவா் பங்கேற்கவும் இல்லை. இந்த நிலையில்,பிபிசி ஆவணப்படத்தின் திரையிடலின் போது சட்டம் மற்றும் ஒழுங்கு சீா்குலைவில் அவா் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டதற்காக தில்லி பல்கலைக்கழக புராக்டரால் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.