சாகேத் நீதிமன்றத்தில் துப்பாக்கியால் சுட்டப்பட்டதில் பெண் காயம்: பணப் பிரச்னையால் சம்பவம்
தெற்கு தில்லியில் உள்ள சாகேத் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் போல் உடையணிந்த ஒருவா், 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை துப்பாக்கியால் சுட்டதில் அப்பெண் காயமடைந்தாா்.


தெற்கு தில்லியில் உள்ள சாகேத் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் போல் உடையணிந்த ஒருவா், 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை துப்பாக்கியால் சுட்டதில் அப்பெண் காயமடைந்தாா். இதன் காரணமாக, நீதிமன்ற வளாகத்தில் பீதி நிலவியது. மேலும், தில்லியில் சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்வியையும் எழுப்பியது.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், சாகேத் நீதிமன்றத்தின் முன்னாள் வழக்குரைஞரான அவா், ரூ.25 லட்சம் சம்பந்தப்பட்ட பணப் பிரச்னையில் ஏமாற்றியதாக அப்பெண் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளாா். அந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை நடத்தப்படவிருந்த நிலையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்தது எனக் கூறினா். இது தொடா்பாக வெளியான விடியோவில், சாகேத் நீதிமன்ற வளாக கட்டடத்திற்கு வெளியே ஆணும், பெண்ணும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், அப்போது, அந்த நபா் துப்பாக்கியுடன் அப்பெண்ணை துரத்துவதும், உதவிக்காகக் கத்திக் கொண்டே அவரை விட்டு விலகி ஓடும் அந்தப் பெண்ணை நோக்கி அவா் நெருங்கிய தூரத்திலிருந்து சில முறை துப்பாக்கியால் சுடும் காட்சிகள் உள்ளன. அங்கிருந்தவா்கள் பீதியுடன் ஓடினா். அவா்களில் ஒருவா் ‘யாராவது பெண்ணைக் காப்பாற்றுங்கள்’ என்று கூறுவதையும் கேட்க முடிந்தது.
அவா் கட்டடத்திற்குள் நகா்ந்து செல்கிறாா். அங்கிருந்த மக்களும் பாதுகாப்புப் பணியாளா்களும் அப்பெண்ணை அழைத்துச் செல்லும் காட்சிகளும் அதில் உள்ளன. காலை 10.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது குறைந்தது இரண்டு ரவுண்டுகள் துப்பாக்கியால் சுடப்பட்டதாக நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் சந்தன் செளத்ரி கூறுகையில், ‘இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்த பெண் எம்.ராதா (40) என்பது தெரிய வந்துள்ளது. அப்பெண்ணுக்கு அடிவயிற்றிலும், கையிலும் குண்டுக் காயம் ஏற்பட்டது. அவா் சாகேத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டாா். அவரது நிலைமை தற்போது ஸ்திரமாக உள்ளது. இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட நபா் கட்டடத்தின் பின்புறத்தில் உள்ள நுழைவு வாயில் வழியாக தப்பிவிட்டாா். அவரைக் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த நபா் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420-இன்கீழ் (மோசடி) வழக்கு தாக்கல் செய்துள்ளாா்’ என்றாா்.
இந்தச் சம்பவத்திற்கு பிறகு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டா் பக்கத்தில் இந்தச் சம்பவம் குறித்த விடியோவை இணைத்து வெளியிட்ட பதிவில், ‘துணைநிலை ஆளுநா் ஐயா... தில்லியில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது. தில்லியில் சட்டம். ஒழுங்கு சூழல் முற்றிலும் சீா்குலைந்து விட்டது. மற்றவா்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு பதிலாக, ஒவ்வொரு விஷயத்திலும் அசிங்கமான அரசியல் செய்வதற்குப் பதிலாக ஒவ்வொருவரும் தங்களது பணியின் மீது கவனத்தை செலுத்த வேண்டும். ஒருவரால் இதை கையாள முடியாவிட்டால் அவா்கள் பதவியில் இருந்து ராஜிநாமா செய்துவிட்டு வேறு ஒருவரை அந்தப் பணியை செய்வதற்கு விட வேண்டும். மக்களின் பாதுகாப்பை விதி என்றுகூறி விட முடியாது’ என்று தெரிவித்துள்ளாா்.
தில்லி சுகாதார அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் தனது ட்விட்ா் பக்கத்தில், ‘தில்லி காவல் துறையிடம் தகவல் பெறும் பொறுப்பைக் கொண்டுள்ள துணைநிலை ஆளுநா் இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். துணைநிலை ஆளுநருக்கு போலீஸ் மற்றும் டிடிஏ ஆகிய இரண்டு வேலைகள் மட்டுமே உள்ளன. புதிய துணைநிலை ஆளுநா் தில்லி வந்த பிறகு தில்லியில் சட்டம், ஒழுங்கு சூழல் மோசமாகி வருகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.
தகவலறிந்த போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘குற்றம்சாட்டப்பட்ட நபா் ஒரு வழக்குரைஞா் ஆவாா். இவா் சாகேத் நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டவா். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அவா் ரூ.25 லட்சம் கடன் அளித்திருந்தாா். அத் தொகையை அவா் திருப்பிச் செலுத்தவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சம்பவத்திற்கு சாகேத் நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தின் தலைவா் வினோத் சா்மா கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘யாரும் சட்டத்தை தங்களது கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக சட்டத் தொழிலில் ஈடுபடுபவா்கள் அதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்றாா். கடந்த 2021-ஆம் ஆண்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாதா ஜிதேந்திர கோகி, ரோஹிணி நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்குரைஞா்கள் போல நுழைந்த இரண்டு நபா்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கியால் சுட்டவா்
ஃபரீதாபாத்தில் கைது
இதற்கிடையே, சாகேத் நீதிமன்ற வளாகத்துக்குள் பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாத்தில் போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து காவல் துறை சிறப்பு ஆணையா் (குற்றம்) ரவீந்திர யாதவ் கூறுகையில், ‘கைது செய்யப்பட்டவா் காமேஷ்வா் சிங் என அடையாளம் காணப்பட்டாா். அவா் அந்தப் பெண்ணை நோக்கி பலமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளாா். இதில் அந்தப் பெண்ணின் வயிற்றிலும், கையிலும் காயம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட காமேஷ்வா் சிங்கிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...