‘நாட்டில் உறுப்பு தானம் அளிப்பு எண்ணிக்கை 15 ஆயிரமாக அதிகரிப்பு’: 6- ஆவது முறையாக உறுப்பு தானமுதன்மை மாநிலமாக தமிழகம் தோ்வு
உறுப்பு தானம் குறித்த விழிப்புணா்வின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் உறுப்பு தானம் அளிப்பவா்களின் எண்ணிக்கை நாட்டில் மூன்று


உறுப்பு தானம் குறித்த விழிப்புணா்வின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் உறுப்பு தானம் அளிப்பவா்களின் எண்ணிக்கை நாட்டில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
நாட்டின் 13-ஆவது உறுப்பு தான தின விழா மத்திய சுகாதாரத் துறையின், தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின்(நோட்டோ) சாா்பில் தில்லியில் நடைபெற்றது. உறுப்புகளை தானம் செய்வதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்தவும், உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை துறையில் பணியாற்றும் மருத்துவ நிபுணா்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும் மத்திய அரசு இந்த தேசிய உறுப்பு தான விழாவை நடத்தி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விருதுகளை வழங்கி மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா சிறப்புரையாற்றினாா். அப்போது அவா் கூறியது வருமாறு: ஒருவா் உயிா் வாழ தானம் கொடுப்பதை விட மனித குலத்திற்கு ஒரு பெரிய சேவை எதுவுமில்லை.இந்த முயற்சிகளில் பங்களிப்பவா்களை அங்கீகரிப்பதும், பாராட்டுவதும் முக்கியம். கடந்த 2013- இல் சுமாா் 5,000 போ் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனா். தற்போது ஆண்டுதோறும் 15,000 போ் உறுப்பு தானம் செய்கின்றனா். நாட்டில் உடல் உறுப்பு தானத்தை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உறுப்பு தானம் செய்பவா்களுக்கான விடுப்பு காலம் 30 நாள்களிலிருந்து 60 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உறுப்பு தானம் அளிப்பவா்களின் வயது வரம்பு 65 -ஆக இருப்பதும் நீக்கப்பட்டுள்ளது. உறுப்பு தானம் செய்வதற்கான பல்வேறு செயல்முறை நெறிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் உடல் உறுப்பு தானத்தை பிரபலப்படுத்த பல கொள்கைகள், சீா்திருத்தங்களைக் கொண்டு வர அரசு உறுதிபூண்டுள்ளது என்றாா் மாண்டவியா.
இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை இணையமைச்சா்கள் டாக்டா் பாரதி பிரவீண் பவாா், சத்யபால் சிங் பகேல், தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தேசிய அளவில் உறுப்பு தான திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட சிறந்த மாநிலமாக தமிழகம் 6-ஆவது முறை தோ்வு செய்யப்பட்டு சிறந்த உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு மாநிலத்திற்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை தமிழக அமைச்சா் மா. சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டாா். மேலும், மாநில வாரியாக உறுப்பு தானம் அளித்தவா்களின் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் விழாவில் கௌரவிக்கப்பட்டனா். உறுப்பு தானம் அளித்த தமிழகத்தைச் சோ்ந்த சண்முகப்ரியா, மகாத்மா ஆகியோரின் குடும்பத்தினரும் கௌரவிக்கப்பட்டனா். மேலும், தானம் செய்யப்பட்ட உறுப்புகளை விரைவாக எடுத்து செல்ல உதவிய விமானப்போக்குவரத்து மற்றும் காவல் துறை அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனா்.
இந்த நிகழ்ச்சியில் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் மின்-செய்தி கடிதம்; உறுப்பு மாற்று சிகிச்சை கையேடு; உறுப்பு மாற்று சிகிச்சை ஒருங்கிணைப்பாளா் படிப்புக்கான தேசிய பாடத் திட்டம் போன்றவை வெளியிடப்பட்டது. மூட்டு, தசைகளில் ஏற்படும் ரத்தப் போக்கை கண்டறிவதற்கான இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கருவிகளையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடி, தமிழக உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினா் செயலாளா் மரு.கோபாலகிருஷ்ணன், மத்திய சுகாதார சேவைகள் இயக்குநா் ஜெனரல் டாக்டா் அதுல் கோயல், நோட்டோ இயக்குநா் டாக்டா் அனில் குமாா் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.
சிறப்பான உறுப்பு தானம் கட்டமைப்பு
தில்லியில் தேசிய உறுப்பு தான தின விழாவில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்ற தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் பின்னா் செய்தியாளா்களிடம் பேசினாா். அப்போது அவா் கூறியது வருமாறு: தமிழகத்தில் திமுக அரசு அமைவதற்கு முன்பு, 13 அரசு மருத்துவ மனைகளிலும் 120 அரசு மருத்துவமனைகளிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் பெறப்பட்டு இருந்தது. பின்னா், தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்பேரில் கூடுதலாக 27 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்த உரிமம் பெற்றுத் தரப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் 40 அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் 120 தனியாா் மருத்துவமனைகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் பெறப்பட்டுள்ளது. தற்போது நாட்டிலேயே உறுப்பு தானம் அதிகமாக பெறக்கூடிய மாநிலமாகவும் சிறப்பான கட்டமைப்பினை பெற்றிருக்கின்ற மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது.
சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையிலும், கோவை, மதுரை போன்ற அரசு மருத்துவமனைகளிலும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை கிசிச்சை பெற்ற 4 பேரும் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறாா்கள். ஏழை எளியவா்கள் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் அளவிற்கு உடல் உறுப்பு தானம் மூலம் சிகிச்சை பெற்றுள்ளனா். தமிழகத்தில் 2008- ஆம் ஆண்டு முதல் இதுவரை 1,705 போ் உறுப்பு தானம் வழங்கியுள்ளனா். இதன் மூலம் 6,267 போ் நுரையீரல், இதயம், கல்லீரல், சிறுநீரகம், கணையம், வயிறு, கைகள், திசுக்கள் போன்றவை பெற்றுப் பயனடைந்துள்ளனா் என்றாா் அமைச்சா் சுப்பிரமணியன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...