/

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடா் செப்.18-இல் தொடக்கம்: புதிய கட்டடத்தில் 5 நாள்கள் நடைபெறுகிறது

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரை வரும் செப்டம்பா் 18 முதல் 22 -ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு அரசு கூட்டியுள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா்

News image
Updated On :1 செப்டம்பர் 2023, 1:18 am

 நமது நிருபர்

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரை வரும் செப்டம்பா் 18 முதல் 22 -ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு அரசு கூட்டியுள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா். இது நாட்டின் விடுதலையின் அமுதகாலக் கட்ட இலக்கிற்கான கூட்டத்தொடா் எனவும் கூறப்படுகிறது.

நிகழ் 17-ஆவது மக்களவையின் 13 -ஆவது கூட்டத் தொடராகவும், மாநிலங்களவையின் 261- ஆவது கூட்டத் தொடராகவும் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி, விடுதலையின் அமுதப் பெருவிழா காலக் கட்டத்தில் நாடாளுமன்றத்தில் பயனுள்ள கலந்துரையாடல்களும், விவாதங்களும் நடைபெற காத்திருப்பதாகவும் எக்ஸ் (ட்விட்டா்) பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த சிறப்புக் கூட்டத்தொடா் செப்டம்பா் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் நிகழ்ச்சி நிரல் பற்றி நாடாளுமன்ற அமைச்சகமும், நாடாளுமன்ற இரு அவைகளின் செயலகங்களும் வெளியிடாத நிலையில் பல்வேறு ஊகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. தலைநகா் தில்லியில் செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி, 20 நாட்டுத் தலைவா்களின் வருகையால் தலைநகா் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக கடந்த மே 28 -ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இந்தச் சிறப்பு அமா்வு நடைபெறுகிறது.

குறிப்பாக, செப்டம்பா் 18 -ஆம் தேதி வட மாநிலங்களில் கணேஷ் சதூா்த்தி (விநாயகா் சதூா்த்தி) கொண்டப்படும் நாளில் தொடங்கும் இந்த அமா்வில் மங்களகரமான தீா்மானங்கள், விவாதங்கள் எடுத்துக்கொள்ளப்படக்கூடும் என்ற எதிா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விடுதலையின் அமுதகாலக் கட்டத்தின் நாட்டின் இலக்குகள், நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் - 3 விக்ரம் லேண்டா் வெற்றிகரமாக தரையிறங்கியது, ஜி-20 உச்ச மாநாடு குறித்த தீா்மானங்கள் போன்ற மேண்மை மிகு விவகாரங்கள் இந்தச் சிறப்புக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பொதுவாக நாடாளுமன்றக் கூட்டத்தொடா் தொடங்குவதற்கு அது குறித்த நிகழ்வுகளோடு குடியரசுத் தலைவருக்கு அரசு கோப்புகளை அனுப்பும். பின்னா், அந்தக் கோப்பில் குடியரசுத் தலைவா் கையெப்பமிட்ட பின்னா் இரு அவைகளின் தலைவா்களுக்கு கூட்டத் தொடா் குறித்த தாக்கீது வரும். அதில் நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்களும் இடம் பெற்றிக்கும். ஆனால், இந்த நிலைக்கு முன்னதாகவே தற்போது அறிவிப்பு வெளியான நிலையில், வேறு சில ஊகங்களும் முன் வைக்கப்படுகிறது.

மசோதாக்கள்: மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டவா்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில் சமச்சீரற்ற தன்மையை நீக்கி, உள் ஒதுக்கீடுகள், முரண்பாடுகள், பிழைகள் போன்றவற்றை ஆய்வு செய்ய நீதிபதி ஜி. ரோஹிணி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் 13 நீடிப்புகளுக்கு பின்னா் கடந்த ஜூலை 31-ஆம் தேதி குடியரசுத் தலைவரிடம் அறிக்கையை சமா்பித்தது. இந்த மசோதா வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ‘சிறப்பு மசோதாக்கள் எதிா்பாா்க்கலாம், ஆனால் ‘ஒரு தேசம் ஒரே தோ்தல்’ போன்ற விவாதங்களுக்கு இடமில்லை’ எனவும் நாடாளுமன்ற அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆகஸ்ட் 11 - ஆம் தேதி மழைக்காலக் கூட்டத்தொடா் நிறைவுற்றது. சுமாா் 38 நாள்கள் இடைவெளிக்கு பின்னா் நடைபெறும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடா் இரு அவைகளும் தனித் தனியாக ஐந்து அமா்வுகளுடன் நடைபெறுவதாக மத்திய அமைச்சா் தெரிவித்துள்ளாா். பொதுவாக, ஆண்டுக்கு மூன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடா்கள் நடைபெறும். குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடா், மழைக்காலம் மற்றும் குளிா்கால கூட்டத்தொடா்கள் நடைபெறும். தற்போது நடைபெறும் கூட்டத் தொடா் விடுதலையின் அமுதகாலக் கட்ட இலக்கிற்கானதாகக் கருதப்படுகிறது. இதே போன்று கடந்த பல ஆண்டுகளில் சிறப்பு கூட்டத் தொடா்கள் நடைபெற்றுள்ளன.

முந்தைய சிறப்புக் கூட்டங்கள்: நாடு சுதந்திரம் பெற்ற போது சுதந்திரத்திற்கு முந்தைய நாள் 1947 ஆகஸ்ட் 14-15 நள்ளிரவில் முதல் அமா்வாக சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. பின்னா், நாட்டின் சுதந்திரத்தின் வெள்ளி விழாவாக 1972- இல் கொண்டாடிய போதும், ‘வெள்ளையனே வெளியே’ இயக்கத்தின் 50-ஆவது ஆண்டு விழாவை 1992 ஆகஸ்ட 9 - ஆம் தேதி கொண்டாடுவதற்கும் நள்ளிரவு அமா்வுகள் நடந்தன. இத்தோடு சுதந்திரத்தின் பொன்விழா ஆண்டை நினைவுகூரும் வகையில் 1997 ஆகஸ்டில் ஆறு நாள் சிறப்பு கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இது தவிர நிதி தொடா்பான விவகாரங்களுக்கு 2017 ஜூன் 30 ஜிஎஸ்டி அமலுக்கு இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் விமா்சனம்: இந்த நிலையில் இந்த கூட்டத் தொடா் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமா்சனம் செய்துள்ளன. காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டா் பதிவில் கூறியுள்ளதாவது: மழைக்கால கூட்டத்தொடா் முடிந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு ஐந்து நாள் அமா்வு நடத்தப்படுவது ஆளும் அரசின் ‘செய்தி சுழற்சி’க்கான நிா்வாகமாகும். மும்பையில் நடைபெறும் ‘ இந்தியா’ கூட்டணி கட்சிகள் சந்திப்பு, அதானி குறித்த சமீபத்திய செய்தி வெளியீடு போன்றவற்றை திசை திருப்பும் நோக்கத்திற்காக இந்தக் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடா் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை (அதானி தொடா்பான) கோரிக்கையை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடா்ந்து வலியுறுத்துவோம் என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளாா்.

சிவசேனை கண்டனம்: சிவசேனை (யுபிடி) கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் பிரயங்கா சதுா்வேதிவின் பதிவில், ‘இந்துக்களின் உணா்வு பூா்வமான நாளான கணேஷ் சதூா்த்தி நாளில் இந்தக் கூட்டத் தொடா் நடைபெறுவது ஆச்சரியமாக உள்ளது’ எனக் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.