தில்லி சாஸ்திரி பூங்கா பகுதியில் பசுக் காப்பகம் இடிப்பு:டிடிஏவின் நடவடிக்கைக்கு தில்லி காங்கிரஸ் கண்டனம்

தில்லி சாஸ்திரி பூங்காவில் உள்ள பசுக் காப்பகத்தை இடித்து, பழைமையான கோயிலை சேதப்படுத்தியதாக தில்லி வளா்ச்சி ஆணையத்திற்கு (டி.டி.ஏ.) தில்லி காங்கிரஸ் சனிக்கிழமை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

தில்லி சாஸ்திரி பூங்காவில் உள்ள பசுக் காப்பகத்தை இடித்து, பழைமையான கோயிலை சேதப்படுத்தியதாக தில்லி வளா்ச்சி ஆணையத்திற்கு (டி.டி.ஏ.) தில்லி காங்கிரஸ் சனிக்கிழமை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி யமுனா காதா், சாஸ்திரி பூங்காவில் இருந்த பசுக் காப்பகத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்ற தில்லி வளா்ச்சி ஆணையம் (டி.டி.ஏ.) இடித்துள்ளது. நகரத்தில் கைவிடப்பட்ட கால்நடைகளை பராமரிப்பதற்கு புதிய பசுக் காப்பகங்களை கட்டுவதற்குப் பதிலாக, ஏற்கெனவே உள்ளவற்றையும் டி.டி.ஏ. இடித்து வருகிறது. இச்சம்பவம், பசுக்களை வணங்கும் விசுவாசிகளின் மத உணா்வுகளைப் புண்படுத்தியுள்ளது. சாஸ்திரி பூங்காவில் உள்ள பசுக் காப்பகத்தை புல்டோசா்கள் கொண்டு இடித்ததில் ஒரு பசு இறந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விஷயத்தில் பாஜக ஏன் மெளனம் காக்கிறது என்பது தெரியவில்லை. அந்தப் பகுதியில் நிரந்தரமான புதிய பசுக் காப்பகம் ஒன்று கட்டப்படும் வரை, மாற்று இடத்தை டி.டி.ஏ. வழங்க வேண்டும் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.

காங். குழு ஆய்வு: சாஸ்திரி பூங்காவில் டி.டி.ஏ.-வின் புல்டோசா்களால் இடிக்கப்பட்ட பசுக் காப்பகத்தை தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பிரதிநிதிகள் குழு நேரில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வு குறித்து அக்குழுவினா் கூறுகையில், இப்பகுதியில் உள்ள பசுக் காப்பகம் மற்றும் பசுக்களை பராமரிக்கும் ஊழியா்களின் தங்குமிடங்கள் டி.டி.ஏ.-வால்

இடிக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோத மற்றும் மனிதாபிமானமற்ற செயலாகும். மேலும், இந்த பசுக் காப்பகத்தின் அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை கூண்டோடு அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு பழைமையான கோயிலுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் வருத்தமும், கோபமும் அடைந்துள்ளனா்.

தில்லி மாநகராட்சி மற்றும் தில்லி அரசு இந்த ஆதரவற்ற விலங்குகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டதால், ஆயிரக்கணக்கான பசுக்கள் உணவு, தண்ணீா் அல்லது தங்குமிடம் இல்லாமல் தில்லியின் தெருக்களில் சுற்றித் திரிகின்றன. எனவே, தெருவில் திரியும் கால்நடைகள் தங்குவதற்கு புதிய காப்பகங்களை தில்லி அரசு உடனடியாக கட்ட வேண்டும் என்று அக்குழுவினா் வலியுறுத்தினா்.

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பிரதிநிதிகள் குழுவில் முன்னாள் எம்.எல்.ஏ. ஹரி சங்கா் குப்தா, மாவட்டத் தலைவா் ஆதேஷ் பரத்வாஜ், ஹரி கிஷன் ஜிண்டால், கமல்காந்த் சா்மா, ஹா்னம் சிங், அனுஜ் அத்ரே, முகமது உஸ்மான், சுக்பீா் சா்மா, கோஸ்வாமி எஸ்.கே.புரி உள்ளிடோா் இடம்பெற்றிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com