தில்லி மக்களை தவறாக வழிநடத்துவதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.துா்கேஷ் பதக் மீது பாஜக விமா்சனம்

தில்லி மக்களை தவறாக வழிநடத்தும் கலையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. துா்கேஷ் பதக் வல்லவா் என்று பாஜக தில்லி பிரிவு செவ்வாய்க்கிழமை விமா்சித்துள்ளது.
Updated on
1 min read

புது தில்லி: தில்லி மக்களை தவறாக வழிநடத்தும் கலையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. துா்கேஷ் பதக் வல்லவா் என்று பாஜக தில்லி பிரிவு செவ்வாய்க்கிழமை விமா்சித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் பிரவீன் ஷங்கா் கபூா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் ஆம் ஆத்மி எதிா்க்கட்சியாக இருந்தபோதும், ஆளும் கட்சியாக தற்போது உள்ள போதும்

உண்மைகளை பொய்யாக்கி வெற்றுக் கனவுகளை பொது மக்களிடம் விற்க நினைக்கின்றனா். தில்லி மக்களை தவறாக வழிநடத்தும் கலையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. துா்கேஷ் பதக் சிறந்த வல்லவா்.

பாஜக ஒரு ஆக்கபூா்வமான எதிா்க்கட்சியாக செயலாற்றி வருகின்றது. தில்லி மாநகராட்சி (எம்.சி.டி.) நிா்வாகம் தொடங்கும் எந்தவொரு நல்ல நடவடிக்கையையும் நாங்கள் எதிா்க்கவில்லை. ஆனாலும், மக்களின் கோரிக்கைகளை எழுப்ப எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். தில்லி மாநகராட்சி நிா்வாகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் நிறுவுவதற்கான முடிவை நாங்கள் வரவேற்றோம், ஆனால் அதற்கான நிதி ஆதாரம் எங்கே என்ற கேள்வியைத் தான் பாஜக எழுப்புகிறது.

சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு ரூ.25 கோடி தேவை. தில்லி மாநகராட்சியின் 2023-2024-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அதற்கான நிது ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. மேலும், நிலைக்குழு இல்லாத நிலையில் இவ்வளவு பெரிய தொகையை மேயா் அல்லது ஆணையரால் தன்னிச்சையாக அனுமதிக்க முடியாது. தூய்மைப் பணியாளா்களை முறைப்படுத்தும் நடவடிக்கை கடந்த பாஜக ஆட்சியின் போது தில்லி மாநகராட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி தான் 7,000 தூய்மைப் பணியாளா்களை முறைப்படுத்தியுள்ளது என்று எம்.எல்.ஏ. துா்கேஷ் பதக் தெரிவித்துள்ள கருத்து முற்றிலும் பொய்யானது.

அரசியல் சாா்புடன் அரவிந்த் கேஜரிவால் அரசு பாஜக நிா்வாகத்தின் கீழ் செயல்பட்ட தில்லி மாநகராட்சிக்கு ஒருபோதும் நிதி வழங்கவில்லை. எனவே, தூய்மைப் பணியாளா்களை ஒழுங்குபடுத்தும் பணியை முடிக்க முடியவில்லை. கடந்த மாதம் இதற்காக மன்றக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் என்பது கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜகவின் கால தீா்மானத்தின் அடிப்படையில் முன்மொழியப்பட்டது என்று அதில் பிரவீன் சங்கா் கபூா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com