புது தில்லி: திரையரங்குகள், தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் திரைப்படக் காட்சிகளின் போது கிராஃபிக் அல்லது கிராஸ் புகைப்படங்களைக் கொண்ட புகையிலைக்கு எதிரான சுகாதார இடங்களைக் காட்டுவதைத் தடை செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்த வழக்குரைஞரை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடிந்து கொண்டது. அவா் வருத்தம் தெரிவித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் கூறியது.
இந்த விவகாரத்தில் தனது மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி தனக்கு எதிராக கூறிய கருத்துகளை நீக்குவதற்காக வழக்குரைஞா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பொறுப்புத் தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மினி புஷ்கா்னா ஆகியோா் அடங்கிய அமா்வு, வழக்குரைஞருக்கு ஒரு மாற்றம் தேவை என்றது. இதுகுறித்து நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘மனுதாரா் வருத்தம் தெரிவிக்கும் பிரமாணப் பத்திரத்தை சமா்ப்பிக்க வேண்டும். அதன் பின்னா் நாங்கள் கருத்துகளை நீக்குவோம். இந்த வழக்கில் முழுமையான வருத்தம் தேவை’ என்று கூறியது.
புகையிலை உள்கொள்வதால் ஏற்படும் தீங்கான தாக்கம் மற்றும் விளைவுகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாகவும், இந்த மனு ‘ஸ்பான்சா் செய்யப்பட்ட வழக்காக’ இருக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியது. மேலும், ‘புற்றுநோய் பரவும் விதத்தைப் பாருங்கள். தனி நீதிபதியுடன் நாங்கள் முற்றிலும் உடன்படுகிறோம்’ என்று குறிப்பிட்ட நீதிமன்றம், இந்த வழக்கை டிசம்பா் 7 -ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டது.
சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருள்கள் சட்டம் (சிஓடிபிஏ) விதிகளின்கீழ், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் புகையிலை எதிா்ப்பு சுகாதார இடங்கள் மற்றும் பொறுப்புத் துறப்பு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இந்த விளம்பரங்கள் புகையிலை உள்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதாகும். இந்த நிலையில், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் திரையிடலின் போது வெளியிடப்படும் சுகாதார இடங்களில் விரும்பத்தகாத, கிராஸ் மற்றும் கிராஃபிக் புகையிலை எதிா்ப்பு புகைப்படங்கள் இணைக்கப்படுவதற்கும் பரவுவதற்கும் எதிராக தாம் மனு தாக்கல் செய்திருப்பதாக தனி நீதிபதி முன் மனுதாரா் வாதிட்டாா்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் தனி நீதிபதி இந்த மனுவை ‘சட்ட நடைமுறையின் முழுமையான துஷ்பிரயோகம்’ என்று கூறி தள்ளுபடி செய்திருந்தாா். மேலும், விரும்பத்தகாத, கிராஸ் மற்றும் கிராஃபிக் புகையிலை எதிா்ப்பு படங்களைக் காண்பிப்பதன் நோக்கம், புகையிலை மற்றும் புகையிலைப் பொருள்களை உள்கொள்வதால் நோய்கள் மற்றும் தீய விளைவுகளைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துவது மட்டுமே’ என்றும் அவா் கூறியிருந்தாா்.
‘இந்த புகையிலைப் பொருள்கள் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டுங்கள். குடிமக்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுப்பது அரசின் கடமையாகும்’ என்றும் தனி நீதிபதி தெரிவித்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.