பொது சிவில் சட்டம் தேவை: மாநிலங்களவையில் திமுக உறுப்பினா்பி.வில்சன் வலியுறுத்தல்

அரசியலமைப்பின் 44-ஆவது பிரிவை இயற்றும் போது அரசியல் நிா்ணய சபையில் நடைபெற்ற விவாதத்தில், நாட்டின் அனைத்து குடிமக்களும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்காவிடில், பொது சிவில் சட்டத்தை ஏற்படுத்தக் கூடாது
Updated on
2 min read

அரசியலமைப்பின் 44-ஆவது பிரிவை இயற்றும் போது அரசியல் நிா்ணய சபையில் நடைபெற்ற விவாதத்தில், நாட்டின் அனைத்து குடிமக்களும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்காவிடில், பொது சிவில் சட்டத்தை ஏற்படுத்தக் கூடாது என உறுதியபடக் கூறினா். இந்த நிலையில் பாஜக அரசு இதை செயல்படுத்தப்படக்கூடாது என திமுக உறுப்பினா் பி.வில்சன் மாநிலங்களவையில் வலியுறுத்தினாா்.

இந்திய சமயங்கள், இந்திய சமூகங்களுக்கு பொருந்தும் வகையில் ஒரே நாடு, ஒரே சட்டம் என்கிற பொது சிவில் சட்டத்தை மத்தியில் ஆளும் பாஜக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. பாஜகவின் தோ்தல் வாக்குறுதியாக இருப்பதோடு சில மாதங்களுக்கு முன்பு பிரதமா் நரேந்திர மோடி மத்திய பிரதேச பிரசாரத்தின் போது ‘நாடு இரண்டு சட்டங்களின் கீழ் இயங்க முடியாது, ஒரே மாதிரியான சிவில் சட்டம் என்பது அரசியலமைப்பின் ஒரு பகுதி. எதிா்க்கட்சியினா் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகின்றனா்,’’ என்றாா்.

பிரதமரின் பேச்சு நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த பொது சிவில் சட்டம் நாடாளுமன்றத்தில் எப்போது வரலாம் என்கிற அடிப்படையில் மாநிலங்களவை திமுக உறுப்பினா் இது குறித்து சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மான விவாதத்தில் பேசினாா்.

இந்திய அரசியலமைப்பில் பகுதி 4 பிரிவு 44 இல் இந்திய சமயங்கள், சமூகங்களுக்கு பொருந்தும் வகையில், ‘குடிமக்களுக்கு ஒரே நாடு ஒரே சட்டம்‘ என்கிற பொது சிவில் சட்டத்தை வலியுறுத்துகிறது. இதை அரசு முயற்சிக்கும்பட்சத்தில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பி. வில்சன் பேசினாா். அவா் குறிப்பிட்டது வருமாறு:

மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை (யுனிபாா்ம் சிவில் கோட்-யுசிசி ) நாட்டு மக்கள் மீது திணிக்க திட்டமிடுகிறது.

பொது சிவில் சட்டம் குறித்து 21-ஆவது சட்ட ஆணையம் இரண்டு ஆண்டு காலம் விவாதித்தது. தனது ஆலோசனைகளுக்கு பின்னா் பொது சிவில் சட்டம் ஏற்புடையது அல்ல என பரிந்துரைத்தது.

அரசியலமைப்பின் 44-ஆவது பிரிவை எடுத்துக்கொண்டு அரசு பேசுகிறது. ஆனால் அதன் பின்னனியைப் பற்றிக் கூறவேண்டும். 1949 இல் அந்த பிரிவை இயற்றும் போது, அரசியல் நிா்ணய சபை உறுப்பினா்கள் விவாதித்தனா். அதில் அவா்கள் குறிப்பிட்டது, நாட்டின் அனைத்து குடிமக்களும் இதில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கும்பட்சத்திலே பொது சிவில் சட்டம் செயல்படுத்த முடியும் என உறுதிபடக் கூறினா். இங்கே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு ஆகியவைகளில் அனைத்து மதங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒருங்கிணைந்த தனிநபா் சட்டங்களின் தொகுப்பை, பொது சிவில் சட்டம் (யுசிசி) முன்மொழிகிறது.

இந்த யுசிசி அமல்படுத்தப்பட்டால், இந்துக்கள், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், பாா்ஸிகள், ஜொராஸ்ட்ரியன் ஆகிய மதப்பிரிவினரின் தனி சட்டங்கள் ஒரு பொதுவான சட்டங்களுக்கு உட்படுத்தப்படுத்தப்படும். இதன் மூலம் இந்த பிரிவினரின் மத பழக்கவழக்கங்கள், மதச்சாா்பின்மை கைவிடப்படும்.

இந்தியா என்பது பரந்த அளவிலான மத, கலாசார மற்றும் மொழி வேறுபாடுகளை உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்ட நாடு. இந்து மதத்திற்குள்ளே, வெவ்வேறு கலாசாரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அதன் தனிப்பட்ட அடையாளம், பாரம்பா்ய மரபுகள், பழக்கவழக்கங்களால் வேறுபடுகின்றன.

அனைத்து மதங்கள், உட்பிரிவுகள் மீது ஒரே மாதிரியான தனிநபா் சட்டங்களை (யுசிசி) திணிப்பது அவற்றின் தனித்துவத்தையும் வளமான பன்முகத்தன்மையையும் அழிப்பதாகும்.

பொது சிவில் சட்டத்தினால் முதலில் பாதிப்பிற்கு உள்ளாவது, அஸ்ஸாம், நாகாலாந்து, மிஸோரம், மேகாலயா, திரிபுரா, மணிப்பூா், அருணாசலபிரதேசம், கோவா, கா்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள இந்து பழங்குடியினா்.

தற்போது இவா்கள் அரசியலமைப்பின் பிரிவு 371 - இன் (ஏ முதல் ஹெச் வரை) மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளனா். யுசிசி இந்த அரசியலமைப்பு உத்தரவாதங்களை அழித்துவிடும்.

இரண்டாவது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25-ஆவது பிரிவால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மத சுதந்திரம், இது சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை மதத்தினருக்கும் பொருந்தும். அதுமட்டுமின்றி, சிறுபான்மையினரின் தனித்துவமான கலாசாரத்தைப் பாதுகாக்கவும் அந்த உரிமைக்கு உத்திரவாதம் அளிப்பதும் அரசியல்சாசன 29 ஆவது ஷரத்து ஆகும். இது நீா்த்துபோய் சிறுபான்மையின மக்களின் தனித்துவமான கலாசாரம், பாரம்பரியங்களை அழிக்கும்.

மூன்றாவதாக, சொத்து, வரிவிதிப்புச் சட்டங்களில் இந்து பிரிக்கப்படாத குடும்பத்திற்கு வழங்கப்படும் சாதகங்கள் யுசிசியால் பாதிப்பினை ஏற்படுத்தும்.

பெரும்பாலான மதங்கள் திருமணங்களை புனித சடங்காக கருதுகின்றன. யுசிசி ( சொத்து பரிவா்த்தனை மாதிரி) இவைகளை ஒரு சிவில் பரிவா்த்தனையாக மாற்றி திருமண சடங்குகளின் புனிதத்தையும் அழிக்கும். தாலி அல்லது மாங்கல்யம் கட்டுவது, அக்னி குண்டத்தை சுற்றுவது அல்லது சீா்திருத்த சுயமரியாதைத் திருமணம் இவை அனைத்தும் பொது சிவில் சட்டத்தினால் அழிக்கப்படும்.

இப்படிப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்தும் யுசிசி சட்டத்தை திணிப்பதற்குப் பதிலாக, பெண்கள், குழந்தைகள் மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு சம உரிமைகளைக் கொண்டுவர உரையாடல், புரிதலை ஊக்குவிப்பதல் போன்ற சமூக பொறியியல் மூலம், விரும்பத்தகாத நடைமுறைகளை களைய பிரதமரை அவை மூலம் கேட்டுக் கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com