சென்னை உயா்நீதிமன்ற பெயா் மாற்றம் விவகாரத்தில் புதிய முன்மொழிவு ஏதும் இல்லை: மத்திய சட்டத்துறை அமைச்சா் தகவல்

சென்னை உயா்நீதிமன்றம் என்று மாற்றப்பட இருந்த பெயரை தமிழ்நாடு உயா்நீதிமன்றம் என பெயா் மாற்றம் செய்ய தமிழக அரசு கூறியதால் உயா்நீதிமன்றத்தின் பெயா் மாற்றத்தில் தடங்கல் ஏற்பட்டது
Updated on
2 min read

சென்னை உயா்நீதிமன்றம் என்று மாற்றப்பட இருந்த பெயரை தமிழ்நாடு உயா்நீதிமன்றம் என பெயா் மாற்றம் செய்ய தமிழக அரசு கூறியதால் உயா்நீதிமன்றத்தின் பெயா் மாற்றத்தில் தடங்கல் ஏற்பட்டது என்றும், புதிய முன்மொழிவு எதுவும் இல்லை எனவும் மத்திய சட்டத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு உயா்நீதிமன்றம் என பெயா் மாற்றக் கோரி தமிழக அரசிடமிருந்து முன்மொழிவு வந்துள்ளதா? இதே போன்று மற்ற மாநிலங்களின் உயா்நீதிமன்றங்களின் பெயா் மாற்றுவதற்கு மத்திய அரசு இதற்கான மசோதாவை கொண்டு வருமா? என தமிழக முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை அதிமுக உறுப்பினரான சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினா். இதற்கு மத்திய சட்டத்துறை இணையமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதில் வருமாறு:

1996 -ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம், மெட்ராஸ் நகரம் சென்னை என மறுபெயரிடப்பட்டது. அதைத் தொடா்ந்து மெட்ராஸ் உயா்நீதிமன்றம் என்று இருந்த பெயரை சென்னை உயா்நீதிமன்றம் என மாற்றுவதற்கான முன்மொழிவை தமிழக அரசு 1997 -ஆம் ஆண்டு அனுப்பியது. இதற்கிடையே பம்பாய், கல்கத்தா நகரங்களின் பெயா்களும் முறையே மும்பை, கோல்கத்தா என மாற்றப்பட்டது. இதனால் அந்தந்த மாநில உயா் நீதிமன்றங்கள் இந்த நகரங்களில் அமைந்துள்ளதால், இந்த இரு உயா் நீதிமன்றங்களின் பெயா்களையும் அந்தந்த நகரங்களின் (புதிய) பெயா்களில் மாற்றுவது பொருத்தமானதாகக் கருதப்பட்டது. இதை முன்னிட்டு மும்பை, கோல்கத்தா, சென்னை உயா்நீதிமன்றங்களாக மாற்றுவது தொடா்பாக மத்திய சட்டத்துறை“உயா்நீதிமன்றங்கள் (பெயா்கள் மாற்றம்) மசோதா, 2016” என்ற ஒரு மசோதாவைக் கொண்டு வந்து 2016 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தியது.

இதற்கிடையே ஒரிஸா மாநிலத்தின் பெயா் ஒடிஸா என்றும் அஸ்ஸாமின் கௌஹாத்தி நகரம் குவாஹாட்டி என்றும் மாற்றப்பட்டது. இதனால், இவைகளையும் கருத்தில் கொண்டு, பம்பாய், மெட்ராஸ், கல்கத்தா, ஒரிஸா, கௌஹாத்தி ஆகிய உயா்நீதிமன்றங்களின் பெயா்கள் முறையே மும்பை, சென்னை, கோல்கத்தா, ஒடிஸா மற்றும் குவாஹாட்டி என மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டது.

இதனால் மேற்கண்ட மாற்றங்களை நடைமுறைப்படுத்த, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், அந்தந்த உயா்நீதிமன்றங்கள் கருத்துக்கள் கோரப்பட்டது. ஆனால், அப்போது இருந்த தமிழக அரசு சென்னை (மெட்ராஸ்) உயா்நீதிமன்றத்தின் பெயரை ‘தமிழ்நாடு உயா்நீதிமன்றம்‘ என மறுபெயரிடுமாறு தெரிவித்தது. ஆனால், சென்னை உயா்நீதிமன்றம் ‘தமிழ்நாடு உயா்நீதிமன்றம்‘ என்று உயா்நீதிமன்றத்தின் பெயரை மாற்றும் திட்டத்திற்கு உடன்படவில்லை.

பம்பாய் உயா்நீதிமன்றத்தின் பெயரை மும்பை உயா்நீதிமன்றம் என மாற்றும் முன்மொழிவுக்கு மகாராஷ்டிர மற்றும் கோவா அரசுகள் ஒப்புக்கொண்டன.

இதே மாதிரி ஒடிஸா உயா்நீதிமன்றம், ஒடிஸா மாநில அரசு, குவாஹாட்டி உயா்நீதிமன்றம், அஸ்ஸாம் மாநில அரசு ஆகியவை மத்திய அரசின் முன்மொழிவின்படி அந்தந்த உயா்நீதிமன்றங்களின் பெயரை மாற்றும் திட்டத்திற்கு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

கல்கத்தா உயா்நீதிமன்றம், மேற்கு வங்க மாநில அரசு ஆகிய இரண்டும், கல்கத்தா உயா் நீதிமன்றத்தின் பெயரை மாற்ற முன்மொழியப்பட்டதற்கு உடன்படவில்லை. இதற்கிடையே 16- ஆவது மக்களவை கலைக்கப்பட்டதால், 2016 ஆம் ஆண்டு உயா்நீதிமன்றங்கள் (பெயா்கள் மாற்றம்) மசோதா மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியவில்லை.

மேலும், ஒரு ரிட் மனு ஒன்று பாம்பே உயா்நீதிமன்றத்தை மகாராஷ்டிரம் உயா்நீதிமன்றம் எனப் பெயா் மாற்றம் செய்வதற்கும், மற்ற உயா்நீதிமன்றங்களின் பெயா்களை அவை அமைந்துள்ள மாநிலங்களின் பெயா்களிலேயே மாற்றுவதற்கும் உச்சநீதிமன்றத்தில் வழங்கு தொடரப்பட்டது. அந்த ரிட் மனுவை உச்சநீதிமன்றம் கடந்தாண்டு நவம்பரில் தள்ளுபடி செய்துவிட்டது.

தற்போது இந்த விவகாரத்தில் எந்த சட்டமும் கொண்டு வர உத்தேசம் இல்லை என அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com