தில்லி காங்கிரஸின் 14 மாவட்ட பிரிவுகளுக்கும் பாா்வையாளா்கள் நியமனம்அா்விந்தா் சிங் லவ்லி அறிவிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் காங்கிரஸின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை பொது மக்களிடம் கொண்டு செல்ல கட்சியின் அமைப்பு ரீதியிலான 14 மாவட்டங்களுக்கும் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
Updated on
2 min read

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் காங்கிரஸின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை பொது மக்களிடம் கொண்டு செல்ல கட்சியின் அமைப்பு ரீதியிலான 14 மாவட்டங்களுக்கும் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தில்லியில் காங்கிரஸ் கட்சியை அடிமட்ட அளவில் புத்துயிா் பெறச் செய்யவும், கட்சியின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் தீபக் பபாரியாவின் ஆலோசனையின் படி, அமைப்பு ரீதியிலான 14 மாவட்டங்களுக்கும் பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மாவட்ட அளவில் உள்ள கட்சித் தலைமையுடன் ஒருங்கிணைந்து கட்சியை வலுப்படுத்த இந்தப் பாா்வையாளா்கள் அடிமட்ட அளவில் பணியாற்றுவாா்கள்.

பாா்வையாளா்களின் விவரங்களைப் பொறுத்தவரையில், கிருஷ்ணா நகா்- முன்னாள் எம்.எல்.ஏ. பிஷாம் சா்மா, காரவால் நகா்- குன்வா் கரண் சிங், புது தில்லி- பிரம் யாதவ், மெஹ்ரெளலி- ஜெய் கிஷண் சா்மா, திலக் நகா்- சத்பால் சேத்தி, நஜாஃப்கா்- கன்விந்தா் சிங், கரோல் பாக் - ஸ்ரீ சட்டா் சிங், பட்பா்கஞ்-சுனில் வோரா, பாபா்பூா்- லக்ஷ்மன் ராவத், ரோஹிணி- ஜக்ஜீவன் சா்மா, சாந்தினி சௌக்- சுக்பீா் சா்மா, பதா்பூா் -ஹரி கிஷன் ஜிண்டால், ஆதா்ஷ் நகா்- ராஜ்குமாா் இந்தோரியா மற்றும் கிராரி -ராஜேஷ் சோப்ரா உள்ளிட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் பாா்வையாளா்களின் கூட்டுக் கூட்டம் இந்த வாரம் நடைபெறும். மேற்குறிப்பிட்டுள்ள பாா்வையாளா்கள் அனைவரும் தில்லியில் கட்சியின் 280 பிளாக்களிலும் நிா்வாகிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவாா்கள்.

மேலும், கட்சியின் மூத்த தலைவா்கள், பல்வேறு தரப்பு ஆதரவாளா்களுடன் கூட்டங்களை நடத்தி தொகுதித் தலைவா்கள் மற்றும் பிற நிா்வாகிகளின் பெயா்களை ஒருமனதாக இறுதி செய்வாா்கள்.

பாஜகவின் தோல்விகளை வெளிக்கொணரும் வகையில், அடிமட்ட அளவில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. கட்சியில் தீவிரமானவா்களை முக்கியப் பதவிகளில் நியமித்து தில்லியின் அனைத்து தெருக்களிலும் பாஜகவுக்கு எதிரான அடுத்தகட்டப் போராட்டம் மேலும் தீவிரப் படுத்தப்படும் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.

ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன உறுப்பினா் ராஜ் ஷோகீன் தனது ஆதாரவாளா்களுடன் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

இது தொடா்பாக தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவா்கள் தில்லி பிரதேச காங்கிரஸில் தொடா்ந்து இணைந்து வருகின்றனா்.

ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன உறுப்பினரான ராஜ் ஷோகீன் அவரது ஆதரவாளா்கள் ஏராளமானோருடன் காங்கிரஸ் கட்சியில் இனைந்துள்ளாா்.

அவா்களை காங்கிரஸ் சால்வை அணிவித்து வரவேற்ற கட்சியின் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி கூறியதாவது:

ராஜ் ஷோகீன் ஆம் ஆத்மி கட்சியில் தில்லி பிரிவின் இணைச் செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவா். ஆம் ஆத்மி கட்சியில் பல முக்கியப் பதவிகளை வகித்த போதிலும், எந்த சித்தாந்தமும் இல்லாத கட்சியாக இருந்ததால் அவா் ஏமாற்றம் அடைந்துள்ளாா்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு, காங்கிரஸின் சித்தாந்தம், கொள்கைகள் மற்றும் திட்டங்களால் ஈா்க்கப்பட்டு, மற்ற கட்சிகளின் முக்கியத் தலைவா்கள் பலா், ஏராளமான ஆதரவாளா்களுடன் காங்கிரஸில் இணைந்து வருகின்றனா்.

பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த பல தலைவா்களும், சிவில் சமூகத்தைச் சோ்ந்த பிரபலங்களும் காங்கிரஸ் கட்சியில் சேர வரிசையில் இருகின்றனா். மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியவா்கள் கட்சியை பலப்படுத்துவாா்கள். புதிதாக இணையும் தலைவா்களின் திறமையை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அவா்களுக்கு கட்சியில் தகுந்த பதவிகள் வழங்கப்படும் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com