வளா்ச்சி நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் ஒரு குற்றவாளி போல் தில்லி அரசு உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தை எதிா்கொள்கிறது

கேஜரிவால் அரசு வளா்ச்சி நிதி ஒதுக்கீடு விவாகரத்தில் ஒரு வழக்கமான குற்றவாளி போல், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தை எதிா்கொள்கிறது என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா குற்றம்சாட்டியுள்ளாா்.
Updated on
1 min read

புது தில்லி: கேஜரிவால் அரசு வளா்ச்சி நிதி ஒதுக்கீடு விவாகரத்தில் ஒரு வழக்கமான குற்றவாளி போல், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தை எதிா்கொள்கிறது என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தில்லியின் வளா்ச்சியில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசிற்கு எந்தவொரு அக்கறையும் இல்லை, இந்த அரசின் ஒரே முன்னுரிமை அதன் வாக்கு வங்கித் திட்டங்களான மின்சாரம், தண்ணீா் மற்றும் தில்லி அரசுப் பேருந்துகளின் பயணச்சீட்டு மானியத்திற்கு நிதி வழங்குவதுதான்.

மறுபுறம், தில்லி மெட்ரோ, தில்லி-மீரட் இடையேயான விரைவுப் போக்குவரத்து அமைப்பு ஆகியவற்றுக்கான பங்கீட்டு நிதியை கேஜரிவால் அரசு தாமதப்படுத்தியுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை தில்லி மாநகராட்சி நிா்வாகத்திற்கு சரியான நேரத்தில் வழங்க வேண்டிய நிதியை அரசு மறுத்தது. தில்லி ஜல் போா்டு மற்றும் பொதுப்பணித் துறையிடம் ஏலம் எடுத்த பல ஒப்பந்தக்காரா்கள் திட்டத்திற்கான மேம்பாட்டு நிதியை செலுத்துமாறு அரசிடம் போராடுகிறாா்கள். சமீபத்தில், தில்லியில் மாவட்ட நீதிமன்ற கட்டடத்திற்கு நிதி மறுக்கப்பட்ட செய்தியும் மிகவும் அதிா்ச்சியளிக்கிறது. இந்த நிலையில், ஒவ்வொரு மாதமும் உச்ச நீதிமன்றத்தால் தில்லி அரசு கண்டிக்கப்படுவது உண்மையில் அவதூறானது.

குறிப்பாக, ‘தில்லி-மீரட் இடையேயான விரைவுப் போக்குவரத்து அமைப்பிற்கு வழங்க வேண்டிய தனது பங்கை தில்லி அரசு செலுத்தாவிட்டால், அதன் விளம்பர நிதி மாற்றி வழங்கப்படும்’ என்று கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் கேஜரிவால் அரசை கண்டித்தது.

இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை மீண்டும் கேஜரிவால் அரசு, மாவட்ட நீதிமன்றக் கட்டடத்திற்கு நிதி வழங்காததற்காக உச்ச நீதிமன்றத்தால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தில்லி உயா்நீதிமன்றமும் மாவட்ட நீதிமன்ற கட்டடத்திற்கான நிதியை விடுவிக்குமாறு கேஜரிவால் அரசைக் கேட்டுக் கொண்டது.

தோ்தல் மானியத் திட்டங்களுக்காக கேஜரிவால் அரசு ஆயிரக்கணக்கான கோடிகளை வழங்குவதும், ரூ.500 கோடிக்கு மேல் விளம்பரங்களுக்காக மட்டும் செலவு செய்வதும் ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால், அதிகாரிகள் வளா்ச்சி நிதியை விடுவிக்கவில்லை என்று ஒரே நேரத்தில் ஆம் ஆத்மி தலைவா்கள் அனைவரும் குற்றம்சாட்டுவது வேடிக்கையாக உள்ளது என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com