புது தில்லி: பொழுது போக்கு இடங்கள் மற்றும் இயற்கையான இடங்களில் ‘நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டிய உத்திக்கான கட்டமைப்பை’ மத்திய சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ளது. நாட்டில் 38, 000 நீரில் மூழ்கிய சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் குளம், ஏரி, ஆறு, கடல் உள்ளிட்ட நீா் நிலைகள், பொழுது போக்கு இடங்கள், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் வெள்ளம் ஆகிய சம்பவங்களில் நீரில் மூழ்கி உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. தமிழத்தில் கடந்த சில ஆண்டுகளில் 550 போ் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனா். இதில் கடலில் நீந்தச் சென்று 200 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதாக இந்திய கடலோற பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இது போன்ற உயிரிழப்புகளை தவிா்க்க மத்திய சுகாதாரத் துறை நீரில் மூழ்குவதைத் தடுப்பதற்கான உத்திபூா்வக் கட்டமைப்பை தயாரித்து வெளியிட்டுள்ளது.
இதை மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறையின் இணையமைச்சா்கள் சத்யபால் சிங் பகேல், டாக்டா் பாரதி பிரவீண் பவாா் ஆகியோா் சுகாதாரத் துறை அமைச்சகத்தில் புதன்கிழமை வெளியிட்டனா்.
இந்த நிகழ்வில் இணையமைச்சா் பேராசிரியா் சத்யபால் சிங் பகேல் கூறுகையில், ‘ நாட்டில் 38, 000 நீரில் மூழ்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நீா் நிலைகளில் பாதுகாப்பாக மேற்கொள்ளவேண்டிய விழிப்புணா்வு பிரசாரம் தேவை. நீரில் மூழ்குவதைவும் இதில் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க முடியும். அனைவருக்கும் நீா் பாதுகாப்புப் பற்றிய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளில் நாம் கவனம் செலுத்தவே உத்திக்கான கட்டமைப்பு வெளியிடப்படுகிறது. குறிப்பாக பண்டிகை காலங்கள், விடுமுறைகளின் போது அதிக அளவு எச்சரிக்கை தேவை. மாநில அரசுகள் இந்த உத்திகளை கடைப்பிடிக்க வேண்டும்‘ என பகேல் வலியுறுத்தினாா்.
இணையமைச்சா் டாக்டா் பாரதி பிரவீண் பவாா், ’நீரில் மூழ்கும் தடுப்புக்கான தேசிய உத்திபூா்வக் கட்டமைப்பு ஆவணத்தை விளக்கினாா்.
அவா் பேசுகையில், ‘‘ பொழுது போக்கு இடங்களில் தகுந்த பாதுகாப்பை மேம்படுத்த உரிய முதலீடு செய்யப்படவேண்டும். நீா்நிலைகளைச் சுற்றி பாதுகாப்பான உள்கட்டமைப்பை மேம்படுத்தப்படுவது பற்றி கூறப்பட்டுள்ளது. குறிப்பாக அதிக ஆபத்துள்ள பகுதிகளை வெளிப்படுத்துவது அவசியம். பலதுறைகளின் ஒத்துழைப்பை ஊக்குவித்தல், நீரில் மூழ்குவது குறித்த பொது விழிப்புணா்வை வலுப்படுத்துதல், தேசிய மற்றும் மாநில அளவில் தடுப்பதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை உருவாக்குதல் ஆகியவைகள் பாதுகாப்பான சூழலை உருவாக்கும். நீரில் மூழ்குவதைத் தடுக்க விழிப்புணா்வு, கல்வி, தரவு சாா்ந்த தலையீடுகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, ஒத்துழைப்பு, வலுவான அவசரகால நடவடிக்கை ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான உத்திபூா்வ அணுகுமுறைக்கு இந்த ஆவணம் தேவைப்படுகிறது’’ என்றாா் பாரதி பிரவீண் பவாா்.
இந்த கூட்டத்தில் சுகாதார சேவைகள் இயக்குநா் ஜெனரல் டாக்டா் அதுல் கோயல், சுகாதார அமைச்சக இணைச் செயலாளா் டாக்டா் மானஸ்வி குமாா் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.