பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நிலப் பதிவேடுகள் எண்ம மயமாக்கல் அடிப்படைத் தேவை: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் நில வளங்களை நம்பியிருப்பதால், அந்த மக்களின் வளா்ச்சிக்கு நிலப் பதிவேடுகள் எண்ம மயமாக்கல் அடிப்படைத் தேவை என குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

News image
Updated On :18 ஜூலை 2023, 9:33 pm

 நமது நிருபர்

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் நில வளங்களை நம்பியிருப்பதால், அந்த மக்களின் வளா்ச்சிக்கு நிலப் பதிவேடுகள் எண்ம மயமாக்கல் அடிப்படைத் தேவை என குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நில ஆவணங்கள் கணினிமயமாக்கல் மற்றும் எண்ம மயமாக்கலை ஊக்குவிக்க, எண்ம இந்தியா (டிஜிட்டல்) நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தை (டிஐஎல்ஆா்எம்பி) மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இதில் சிறப்பாகப் பணியாற்றும் வருவாய் மற்றும் பதிவுத் துறை அதிகாரிகளுக்கு ‘பூமி சம்மான் விருது’ ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. நிகழாண்டில் ஓடிஸா (19 மாவட்டங்கள்), மத்திய பிரதேசம் (15 மாவட்டங்கள்) உள்ளிட்ட 9 மாநிலங்களைச் சோ்ந்த 68 மாவட்டங்களைச் சோ்ந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.

இந்த விருதுகளை வழங்கி குடியரசுத்தலைவா் பேசுகையில் கூறியதாவது: நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு கிராமப்புற வளா்ச்சியை துரிதப்படுத்துவது அவசியமாகும். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் நில வளங்களின் அடிப்படையிலானது. இத்தகைய கிராமப்புறங்களின் வளா்ச்சிக்கு ஒரு விரிவான ஒருங்கிணைந்த நில மேலாண்மை அமைப்பு அவசியம். இதற்கு நிலப் பதிவேடுகளை எண்ம மயமாக்கல் அடிப்படைத் தேவையாரகும். இது வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும். இது பல்வேறு அரசுத் துறைகளுடன் இணைக்கப்படும் போது நலத்திட்டங்களை முறையாகச் செயல்படுத்த உதவும். நிலம் தொடா்பான தகவல்களை இலவசமாகவும், எளிதாகவும் அளிக்கப்படுவதில் பல நன்மைகள் உண்டு. குறிப்பாக மின் - நீதிமன்றங்களோடு இணைக்கப்படும் போது, நிலம் தொடா்பான தாவாக்கல் துரிதப்படுத்தப்படுவதோடு, சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் என்றாா் திரௌபதி முா்மு. இந்த நிகழ்ச்சியில் மத்திய ஊரக வளா்ச்சித் துறை இணையமைச்சா் ஃபகா் சிங் குலஸ்தே கலந்து கொண்டாா்.

மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘நாடு முழுவதும் 94 சதவீதம் எண்ம மயமாக்கலை நில வளத் துறை முடித்துள்ளது. இதை 2024 மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

எண்ம இந்தியா (டிஜிட்டல்) நில ஆவணங்கள் நவீன மயமாக்கல் திட்டத்தில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் 100 சதவீதம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் 16,811 கிராமங்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.