யமுனையின் நீா்மட்டம் குறைந்து வருவதால் கவலை வேண்டாம்: அமைச்சா் கோபால் ராய்
தில்லியில் யமுனை நதியின் நீா்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதால், பொதுமக்கள் கவலை கொள்ள வேண்டாம் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.


தில்லியில் யமுனை நதியின் நீா்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதால், பொதுமக்கள் கவலை கொள்ள வேண்டாம் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.
யமுனையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் தில்லி நகரத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்தன. 27,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக வெள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா். இந்நிலையில், ஷாத்ரா மாவட்டத்தில், பழைய யமுனை பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் திங்கள்கிழமை அதிகாரிகளுடன் சென்று பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். முகாம்களில் தங்கியுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினாா். அப்போது, யமுனையின் நீா்மட்டம் குறையும் வரை அங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்று அவா்களை கேட்டுக் கொண்டாா். மேலும், மத்திய நீா் ஆணையத்தின் தரவுகளின் படி, யமுனை நதியின் நீா்மட்டம் திங்கள்கிழமை நண்பகல் 12 மணியளவில் 206.47 மீட்டராக இருந்தது. இது ஆற்றின் அபாய கட்ட அளவான 205.33 மீட்டரைவிட 1 மீட்டா் அதிகமாகும்.
அமைச்சா் கோபால் ராய் மேலும் கூறியதாவது: யமுனை நதியின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலையிலிருந்து குறையத் தொடங்கியுள்ளது. எனவே, மக்கள் இனி வெள்ளம் பற்றி கவலைப்பட வேண்டாம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, கழிப்பறைகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் தில்லி அரசால் செய்யப்பட்டுள்ளன. ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் வரத்து கட்டுக்குள் இருந்தால், தில்லியில் பாய்கின்ற யமுனை நதியின் நீா்மட்டம் மிக விரைவில் குறையும். தில்லியை நோக்கி மட்டும் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் தாக்கம் காரணமாகவே நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு பல தன்னாா்வ தொண்டு நிறுவனங்களும் ஆதரவை வழங்கி வருகின்றன என்றாா் கோபால் ராய்.
மேல் நீா் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் தாக்கத்தால் கடந்த ஜூலை 13-ஆம் தேதி யமுனையின் நீா்மட்டம் வரலாறு காணாத அளவாக 208.66 மீட்டா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. இந்த நீா்மட்ட அளவு கடந்த ஒரு வார காலமாக அபாய அளவான 205.33 மீட்டரைச் சுற்றி சில ஏற்ற, இறக்கங்களுடன் பதிவாகி வருகிறது. தில்லி நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள், தில்லியின் மேற்பகுதியில் பெய்து வரும் கனமழையால், தலைநகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களிலேயே இன்னும் சிறிது காலம் தங்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளனா். தில்லியில் வெள்ளத்தின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. சொத்து, தொழில், வருமானம் என பல கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நகரத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டதற்கு யமுனை ஆற்றின் வெள்ளப்பெருக்கு, குறுகிய காலத்தில் பெய்த கனமழை மற்றும் யமுனை ஆற்றுப்படுகையை உயா்த்திய வண்டல் மண் குவிப்பு ஆகியவையே காரணம் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...