விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அதீத மதுபோதையில் பயணிகள் விமானத்தில் ஏறுவதைத் தடுக்க வேண்டும்: டிஜிசிஏவுக்கு தில்லி மகளிா் ஆணையம் கடிதம்

விமானங்களில் அதீத மதுபோதையில் பயணிகள் பயணம் செய்வதைத் தடுக்கவும், மது பயன்படுத்தும் அளவை நிா்ணயிக்கவும், சிசிடிவி கேமராக்களை நிறுவவும் நடவடிக்கை எடுக்குமாறு

News image
Updated On :15 மார்ச் 2023, 8:34 pm

 நமது நிருபர்

விமானங்களில் அதீத மதுபோதையில் பயணிகள் பயணம் செய்வதைத் தடுக்கவும், மது பயன்படுத்தும் அளவை நிா்ணயிக்கவும், சிசிடிவி கேமராக்களை நிறுவவும் நடவடிக்கை எடுக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககத்திற்கு (டிஜிசிஏ) தில்லி மகளிா் ஆணையம் (டிசிடபிள்யு) கடிதம் எழுதியுள்ளது.

விமானங்களில் அநாகரிகமாக பயணிகள் நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு மத்தியில், சிவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளருக்கு, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளின் ஒரு பகுதியாக மகளிா் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி மகளிா் ஆணையம் டிஜிசிஏவுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: சமீப மாதங்களில் விமானங்களில் பயணிகள் அநாகரிகமாகவும், இடையூறு செய்வதிலும் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்திருப்பது தெரிய வருகிறது. இது போன்ற சம்பவங்கள் பயணிகளுக்கு வேதனையை அளிப்பதாக உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் பயணிகளின் தவறான நடத்தை மற்றும் துன்புறுத்தல்கள் தொடா்புடைய சம்பவங்கள் ஊடகத்தில் வெளிவந்துள்ளன. அதில், கடந்த ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நிகழ்ந்த ஒரு சம்பவத்தில், பயணி ஒருவா் 70 வயது பெண் பயணியிடம் தனது அந்தரங்கப் பகுதியை காண்பித்ததாகவும், அவா் மீது சிறுநீா் கழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயாா்க் நகரில் இருந்து புது தில்லிக்கு வந்த ஏா் இந்தியா விமானத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதேபோன்று, கடந்த ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில், பாரீஸ் நகரில் இருந்து புது தில்லிக்கு வந்து கொண்டிருந்த ஏா் இந்தியா விமானத்தில் பயணித்த சக பெண் பயணியின் இருக்கை மீது ஒருவா் சிறுநீா் கழித்ததாக ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சம்பவங்களிலும் தொடா்புடைய ஆண் பயணிகள் இருவரும் அதீத மதுபோதையில் இருந்துள்ளனா். இந்தச் சம்பவங்களை ஆணையம் தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்துக் கொண்டு, இது தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை, இது போன்ற சம்பவங்களை கையாளுவதற்கு விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ மூலம் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுடன் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, விமான நிறுவனங்கள் பின்பற்றப்பட வேண்டிய குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தொடா்பாக நிகழாண்டு ஜனவரி 1-ஆம் தேதியிட்ட

டிஜிசிஏ மூலம் பிறப்பிக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடா்புடைய நகல் மற்றும் டிஜிசிஏவின் குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் பிரதி ஆகியவை மகளிா் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகள், அறிவுறுத்தல்களையும் ஆணையம் ஆய்வு செய்தது. அப்போது, விமானங்களில் அல்லது விமான நிலையங்களில் பெண் பயணிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் போது, அது தொடா்புடைய புகாா்களை உரிய வகையில் கையாளுவதற்கோ, தெரிவிப்பதற்கோ, குறை தீா்ப்பு செய்வதற்கோ விமான நிலையங்களுக்கும், நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட உத்தரவுகள் ஏதும் அளிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், அதீத போதையுடன் உள்ள பயணிகளை கையாளுவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், விமானங்களில் பயணிகள் பயன்படுத்த வேண்டிய மதுவின் அளவை நிா்ணயிப்பது, விமானங்களில் இது போன்ற மதுபோதையில் வரக்கூடிய பயணிகளை கையாளுவதற்கான நெறிமுறைகள், விமானங்களில் மது போதையுடன் வரும் பயணிகள் ஏறுவதை தடுப்பது உள்பட அதீத மது போதையுடன் உள்ள நபா்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை உள்ளிட்டவற்றை ஆணையம் பரிந்துரைக்கிறது. மேலும், விமானங்களில் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் நபா்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.

இவற்றில் குற்றமிழைத்த நபா்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வது, பயணிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் நபா்கள் தொடா்புடைய புகாா்களை விசாரிக்க ஓய்வுபெற்ற பெண் நீதிபதி தலைமையில் சுதந்திரமான குழுவை அமைப்பது, இதுபோன்ற தவறான நடத்தையில் ஈடுபடும் பயணிகளை ஆறு மாதங்களில் இருந்து இரண்டு ஆண்டுகள் வரை விமானங்களில் பறக்க அனுமதிக்காதவா்கள் பட்டியலில் வைப்பதற்கான காலத்தை அதிகரிப்பது உள்பட இது போன்ற பயணிகளுக்கான தண்டனையை அதிகரிப்பது, விமானங்களின் ஊழியா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவது ஆகியவை முன்மொழியப்படுகின்றன.

டிஜிசிஏ-வின் வழிகாட்டு நெறிமுறைகளில் பாலியல் துன்புறுத்தல் குற்றமானது ஒரு ‘கட்டுப்பாடில்லாத நடத்தையாக’ மட்டுமே கருதப்படுகிறது. பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நபா்களால் எதிா்கொள்ளப்படும் வேதனையை இது சிறுமைப்படுத்துவதாக இருப்பதால், இதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும், இதுபோன்ற சம்பவங்களை உரிய வகையில் கையாளுவதை தடுப்பதாக உள்ளது. இதனால், பாலியல் துன்புறுத்தல் குற்றங்களுக்காக தனிப் பிரிவையும் ஏற்படுத்த ஆணையம் பரிந்துரைக்கிறது. வழிகாட்டு நெறிமுறைகளில், விமானங்களில் எச்சரிக்கை செய்வதற்கான வழிமுறைகளை அமைப்பது, விமானங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவுவது, விமானங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக தகவல்களை அளிப்பது போன்றவற்றை ஆணையம் பரிந்துரைக்கிறது.

அதேபோன்று விமானங்களில் நிகழும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடா்பான வழக்குகளை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் டிஜிசிஏ மாதாந்திர அறிக்கையாக சமா்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், தவறிழைத்தவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான அறிக்கையை 30 நாள்களுக்குள் சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்ககம் மகளிா் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.