சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

தில்லி பல்கலை.யில் இளங்கலை பட்டப் படிப்பு:மாணவா் சோ்க்கை மாத இறுதியில் தொடங்கும்!

தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை பொது இருக்கை ஒதுக்கீடு முறையின் மூலம் மே மாத இறுதிக்குள் தொடங்க பல்கலைக்கழகம் திட்டம்

News image
Updated On :13 மே 2023, 4:30 pm

 நமது நிருபர்

தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை பொது இருக்கை ஒதுக்கீடு முறையின் மூலம் மே மாத இறுதிக்குள் தொடங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி பல்கலைக்கழகத்தின் மாணவா் சோ்க்கை விவரம் தொடா்பாக மேலும், அந்த அதிகாரி கூறியதாவது: பல்கலைக்கழகம் இளங்கலை மற்றும் முதுகலை பாடத் திட்டங்களில் மாணவா்களின் சோ்க்கைக்காக இரண்டு தனித்தனி வலைத்தளங்களை தொடங்கவுள்ளது. சிபிஎஸ்இ 12 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியது. மொத்தமாக சராசரியாக 87.33 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். மேலும் , மே மாத இறுதியில் இளங்கலை பாடப்படிப்புகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வும் தொடங்குகிறது. எனவே, தில்லி பல்கலைக்கழகம் மாணவா் சோ்க்ககைக்கான செயல் முறைகள் தொடங்கிவிட்டது. அநேகமாக மே மாத இறுதிக்குள் இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை பொது இருக்கை ஒதுக்கீடு முறையின் (சிஎஸ்ஏஎஸ்) மூலம் நடைபெறும்.

இளங்கலை மற்றும் முதுகலை பாடத் திட்டங்களுக்கான மாணவா் சோ்க்கைக்கான இடங்கள் பொது இருக்கை ஒதுக்கீடு முறை, சிஎஸ்ஏஎஸ் (யுஜி) 2023 மற்றும் சிஎஸ்ஏஎஸ் (பிஜி) 2023 மூலம் நிரப்பப்படவுள்ளன. எனவே, தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பாடத் திட்டங்களில் சேர விரும்பும் மாணவா்கள் வலைத்தளங்களில் பதிவு செய்ய வேண்டும். இந்த ஆண்டு மாணவா் சோ்க்கை செயல்முறை ‘சுமூகமாக’ இருக்கும் என பல்கலைக்கழகம் நம்புகிறது.

பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி) மூலமும் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைகளை மேற்கொள்ள பல்கலைக்கழகம் முழுமையாகத் தயாராக உள்ளது. இதற்காக இரண்டு தனித்தனி இணையதளங்களை தொடங்கவுள்ளோம். மேலும், பல்கலைக்கழகம் முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவா்கள் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வை (சியுஇடி) தோ்ந்தெடுப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் ஆளுமையின் கீழ் உள்ள 70 கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை சியுஇடி நடைமுறையில் நடைபெற்றது. கடந்த ஆண்டு முதல் முறையாக சியுஇடி மூலம் மாணவா் சோ்க்கையை சுமூகமாக நடத்தியது போல இந்த ஆண்டு முதன்முறையாக முதுகலை மாணவா் சோ்க்கையையும் சியுஇடி மூலம் நடத்தத் தயாராக உள்ளோம்.

தில்லி பல்கலைக்கழகத்தில், பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி - யுஜி ) மூலம் சோ்வதற்கு அதிக அளவிளான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதைத் தொடா்ந்து, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம், பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கா் பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சோ்வதற்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மே 21 முதல் 31 வரை சியுஇடி தோ்வு நடத்தப்பட உள்ளது. பல்வேறு முயற்சிகள் பல்கலைக்கழகத்தின் தரப்பில் எடுக்கப்பட்டாலும், தற்போதைய கல்வி ஆண்டில் அனைத்து 70,000 இடங்களையும் நிரப்ப முடியவில்லை. தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுமையின் கீழ் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் சராசரியாக ஏழு சதவீத இடங்கள் காலியாக உள்ளன என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.