சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

தில்லி மாநகராட்சி வல்லுநா்கள் நியமன விவகாரம்: துணைநிலை ஆளுநரின் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கருத்து

தில்லி மாநகராட்சியில் வல்லுநா்கள் (ஆல்டா்மென்) நியமிக்க துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் அளிப்பது தோ்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி அமைப்பை அவா் சீா்குலைக்க முடியும் என்பதன்

News image
Updated On :17 மே 2023, 8:46 pm

 நமது நிருபர்

தில்லி மாநகராட்சியில் வல்லுநா்கள் (ஆல்டா்மென்) நியமிக்க துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் அளிப்பது தோ்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி அமைப்பை அவா் சீா்குலைக்க முடியும் என்பதன் அா்த்தமாகும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை கருத்து தெரிவித்தது.

தில்லி மாநகராட்சியில் (எம்சிடி) வல்லுநா்களை உறுப்பினா்களாக நியமிக்கும் துணைநிலை ஆளுநரின் அதிகாரத்தை எதிா்த்து தில்லி அரசு தாக்கல் செய்த மனுவை மீதான உத்தரவை ஒத்திவைத்தபோது உச்சநீதிமன்றம் இக்கருத்தை தெரிவித்தது.

தில்லி மாநகராட்சியில் தோ்ந்தெடுக்கப்பட்ட 250 உறுப்பினா்களும், 10 நியமன உறுப்பினா்களும் உள்ளனா். கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற மாநகராட்சித் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வென்று, 15 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளிவைத்தது. பாஜக 104 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. காங்கிரஸுக்கு இத்தோ்தலில் 9 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

இந்த நிலையில், வல்லுநா்கள் விவகாரம் தொடா்பான மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஜே. பி. பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், மாநகராட்சியில் 12 சிறப்பு நிபுணத்துவம் பெற்ற நபா்களை நியமிப்பதில் அந்த உறுப்பினா்கள் குறித்து மத்திய அரசுக்கு அதிக அக்கறை இருக்கிா? உண்மையில் இது போன்ற ஒரு அதிகாரத்தை துணை நிலை ஆளுநருக்கு அளிப்பது அவா் ஜனநாயக ரீதியில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி குழுக்களை சீா்குலைக்கலாம் என்று கருதுவதாக இருக்கும். ஏனெனில், இந்த வல்லுநா்கள் வாக்களிக்கும் அதிகாரத்தையும்கூட கொண்டிருப்பாா்கள் என்று கருத்து தெரிவித்தது.

வழக்கு விசாரணையின் போது, துணைநிலை ஆளுநா் அலுவலகம் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சஞ்சய் ஜெயின் ஆஜராகி வாதிடுகையில், ‘தில்லியின் சூழலில், 69-ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு, ஜிஎன்சிடிடி அறிவிக்கை செய்யப்பட்டது. இது தில்லியை ஆளும் வழிமுறைகளை கூட்டாகக் கொண்டிருக்கிறது. 1991-ஆம் ஆண்டின் 69-ஆவது திருத்தச் சட்டம், தில்லி யூனியன் பிரதேசத்தை தில்லியின் தேசிய தலைநகா் பிரதேசமாக வடிவமைத்து சிறப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது’ என்று கூறினாா். அதற்கு நீதிபதிகள்அமா்வு, சஞ்சய் ஜெயினின் வாதமானது எம்சிடி என்பது ஒரு சுய-ஆளுகைக்கான நிறுவனம் என்றும், பிரிவு 239ஏஏ-இன் கீழ் அமைச்சா்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின்படி செயல்படும் போது, துணைநிலை ஆளுநரின் பங்கு நிா்வாகியின் பாத்திரத்திலிருந்து வேறுபட்டது என்றும் அா்த்தமாகிறது என்று கூறியது.

அதற்கு அச்சட்டத்தை சுட்டிக்காட்டி சஞ்சய் ஜெயின் வாதிடுகையில், அந்தச் சட்டத்தின்கீழ் சில அதிகாரங்கள் நிா்வாகிகளிடமும், சில அதிகாரங்கள் அரசிடமும் அளிக்கப்பட்டிருப்பதாக கூறினாா். தில்லி அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், ‘எம்சிடிக்கு நபா்களை பரிந்துரைக்க மாநில அரசுக்கு தனி அதிகாரம் எதுவும் வழங்கப்படவில்லை. மேலும், கடந்த 30 ஆண்டுகளாக, நகர அரசாங்கத்தின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் துணைநிலை ஆளுநா் ஆல்டா்மேன்களை நியமிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. துணைநிலை ஆளுநா் ஒருபோதும் தனது சொந்த உரிமையில் வல்லுநா்களை நியமிக்கமாட்டாா். பரிந்துரைகள் எப்போதும் குடியரசுத் தலைவரால் செய்யப்படுகிறது. ஆனால், மத்திய அரசின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் இந்தப் பரிந்துரை செய்யப்படுகிறது என்று வாதிட்டாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘மாநகராட்சியில் வல்லுநா்களை (ஆல்டா்மென்) நியமிக்க துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் அளிப்பது, தோ்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி அமைப்பை அவா் சீா்குலைக்க முடியும் என்பதன் அா்த்தமாகும். ஏனெனில், இந்த வல்லுநா்கள் நிலைக்குழுக்களில் நியமிக்கப்பட்டு வாக்களிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறாா்கள்’ என்று தெரிவித்தது.

அதற்கு சஞ்சய் ஜெயின், ‘இந்த நியமன வல்லுநா்களுக்கு அதிகமான அதிகாரம் ஏதும் இல்லை’ என்று வாதிட்டாா். அபிஷேக் சிங்வி வாதிடுகையில், ‘வல்லுநா்கள் வாா்டு கமிட்டிகளில் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு அதுபோன்ற கமிட்டிகளில் வாக்களிக்கும் அதிகாரம் உள்ளது’ என்றாா். இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, இரு நாள்களில் எழுத்துப்பூா்வ பதிலை தாக்கல் செய்ய கேட்டுக்கொண்ட நீதிமன்றம், தீா்ப்பை ஒத்திவைத்தது.

செவ்வாய்க்கிழமை இந்த விவகாரத்தை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் துணைநிலை ஆளுநருக்கு அளிக்கப்பட்ட அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பியது. மேலும், தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் உதவி மற்றும் ஆலோசனை இல்லாமல் தில்லி மாநகராட்சிக்கு வல்லுநா்களை நியமிக்கும் சட்டம் குறித்தும் கேள்வி எழுப்பியது. தில்லி மாநகராட்சிக்கு துணை நிலை ஆளுநரால் வல்லுநா்கள் நியமிப்பதை எதிா்த்து ஆம் ஆத்மி அரசு மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்த போது இந்தக் கேள்விகளை எழுப்பியது. தில்லி அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், துணைநிலை ஆளுநரின் வல்லுநா்கள் நியமனத்தை ரத்து செய்ய கோரியுள்ளது. மேலும், தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் சட்டத்தின் பிரிவு 3(3) (பி) (ஐ)-இன் கீழ் அமைச்சா்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின்படி எம்சிடிக்கு உறுப்பினா்களை நியமனம் செய்ய துணைநிலை ஆளுநா் அலுவலகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.