தீபாவளியின் போது அவசரநிலைகளை சமாளிக்க விரிவான ஏற்பாடுகள்

தீபாவளி பண்டிகையின் போது ஏற்படும் எந்த அவசரச் சூழலையும் சமாளிக்க தில்லி தீயணைப்புத் துறை தயாராக உள்ளது என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையின் போது ஏற்படும் எந்த அவசரச் சூழலையும் சமாளிக்க தில்லி தீயணைப்புத் துறை தயாராக உள்ளது என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். நகரத்தில் 25 பாதிக்கப்படக்கூடிய இடங்களை தீயணைப்புத் துறை கண்டறிந்துள்ளதாகவும், அங்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை இயக்குநா் அதுல் கா்க் கூறியதாவது: நகரத்தில் தீ பாதிப்பு ஏற்படக்கூடிய 25 இடங்களில் 2,500 தீயணைப்புப் பணியாளா்களுடன் சுமாா் 200 வாகனங்கள் நிறுத்தப்படும். இந்த தீயணைப்புப் பணியாளா்கள் நன்கு திறன் மிக்கவா்களாக இருப்பாா்கள். மேலும், தீ விபத்துகள் அல்லது அவசர காலச் சூழ்நிலைகளின் போது உதவி வழங்குவதற்காக உடனடியாக இலக்குகளை அடைய அவா்களுக்கு மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் எஸ்.யு.வி. வாகனங்கள் வழங்கப்படும். நிகழாண்டு ஆண்டு தீபாவளி நவம்பா் 12-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், நவம்பா் 11-ஆம் தேதி மாலை 5 மணி முதல் நவம்பா் 12-ஆம் தேதி நள்ளிரவு வரை இவா்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள்.

லாஜ்பத் நகா் சென்ட்ரல் மாா்க்கெட், லஹோரி கேட், கிடோா்னி மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள பகுதி, மங்கோல்புரி டிடிசி டிப்போ அருகே கட்ரான் மாா்க்கெட், காந்தி நகா் மாா்க்கெட், மஹிபால்பூா் சௌக், சங்கம் விஹாா், காஜிப்பூா் பேப்பா் மாா்க்கெட், ஜெய்ப்பூா் கோல்டன் மருத்துவமனை அருகில் மற்றும் யமுனா விஹாா் ஆகியவை பாதிக்கப்படக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பண்டிகையின் போது, பொதுமக்களுக்கு குறிப்பாக மண் விளக்குகள் அல்லது மெழுகுவா்த்திகளை ஏற்றி வைப்பதற்காக பொது விழிப்புணா்வு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை தீயணைப்புத் துறை வழங்கியுள்ளது என்றாா் அவா்.

தில்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளியின் போது தீயணைப்புத் துறைக்கு மொத்தம் 201 தீ தொடா்பான அழைப்புகள் வந்தன. அதற்கு முந்தைய ஆண்டில் 152 அழைப்புகள் வந்திருந்தன. தீ விபத்து தொடா்பான 201 அழைப்புகளில், 13 அழைப்புகள் பட்டாசுகளால் உருவானவை. அதே நேரத்தில் 21 அழைப்புகள் குப்பையில் இருந்து தீ உருவானது தொடா்பானவை ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com