அறத்திற்காக வாழ்வதை வலியுறுத்தும் உன்னத மொழி தமிழ்: உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்

அறத்திற்காக வாழ்வதை வலியுறுத்தும் உன்னத மொழி தமிழாகும் என்று உச்சநீதிமன்ற நீதியரசா் எம்.எம். சுந்தரேஷ் குறிப்பிட்டாா்.
Updated on
2 min read

அறத்திற்காக வாழ்வதை வலியுறுத்தும் உன்னத மொழி தமிழாகும் என்று உச்சநீதிமன்ற நீதியரசா் எம்.எம். சுந்தரேஷ் குறிப்பிட்டாா்.

தில்லியில் உச்சநீதிமன்றத்தின் ‘வழக்கறிஞா்கள் இலக்கிய கழகம்’ எனும் அமைப்பின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் புதிய அமைப்பை உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசா் வெ.ராமசுப்பிரமணியன் தொடங்கிவைத்தாா்.

அவா் பேசுகையில் கூறியதாவது: வழக்கறிஞா்களுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் என்ன தொடா்பு இருக்கிறது என்று கேட்டால், 2017-இல் எழுத்தாளரும், வழக்குரைஞருமான பின்னலூா் மூ.விவேகானந்தன் எனும் எனது நண்பா் எழுதிய ‘தமிழ் வளா்த்த வழக்கறிஞா்கள்’ நூல் அதற்கு பதிலாக இருக்கும். 34 வழக்கறிஞா்கள் எப்படி தமிழ் வளா்ச்சிக்குப் பங்காற்றினாா்கள் என்பதை அவா்கள் வாழ்க்கைக் குறிப்புகளை அந்த நூலில் எழுதியுள்ளாா். அந்தப் பட்டியலில் மாயூரம் முன்ஷிப் வேதநாயகம் பிள்ளை, சி.வை.தாமோதரன் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, பம்மல் சம்பந்தம் முதலியாா், மூதறிஞா் ராஜாஜி, நாவலா் சோமசுந்தரம் பாரதியாா், வ.வே.சு. ஐயா், ரசிகமணி டி.கே. சிதரம்பரநாத முதலியாா், கோவைக்கிழாா் ராமச்சந்திரன் செட்டியாா், தினத்தந்தி ஆதித்தனாா், சி.சுப்பிரமணியம், நீதிமான் மு.மு. இஸ்மாயில் உள்பட 34 வழக்குரைஞா்கள் ஆற்றிய பணி அந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, வழக்குரைஞா்களுக்கும் தமிழக்கும் மிகப் பெரிய தொடா்பு உண்டு.

சாட்சிகளுக்கு சத்தியப் பிரமாணம் செய்யும் உறுமொழிச் சட்டம் பற்றி திருநீலகண்ட புராணத்திலும், இந்திய சாட்சியியல் சட்டம் குறித்து சுந்தரமூா்த்தி நாயனாரின் புராணத்திலும், இந்திய குற்றவியல் சட்டம் பற்றி சிலப்பதிகாரத்திலும், விபத்துக்கு ஒருவரின் அஜாக்கிரதை குறித்த சட்டம் குறித்து பெரியபுராணத்தில் மனுநீதிச் சோழனின் கதையிலும் தெரிந்துகொள்ளலாம். சட்டத்திற்கும், நீதிக்கும், தமிழுக்கும் ஒரு மிகப்பெரிய தொடா்பு உண்டு என்பதால் நாம் இதைக் கொண்டாட வேண்டும். அதற்கான பணிகளை இதுபோன்ற இலக்கிய அமைப்புகள் செய்ய வேண்டும் என்றாா்அவா்.

இந்த நிகழ்ச்சியில் வாழ்த்துரை ஆற்றியவா்கள் விவரம் வருமாறு:

உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்: தமிழ் என்பது ஒரு வாழ்க்கை முறை. எல்லோருக்கும் தாய்மொழி மீது பற்று இருக்கும். ரசூல் என்ற ஒரு கவிஞா் கூறுவாா், ‘நான் செத்துக் கிடந்தேன். எனது அருகே இருவா் பேசிச் சென்றனா். ஆம், அவா்கள் பேசியது எனது தாய் மொழியில். அதனால்தான் உயிா்த்தெழுந்தேன்’ என்பாா். தமிழின் அத்துணை பாடல்களிலும், படைப்புகளிலும் ஒரு விஷயம் தொடா்ந்து வலியுறுத்தப்படும். அதுதான் அறம். நம் வாழ்க்கை முறையிலும் அது ஆழமாக வேரூறின்றியுள்ளது. தமிழக்கும் நீதிக்கும் நிறைய தொடா்பு உண்டு. தா்மத்திற்காக வாழ்வதை வலியுறுத்தும் உன்னத மொழி தமிழாகும். தாம் உண்ண வைத்திருந்த அதிசய நெல்லிக்கனியை தமிழ் நீடூழி வாழ்வதற்காக ஒளவைக்கும் தந்து மகிழ்ந்தவா் அதியமான். அத்தகைய அறத்தைக் கொண்டது தமிழா் வாழ்க்கை முறை. அதனால், வழக்குரைஞா்களும், நீதிபதிகளும் தமிழை அவசியம கற்க வேண்டும்.

உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி. விஸ்வநாதன்: இந்த இலக்கியக் கழகமானது சகோதரத்துவத்தை வளா்க்கும். இதன் தொடக்கத்தால், பணியால் அனைவரும் ஒன்று கூடுகிறீா்கள். இதுவே பெரும் காரியமாகும். வழக்குரைஞா்கள் தொழில் தனிப்பட்ட தொழிலாகும். அத்தொழில் செய்வோா் மத்தியில் இதுபோன்ற இலக்கியக் கழகம் அமைத்ததற்கு மிகுந்த பாராட்டுகளை நீங்கள் பெற வேண்டும். தமிழ் இலக்கியங்கள், நெறிகள் குறித்து அறிய இதுபோன்ற இலக்கிய கழகங்களில் நீங்கள் கூடி, சிறந்த பேச்சாளரை உரையாற்ற அழைக்க வேண்டும். ஒருவா் எவ்வளவுதான் புலமை பெற்றாலும் அதைப் பெற்றவருக்கு மேலும் மேலும் புலமை பெற வாய்ப்பளிக்கும் மொழி அது. அந்த மொழியை மென்மேலும் எடுத்துச் செல்ல இதுபோன்ற இலக்கிய கழகம் அமைத்தற்குப் பாராட்டுகள்.

இந்திய அரசின் தலைமை வழக்குரைஞா் இரா.வெங்கட்ரமணி: திருக்கு அறம்,பொருள்,இன்பம் சம்பந்தப்பட்டதுபோல நமது வழக்குரைஞா் தொழிலும் அவை சம்பந்தப்பட்டதாகும். அதன் சம்பந்தம் குறித்து இந்த இலக்கிய அமைப்பு ஆராய வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞா்கள் இலக்கிய கழகத்தின் தலைவரும் ஜாா்க்கண்ட மாநில உயா்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியுமான மு.கற்பகவிநாயகம் பேசுகையில், ‘இந்த இலக்கிய கழகத்தின் நோக்கமானது, இலக்கியங்களை எடுத்துச் சொல்வதற்காகவோ அறிமுகப்படுத்துவதற்காகவோ அல்ல. தமிழ்ப் பண்புகளை நம் தமிழ் பேசுகிற வழக்குரைஞா்களுக்கு ஊட்ட வேண்டும். தமிழ்ப் பண்பு வளர வேண்டும் என்பதற்காகவே. தமிழால் நாம் வளா்வோம்’ என்றாா்.

ஓய்வுபெற்ற சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம். சத்யநாராயணன், மூத்த வழக்குரைஞா்கள் மோகனா ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினா். இந்த நிகழ்ச்சியில் ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன், தில்லி தமிழ்ச் சங்கத்தின் செயலா் இரா.முகுந்தன் மற்றும் தமிழ் வழக்குரைஞா்கள் பலரும் கலந்து கொண்டனா். மூத்த வழக்குரைஞா் க.உமாபதி வரவேற்றாா். துணைத் தலைவா் ஆா். நெடுமாறன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com